Search This Blog

Sep 6, 2011

சிவவாக்கியம் (041-045) - சித்தர் சிவவாக்கியர்.

சித்தர் சிவ வாக்கியர் 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 041 
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்பு சொல் வேதமெனப் படக் கடவதோ 
வாயில் எச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே

மற்றவர் வாய் வைத்த நீரை எச்சில் என்று சொல்லி கீழே கொட்டுகின்றீர்களே! உங்கள் வாயால் எச்சிலோடு கலந்து சொல்லும் வார்த்தைகளை மட்டும் வேதம் என்கின்றீர்கள் வாயில் உள்ள எச்சில் போக அவ்வாயினால்தான் நீரைக் குடிக்கின்றீர்கள். வாயில் உள்ள எச்சிலும் நீர்தான். ஆதலால் வாயில் உள்ள எச்சில் எவ்வாறு எவ்வண்ணம் போனது என்பதை எனக்கு வந்திருந்து சொல்லுங்கள்.
*********************************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 042 
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் 
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.

வாயினால் ஓதுகின்ற வேதம், மந்திரங்களாக உள்ளவை, உண்ணும் உணவு, ஏழு உலகங்கள், பெண்களிடம் விட்ட விந்து, அறிவு, சப்தங்கள் யாவுமே எச்சில்தான், ஆகவே அனைத்திலும் நீராகிய எச்சிலால் ஆனது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீரில்லாமல் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
*******************************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 043
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாற தெங்கனே
குறித்துநீர் சொல்லாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்.

பிறப்பதற்கு முன்பு நாம் எங்கிருந்தோம், பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தபின் எங்கே போய் இருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள். .இப்பிறவியின்மேன்மையை உணராமல் எந்த இலட்சியமும் இல்லாமல் மறைந்து போகும் மானிடர்களே! உங்கள் பிறவியை அறுக்கவும், மீண்டும் பிறவாமல் இருக்கவும் அஞ்செழுத்து என்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உங்கள் காதுகளில் ஓதுகின்றேன்.
***********************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 044
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கேன்றால் அசையுமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ
செம்பொன் அம்பலத்துலே தெளிந்த்ததே சிவாயமே.

அம்பலமாய் இருக்கின்ற ஆகாயத்தை அம்பைவிட்டு அசை என்றால் அசையுமா? கலங்கம் இல்லாத திருப்பாற்கடலை கலங்க முயன்றால் கலங்குமா? அதுபோல் உலக இன்பங்களைத் துறந்து செவ்வனே யோக, தியானம் பயின்று வந்த யோகிகளிடம் துன்பமாகிய இருள் கிட்டே அணுகுமா? செம்மையான பொன்னம்பலத்தில் சோதியாக விளங்கும் சிவனை அறிந்து தெளிந்து "சிவாய நம" என தியானம் செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 045
சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்தி ஏது சம்பு ஏது சாதி ஏது பேதம் அற்ற தேது
முத்து ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது
வித்தில்லாத விதத்திலே இன்னதென்று இயம்புமே.

சித்தரென்றும் அவதாரமென்றும் சொல்லித் திரியும் ஞானிகளே! சித்தம் என்று சொல்லுமிடம் ஏது? சிந்தனை எங்கு தோன்றுகிறது? சீவனாகிய உயிர் எங்குள்ளது? சத்தியாகிய வாலை இருப்பிடம் எது? சம்பு எனப்படும் ஈசன் உலாவும் இடம் எது? சாதி பேதம் இல்லாதது எது? முத்தியை அழிப்பது எது? உடம்புயிருக்கு மூலம் எது? மூல மந்திரமான ஒரேழுத்து எது என்பதையெல்லாம் அறிவீர்களா? வித்தே இல்லாமல் வித்தாக என்றும் நித்தியமாய் விளங்கும் உளதாய், இலதாய் உள்ள பொருளை இதுதான் அது என்று விளக்கமாக இயம்புங்கள் 
*****************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்..அன்புடன் கே எம் தர்மா.....
.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!