Search This Blog

Sep 2, 2011

சிவவாக்கியம் (036-040) - சித்தர் சிவவாக்கியர்.

சித்தர் சிவ வாக்கியர் 

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -036
செங்கலும் கருங்கலும் சிவதசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பாதம் அறிந்து நீர் உம்மை நீய் அறிந்தபின்
அம்பலம் நிரந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே!
செங்கற்களாலும், கருங்கற்களாலும், சிகப்பு நிறம் பொருந்திய சாதி லிங்கத்திலும், செம்பினாலும், தராவினாலும் செய்யப்பட்ட சிலைகளிலும் சிவன் இருக்கிறான் என்கின்றீர்களே! உம்மிடம் சிவன் இருப்பதை அறிவீர்களா? உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தையும் அதனால் அடையும் நாதலயமும் கிடைத்து இன்புறலாம்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -037
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமோ
கால நேரம் தவறாமல் பூசை செயம் பக்தர்காள், பூசை என்றால் என்ன என்பதை அறிவீர்களா?  "பூ" என்பது நமது ஆன்மா. "சை" என்பது அசையாமல் நிறுத்துவது. இதுவே உண்மையான பூசையாகும். இந்த பூசையை நமக்குள்ளேதான் செய்ய வேண்டும். ஆன்மாவான பூவை அது எந்த இடத்தில் இருக்கிறதோ அன்க்கேயே நினைத்து நினைத்து நிறுத்தி அசையாமல் இருத்துவதே பூசை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை யோக தியானத்தால்தான் நமக்குள்ளே செய்ய வேண்டும். இதை விட்டு நீங்கள் செய்கின்ற பூசைகள் யாவும் புறச்சடங்குகளே. ஆதியான சக்தியோ அநாதியான சிவனோ இந்த பூசையை ஏற்றுக் கொண்டார்களா? ஆதலால் அப்பூசை செய்து தியானியுங்கள். அதனை ஆதியாகவும் அனாதியாகவும் நம் உயிரில் உறையும் சிவனும், சக்தியும் ஏற்றுக் கொள்வார்கள். 
*************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 038 -
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கும் நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்கள் யாவையும் மனப்பாடம் செய்து நன்கு ஒதுவதினாலோ, உடம்பு முழுமையும் நிறைத்து பதினாறு பட்டைகள் போட்டு விபூதி பூசுவதினாலேயோ,  'சிவசிவ' என வெறும் வாயால் பிதற்றுவதினாலோ எம்பிரானாகிய சிவன் இருப்பதில்லை. நமக்குள்ளேயே உள்ள சிவனை அறிந்து நெஞ்சுருகி கண்ணில் நீர் மல்கி கசிந்து நினைந்து தியானிக்க வேண்டும். அந்த உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டு தியானம் தொடர்ந்து செய்தால் சர்க்கம் இல்லாத சோதியான அப்பரம் பொருளோடு கூடி வாழ்வோம். 
**********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -039
கலத்தில் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாசை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ.
வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால், அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததா? கடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததா? அணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.
******************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -040

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே
பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா? அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா  இருக்கிறதுபெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.
************************************************************************** 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சிவவாக்கியத்தினை தொடர்ந்து..அன்புடன் கே எம் தர்மா..  
 
 

5 comments:

  1. Happy to see that the site is active & effective with siddhanandham. The above is the propritary material of my Guru Siddhar Narayanasamy (0091 9360780437), who has written this based on the command & voice of Sivavakiyar.

    His wish is to spread the real meaning to the world and you are doing it. Thanks
    Sundar

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நண்பரே, சுந்தர் அவர்களே!!!
    சித்தர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் புத்தகங்களைத் தேடிய பொழுது திரு பாட்டுச் சித்தர் ஓம்சக்தி நாராயணன் அவர்களின் சித்தர் சிவவாக்கியர் மற்றும் திருமழிசை ஆழ்வார் பற்றிய ஒரு பதிவு கிடைக்கப் பெற்றது.பலமுறை அப்பதிவினை படித்ததில் அன்னாரின் மன ஆதங்கம் புரியவந்தது. சிவ தொண்டு சிறிதேனும் செய்ய எண்ணியிருந்த எனக்கு, அவரை எனது மானசீக குருவாக மனதில் கொண்டு சித்தர்கள் வரலாற்றில் இருந்து மறைத்து வைக்கப் பட்ட சிவவாக்கியரின் வாழ்க்கை சரிதத்தையும், சிந்தனைப் பாடல்களையும் எனது வலைப்பூவில் பதிவேற்றி முகநூலில் பகிர்ந்து எனது நட்புகளும் ஏனையோரும் கண்டு படித்து, சிவவாக்கியரின் பெருமைதனை உணரவேண்டி இதனை மீள்பதிவு செய்து வருகின்றேன். ராமருக்கு சிறு அணில் கடற்பாலம் கட்ட தன்னால் ஆன சேவையை செய்தது போல இதனை நான் சிவதொண்டாக எடுத்துச் செய்கின்றேன். சிவவாக்கியர் பற்றி மேலும் பல வலைதளங்களில் தேடி பாடல்களை இனிய சந்தந்தத்தில் கேட்கும் வண்ணம் சுட்டியையும் இணைத்து வெளியிட்டுள்ளேன். தங்களின் பின்னூட்டக் கருத்தினுக்கு மிக்க வந்தனம் நண்பரே!!

    ReplyDelete
  4. NAMASIVAYA

    Kindly meet him, he is down the level person. If God accepts, you will be given Deekshai. Later you can get Vasiyogam also. ( Nobody knows VASI Yogam, as it is directly presented to him by Lord Iyappan) His other book DASA DEEKSHAI is a masterpiece and nobody has given indepth meaning of knowledge. His book KORAKKAR is also a EYE opener to many. his new release Vasiyogam will help many. within 4 months, you can read the 1000 songs of KAGABUGANDAR, with REAL meaning.

    Wishes

    Sundar

    ReplyDelete
  5. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் சுந்தர் அவர்களே!!!
    நிச்சயமாக தங்களின் தகவல் எனது தேடல்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி !!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!