Search This Blog

Sep 1, 2011

சிவவாக்கியம் (031-035) - சித்தர் சிவவாக்கியர்.

சித்தர் சிவ வாக்கியர் 
சிவவாக்கியம்-031
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமொடு  நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின்
நெருப்பும்  நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சர்க்கம்  அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே!

நாள்தோறும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு நெருப்பை மூட்டி அதில் நெய்யை வார்த்து வேதங்களை ஓதும் வேதியர்! அந்த வேதங்கள் சொல்கின்ற மெய்பொருளை உணருங்கள். சிகாரமாக அதை "சிவயநம" என்ற பஞ்சாட்சரத்தால் நினைத்து கூறி வந்து தியானிப்பவர்களானால் அம்மெய்ப் பொருள் சுருக்கமே அற்ற சக்தியாக இருப்பதை உணருங்கள். இதனை முறையாக தொடர்ந்து செய்து வந்தால் சோதி நிலைத்து ஈசன் அருள் பெற்று அவனோடு சேர்ந்து வாழலாம். 
******************************************************
சிவவாக்கியம்  -032
பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை 
நாட்டில்லாத நாதனை நாரிபங்கன் பாகனை 
கூட்டிமெல்ல வாய் புதைத்து குணுகுனுத்த மந்திரம் 
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே.
பாட்டுக்கள் யாவும் பரமனையே பாடுகிறது. எல்லா லோகங்களுக்கும் அவனே நாதன். எல்லா நாடும் அவன் நாடே. மௌனமாக விளங்கும் பரம்பொருளே நாதமாகவும், விந்தாகவும் விளங்குகின்றது. நாரணன் தங்கையான சக்திக்கு தன் இடப்பாகம் தந்த சிவனை தம உடம்பிலேயே இருப்பதை அறிந்து கொண்டு வாய் மூடி மௌனமாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரமே 'ஓம் நமசிவய' அவனை எண்ணி தியானம் செய்ய வாசி யோகம் தெரிய வேண்டும். அது இரவில் வேட்டைக்கு செல்லும் வேட்டைக்காரர்கள் மற்றவர்களிடம் பேசி தெரிவிக்க குசு குசு வென்று கூப்பிடுவார். இந்த இரகசிய பாஷையை அறிந்துகொண்டு அதன்படி வாசியோகபயிற்சி செய்துவந்தால் இப்பிறவிப் பிணி முடிய அதுவாகிய ஈசன் திருவடி கிட்டும். 
***************************************************
சிவவாக்கியம்-033
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் 
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன் 
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின் 
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே!
தென்னை மரத்தின் மேலே காய்க்கும் தேங்காயின் உள்ளே இளநீர் எப்படி சேர்ந்துள்ளதோ, அது போலவே ஈசன் எனது உள்ளத்தில் புகுந்து கோயில் கொண்டு இருக்கின்றான். என் உள்ளம் என்பதையும் அதிலே என் ஐயன் புகுந்து கோயில் கொண்ட இடம் எது என்பதையும் தெரிந்து கொண்டபின் இவ்வுலகத்தில் உள்ள ஆசைவயப்பட்ட மாந்தர்கள் முன்னம் வாய் திறந்து பேசா மௌனியானேன்.
*********************************************
சிவவாக்கியம்- 034
மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டு 
போய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே 
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் 
கூறுபட தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்தே.
செம்பு, பித்தளை, வெண்கலம் போன்றவைகளின் கலப்பினால் மாறுபட்டு செய்த ஓசை மணியை ஒலித்து, வண்டின் எச்சிலாகிய தேனைக் கொண்டு உளியினால் பற்பல வகைகளில் உடைத்து செதுக்கப்பட்ட கற்சிலையின் மீது ஊற்றி அபிஷேகம் செய்து அதன் உட்பொருளை அறியாத மூடர்களே! மெய்ப்பொருளாகிய ஈசன் நம்மிடமே மாறுபட்ட அண்டக்கல்லாக இருப்பதை அறிந்து அதிலேயே அபிஷேகம் செய்து அதனையே நோக்கி தியானிக்கவும், செய்த பாவங்கள் யாவையும் கூறுபட்டு தீர்க்கவும் மெய்குருவின் திருவடிகளை சிந்தையில் வைத்து தவம் செய்யுங்கள். 
****************************************************
சிவவாக்கியம்-035
கோயிலாவது ஏதடா குழந்கலாவது ஏதடா 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே .
கோயில் என்பது என்ன? குளங்கள் ஆவது எது?என்பதை அறியாமல் புறத்தில் அமைந்துள்ள கோயில்களையும், குளங்களிலும் தீர்த்தமாடி வணங்கிவரும் எம்குலமக்களே ! நமது உடம்பினுள் கோயிலாகவும், குலமாகவும் மனமே அமைந்துள்ளது. அம்மனதை நிலைநிறுத்தி தியானித்தால் ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். அவ்வான்மா என்றும் நித்தியமாக உள்ளது என்பதையும் அது உற்பனம் ஆவதும் இல்லை உடம்பைப் போல் அழிவதும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
***********************************************     
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சிவவாக்கியத்தினை தொடர்ந்து..அன்புடன் கே எம் தர்மா..  

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!