Search This Blog

Sep 1, 2011

பிள்ளையாருக்கு 21 பெயர்கள்



பிள்ளையாருக்கு 21 பெயர்கள்
எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்:  உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:  ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.  

சிந்தாமணி: சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்: வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்: மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்:   வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன். 

லம்போதரன்: உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். 

கஜானனன்: ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்யானைமுகன்.

ஹேரம்பன்:  ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்: பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்: ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி: உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்: எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:  வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்: மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்: பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி - புத்தி பதி: சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:  இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்: அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர். 

சர்வ பூஜ்யர்: எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்: தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்.
வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். 

விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான். 

இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார். 

அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.   அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். 

அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். 

அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல்மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜாமாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.

விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும். 

அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். 

பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். 

அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். 

உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக் கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.) 

பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். 

பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள். 

இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம். வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந் தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. 

இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம். 

இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
மேலும் பயணிப்போம் அன்புடன். கே எம் தர்மா......

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!