Search This Blog

Jul 29, 2011

கீதையில் முக்திக்கு ஐந்து படிகள் - ஸ்ரீராமகிருஷ்ணர் பார்வையில்


கீதையில் முக்திக்கு ஐந்து படிகள் காட்டபட்டிருப்பதாக கருதலாம், அவை: 

பிரம்மார்ப்பணம், பிரம்மா யோகம், பிரம்மஸசம் ஸ்பரிசம், பிராஹ்மீ
ஸ்திதி, பிரம்ம நிர்வாணம். 
 

 1) பிரம்மார்ப்பணம்:
"எதை செய்கிறாயோ, எதை உண்கின்றாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானம் செய்கிறாயோ,எந்த தவம் செய்கிறாயோ அதை எனக்கு அர்ப்பணம் செய். இதனால், புண்ணிய பாவ வடிவமான கட்டுக்களிலிருந்து விடுபடுவாய்" (கீதை: 9.27-28).
நாம் செய்யும் காரியங்களை எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாக செய்வது பிரம்மார்ப்பணம், என்கிறார் பகவான். நாம் அவசியம் செய்ய வேண்டிய கர்மங்களை பரமகுருவான பகவானுக்குச் சமர்ப்பிப்பதே அவரது ஆராதனம். அதற்காக வேறு ஒன்றும் தனியாகச் செய்ய வேண்டிய தில்லை. நாம் செய்வதை பகவானுக்கு அர்ப்பணம் செய்வதாக எண்ணம் இருந்தால்நாளடைவில் நம் மூலமாக பகவானே அனைத்துயும் செய்வித்துக் கொள்கிறான் என்ற ஞானம் உதிக்கும்.

"நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிடேழுதோம், மலரிட்டு நாம் முடியோம், எனது ஆண்டாள் கூறும்போது, 'நெய்யும், பாலும் அவனுக்க அர்ப்பித்த பின்பே உண்போம். கண்ணுக்கு மையும், கூந்தலுக்கு மலர் முடிவதும் அவனை ஆராதித்த பிறகுதான். இதுவே உய்யும் வழி' என்றாள் ஆண்டாள்.

'எவன் பக்தியுடன் ஒரு பச்சிலையோ, புஷ்பமோ, தீர்த்தமோ அர்ப்பிக்கிறானோ தூய்மையான அந்த கரணம் உடைய அவனது பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட அந்தப் பொருளை நான் ஏற்கிறேன்' .
(கீதை 9.25),  என்கிறார் பகவான். 

குசேலர் பக்தியுடன் தந்த அவல், திரௌபதை அளித்த கீரை, கஜேந்திரன் துதிக்கையால் எடுத்து அளித்த புஷ்பம், சபரி அளித்த பழம், ரன்திதேவர் அளித்த தீர்த்தம் போன்ற பக்தியுடன் வழங்கப்பட்ட எளிய பொருள்களை இறைவன் ஏற்பான். ஒரு சிறு கம்பியேனும் பற்ற கிடைத்தால், மின்சார சக்தி அதன் வழியாக எளிதில் பாய்ந்து செல்வது போல பகவத் கிருபையும் சிறு அர்ப்பணப் பொருள் வழியே நம்மிடம் பாய்கிறது.

பகவான் நம்மிடமிருத்து பெரிதாக எந்த கஷ்டமான காரியத்தையும் எதிர் பார்ப்பதில்லை. ஆகை யால் உடலாலோ, மனதாலோ, வாக்காலோ, கர்ம இந்திரியங்களாலோ, ஞான இந்த்ரியங்க
ளாலோ, இயற்கை வசப்பட்டு ஸ்வபாவத்தாலோ, எது எதைச் செய்கிறோமோ அது எல்லாவற்றையும் அவனுக்கே என அற்பணிப்போம். இது முக்கியமான முதல் படி பிரம்மார்ப்பணம்.

2 ) பிரம்மயோகம்:

'வெளிப் பொருள்களின் உணர்ச்சியில் பற்றில்லாத அந்தக்கரணம் உடையவனாய் ஆத்மாவிநிடத்தில் உள்ள அளவற்ற சுகத்தை எப்போது அடைகிறானோ அப்போது பிரம்மயோகம் கூடியவான்கிறான்'. (கீதை 5 .21)

  

'எந்த இன்பங்கள் வெளிப் பொருள்களின் ஸ்பரிசத்தால் உண்டானவையோ, அவை எல்லாம் துன்பத்திற்கு பிறப்பிடம் ஆகின்றன. அறிவாளி அவற்றில் இன்பங்களைக் காண மாட்டான்'. (கீதை 6. 22).   

'எவன் வாக்கின் வேகத்தையும், மனதின் கோப வேகத்தையும், பசியின் வேகத்தையும், இந்திரிய வேகத்தையும் அடக்கி மனதை ஆத்மாவில் வைத்தவனோ அவனே  யோகி. சுத்தமான இடத்தில் ஆசையாததும், அதிக உயவில்லாதது, அதிக தாழ்வில்லாததுமான, தர்ப்பையின் மேல் மான் தோலும், வஸ்த்ரமும் விரிக்கப் பெற்ற ஆசனத்தில் அமர்ந்து மனதை ஒருமுனைப் படுத்தி, மனம் மற்றும் இந்திரியங்களின் செயல்களையும் அடக்கியவன் சித்த சுத்திக்காக யோக நிலை பழக வேண்டும்'. (கீதை 6.11- 12 ).
ஊசியில் நூலைக் கோர்ப்பதற்கு நூல் முனையைக் கூராக்கி நீட்டிக் கொண்டிருக்கும் பஞ்சுத் துணிகளை எடுக்கவேண்டும். பிறகு ஊசியின் காது வழியாக நூல் எளிதாகப் போகும். அது போன்றதே பகவானிடம் மனதை செலுத்துதலும் ஆகும்.

'மிதமான உணவும், உலாவுதலும் உடையவனுக்கும், கர்மங்களில் மிதமான உழைப்பு உடையவனுக்கும், மிதமான உறக்கமும், விழிப்பும் உடையவனுக்கும் யோகம் துன்பம் துடைப்பதாக ஆகிறது.
(கீதை 6.17 ).    
எவ்வாறு காற்றில்லாத இடத்திலுள்ள விளக்குச் சுடர் அசைவதில்லையோ, அவ்வாறு சித்தம் யோகத்தால் அசைவற்றிருக்கும். மெல்ல மெல்ல அமைதியை எய்தியபின் எறேதனையும் எண்ணக் கூடாது.


"உன்னும் மனம் கற்பூர உண்டை போலே கரைய...
மின்னும் ஆனந்த விளக்கே பராபரமே".

.என்கிறார் தாயுமானவர்.
ஒன்றையும் நினையாமல் இருந்தால் உள்ளொளி எல்லாவற்றையும் விளங்க வைக்கும். பிரக்ருதியின் லீலைகளைக் காணும் வரை ஆன்ம ஒளி விளங்காது. அகங்கார, மமகார உடைகளையும் களைந்து தான்-தானாகி நிற்கும் நிலையே ஆத்மானந்தமாகும். இது இரண்டாம் படி...இதுவே பிரம்மயோகம்.

3) பிரம்ம ம்ஸ்பர்சம்:
இவ்வாறு தன்னை ஒருமுகப் படுத்தி பாவம் தோய்ந்த யோகியானவன் எளிதில் பிரம்ம
ம்ஸ்பர்ம் அல்லது பிரம்மத்துடன் ஒன்றியத்தால் உண்டாகும் எல்லையில்லாத ஆனந்தத்தை அனுபவிக்கிறான். இந்நிலையில் பிரம்மம் படிப்பும், கேள்வியுமாய் மட்டுமின்றி இருட்டறையில் காணாத ஒன்றைத் தேடுவதுபோல் இல்லாமல், தொட்டு அனுபவிப்பதை அபரோக்கஷ அனுபூதியாய் விளங்குகிறது.

அப்படிப் பட்டவனைப் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறுவதாவது:

 

'இந்த அனுபவம் பெற்றவனுக்கு உலகம் சூன்யமாகத் தோன்றாது. பகவானே ஜீவனாகவும், ஜகத் ஆகவும் ஆகியிருக்கிறான் என்பது விளங்கும். அப்படிப்பட்டவன் தனது குழந்தை களுக்கு உணவூட்டுவதைப் போல கோபாலனுக்கு ஊட்டுவதாகவே காண்பான்.  தாய் தந்தையரை ஜகதீஸ்வரனாகவும், ஜகதீஸ்வரியாக்கவுமே வழிபடுவான். அவன் உலக வாழ்க்கையில் இருந்தால் மனைவியோடு சேர்ந்து பக்தியிலும், பஜனையிலும் காலம் கழிப்பான்.' 'இறைவன் எல்லா ஜீவர்களுடமும் இருப்பதால், அவன் எல்லோருக்கும் தொண்டு செய்து எல்லோரிடத்திலும் உள்ள இறைவனை வழிபடுவான்.' 

'எவன் என்னை எங்கும் பார்க்கிறானோ, என்னிடத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணாமல் போவதில்லை. அவனும் எனக்கு காணாமல் போவதில்லை. அவன் எந்த நிலையில் இருந்தாலும், எத்தொழிலைப் புரிந்தாலும் என்னிடத்திலே இருப்பான். (கீதை 6.30- 31).

'பாலைக் கடைந்து எடுத்த வெண்ணையை நீரிலோ, மோரிலோ போட்டு வைத்தால் அது மறுபடியும் மோருடனும், நீருடனும் கலக்காது. மேலேயே மிதக்கும். அது போல ஈசுவரானுபவம் பெற்றவன் எங்கிருந்த போதிலும் அவனது மனம் சுற்றிலும் உள்ள பொருள்களுடன் கலக்காமல் ஈசுவர்நிடமே திரண்டு நிலைப் பெரும்' என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இது மூன்றாவது படி....இதுவே பிரம்ம
ம்ஸ்பர்ம் அல்லது பிரம்மத்துடன் ஒன்றியத்தால் உண்டாகும் எல்லையில்லாத ஆனந்தம்.

4) பிராஹ்மீ
ஸ்திதி:
'எவன் எல்லா ஆசைகளையும் விட்டுப் பற்றில்லாதவனாய் "நான்", "எனது" என்பது இல்லாதவனாய் சஞ்சரிக்கிறானோ, அவன் அமைதியை எய்துகிறான். உலகப் பற்றுகலாகிய சுமையை மனிதன் கீழே பூடாதவரை அவனால் உலக சஞ்சலங் களிலிருந்து தப்பிக்க முடியாது. ஒரு பருந்திற்கு ஓர் இறைச்சித் துண்டு கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு உண்பதற்காக அது ஒரு மரத்தை நோக்கிச் சென்றது. அதைப் பார்த்த பல காகங்கள் பருந்தின் பின்னாலேயே துரத்திச் சென்றன. முடிவில் பருந்து அந்த இறைச்சியை எரிந்தபிறகே காகங்கள் அதனை துரத்துவதை நிறுத்தின. மனிதன் ஆசைகளைத் துறக்கும்வரை அவவனுக்கு அமைதி இல்லை. துன்பங்களும் தொடரும். ஆகவேதான் பகவான் கீதையில் முடிவாக சரணாகதியைக் கூறுகிறார்.

'தர்மங்கள்-அதாவது கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே சரணடை. நான் உன்னைப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே!" (கீதை: 18.66)


எங்கும் நிரம்பியதும், நிலைகுலையாததும் ஆகிய கடலை நதிகள் எவ்வாறு அடைகின்றனவோ, அவ்வாறே எவனது ஆசைகள் எல்லாம் பகவானை அடைகின்றனவோ அவன் அமைதியை அடைவான். ஆசைகளைத் தொடர்பவன் அதை அடையமாட்டான். இதுவே பிராஹ்மீஸ்திதி.

5) பிரம்ம நிர்வாணம்:
எவன் அகத்தில் ஆனந்தக் களியாட்டமுடையவனோ, உள்ளே ஒளியுள்ளவனோ அவன் வாழும்போதே பிரம்மமாகத் திகழ்வான்.

 

"எவரது தீவினைகள் ஒழிந்தனவோ,
எவருடைய சந்தேகங்கள் தவிர்ந்தனவோ,
எவருடைய இந்திரியங்கள் நன்கு அடங்கினவோ,
எவர்கள் எல்லா உயிர்களிடத்தும் நன்மையை நாடுபவரோ,
அவர்கள் பிரம்ம நிர்வாணத்தை அடைவர்".
(கீதை 5.24 -26) 
கர்மத்தினின்றும் கோபத்தினின்றும் விடுபட்டவர்களும்,
அடங்கிய சித்தம் உடையவர்களும், ஆத்மா தரிசனம் பெற்றவர்களும் ஆகிய இவர்கள் இங்கேயே, இப்போதே,
எய்திய நிலையே பிரம்ம நிர்வாணம் 
எனப்படுகிறது.

நன்றி "அண்ணா" சுப்பிரமணியம் ..ஸ்ரீ ராமகிருஷ்ணர் விஜயம்...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!