அகச்செவியை ஆக்டிவேட் செய்யவும்!!!!
காதுகளுக்கான பிரம்மச்சரியம் !!!!..சுவாமி விமூர்த்தானந்தர் "காதற்ற ஊசியும் வாராதே கடைவழிக்கே" என்ற வாக்கியம்தான் ஒரு செல்வந்தரை பட்டினத்தார் ஆக்கியது. ஊசிக்கே காதுதான் முக்கியத்துவம் என்றால், மனிதனுக்கு அது எவ்வளவு முக்கியம்? கேட்டல் திறனை மேம்படுத்தவே காதுக்கு கடுக்கன், கம்மல் அணிகின்றோம். விஞ்ஞானப்பூர்வமாக இந்த காது குத்துதலுக்கும் விளக்கம் உண்டு. 'விதி செவியிரண்டும் வேலவர் காக்க', என்கிறது கந்தசஷ்டி கவசம். 'இரு செவியிரண்டும் செவ்வேல் இயல்புடன் காக்க என்று சண்முக கவசமும் கூறுகிறது.
கேட்கும் கலை மனிதர்களுக்கு மட்டுமல்ல!!!
'கேட்கும் கலை மகான்களுக்கு மட்டுமே வரும், மனிதர்களுக்கு வராது' என்று யாரும் முடிவு எடுத்துவிடக் கூடாது. கவனமாக ஒன்றைக் கேட்கும் பொழுது சிறந்தவர்களும், சாதாரண மனிதர்களும்கூட அசாதாரணமான காரியங்களைச் செய்கிறார்கள். அவ்வளவு ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதி தேவஸ்தானத்தின் கோசாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. பொதுவாக, அங்குள்ள பால் கறப்பவர்கள் ஏதாவது பாடலை விடுவார்கள். ஒலிக்க ஒருநாள் திடீரென அனேகமாக எல்லாப் பசுக்கலுமே கூடுதலாகப் பாலை சொரிந்தன. பால்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம். அவர்கள் அந்த அதிசயத்தை ஆராய்ந்துப் பார்த்ததில் ஒன்று புலப்பட்டது. வழக்கம் போல சினிமா, சாதாரண பக்தி பாடல் என்றில்லாமல் அன்று தெய்வீகக் குரலில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இனிய கீதம் கோசாலையில் ஒலித்ததுவே காரணம், அதனைக் கேட்ட பசுக்கள் மெய் மறந்து அதிக பாலை சொரிந்தன என்பதனை கண்டு அவர்கள் வியந்தனர்.
முள்ளில்லாத ரோஜா முளைத்தது எப்படி??
பிராணிகள் மட்டுமல்ல, தாவரங்கள் கூட கேட்கப் பிரியப்படுகின்றன. கேட்டலின்படி நடந்து கொள்ளவும் தொடங்குகின்றன. இதனை 1994 -இல் 'தி நியு சயன்டிஸ்ட்' என்ற பத்திரிகை வெளியிட்ட ஓர் உண்மை நிகழ்ச்சி தெளிவு படுத்தியது. கலிபோர்னியா பல்கலைகழகத்தில் தாவரவியல் பேராசிரியையான பாக்ஸ்டர் கரோலினா கேரளாவிற்கு வந்திருந்தார். அங்கு ஒரு மூதாட்டி ஓடிவிளையாடும் தனது பேரக் குழந்தைகளுக்கு இறைநாமத்தை கட்டாயமாக பாடக் கற்றுத் தருவதை பார்த்தார். பாட்டியிடம், பேராசிரியை இவ்வாறு இறைநாமத்தை சொல்லுவதால் என்ன நன்மை? என்று கேட்டார். பாட்டி, ' இறை நாமத்தைக் கூறுவது எல்லோருக்கும் நன்மையைத்தான் செய்யும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, செடி கொடிகளுக்கும் கூட அது நல்லதையே செய்யும். இன்று இந்த குழந்தைகள் நான் கூறுவதை கேட்காமல் போகலாம். அனால் அவர்களின் அந்தராத்மா நான் கூறுவதை நிச்சயம் கேட்கும்" என்றார் ஆணித்தரமாக.
பேராசிரியை கரோலினோ, பாட்டி கூறியதை சோதித்துப் பார்க்க எண்ணி அமெரிக்கா விலுள்ள தனது தோட்டத்திலுள்ள பல ரோஜாச் செடிகளை இரு கூறுகளாக பிரித்தார். சில குறிப்பிட்ட ரோஜா செடிகளிடம் சென்று, ' என் அருமைப் பிள்ளைகளே! நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள், ஆடு, மாடுகள், மனிதர்களிட மிருந்து உங்களைக் காக்க வேண்டியது எனது பொறுப்பு. நீங்கள் கவலையின்றி நன்றாக மலருங்கள். உங்களது முழு வளச்சிதான் எனக்கு வேண்டியது. அதற்கான பாதுகாப்பை நான் தருகின்றேன் என்று திரும்பத் திரும்ப கூறி வந்தார். இப்படி 65 நாட்கள் விடாமல் சிரத்தையுடன் கூறினார் பேராசிரியை.
முடிவில், அக்குறிப்பிட்ட ரோஜாச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. அவற்றின் இலைகளின் பச்சை நிறம் செழுமையாக இருந்தது. ரோஜாக்கள் நிறமும் அழகும் கொண்டு அதிக நறுமணத்துடன் பூத்துக் குலுங்கின. தங்களை பாதுகாக்க தாய்போல் ஒருவர் இருக்கிறாரே என அந்த ரோஜாச் செடிகள் தங்களை பாது காத்துக் கொள்ள முட்களைக்கூட வளர்த்துக் கொள்ளாதது விந்தையிலும் விந்தை!!! இதிலிருந்து நன்கு செவிமடுக்க செடிகளும் தயாராக உள்ளன என்று தெரிகிறது. கரோலினாவின் ஆறுதல் வார்த்தைகளும், அன்பும் பெறாத மற்ற ரோஜாச் செடிகள் சாதாரணமாகவே வளர்ந்திருந்தன. அவற்றில் வழக்கமான அம்சமே இருந்தன.
ஒருவரை ஆழ்ந்த உறக்கத்திற்கு உட்படுத்தி 'ஹிப்னாடிசம்' முறையில் அவனுக்குச் சிலவற்றைக் கேட்க செய்தால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன.
தூக்குதண்டனை பெற்று மரணமடையப் போகும் ஒரு குற்றவாளி இருந்தார். சில மனோதத்துவ நிபுணர்கள் தங்களது மனோவசிய திறமையைப் பயன்படுத்தி மரணமடையச் செய்வதாகக் கூறி அனுமதி பெற்று அவரை அழைத்து வந்தனர். முதலில், திடமான அக்குற்றவாளியைப் படுக்க வைத்து, உடலில் பல இடங்களில் ட்யுபுகளைச் சொருகினார். அதன் வழியாக அவரது உடலிலுள்ள ரத்தம் சிறிது சிறிதாக படுக்கையின் கீழே ஒரு பாத்திரத்தில் சொட்டு சொட்டாக விழும்படிச் செய்யப்பட்டுள்ளதாக அவரிடம் கூறப்பட்டது. அச்சத்தம் அவருக்குத் தெளிவாகக் கேட்கும்படியாக அமைத்தனர். பிறகு அந்த மருத்துவர்கள், "இதோ பார், நீ மெல்ல மெல்ல சாகப் போகிறாய். உன் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் இக்குழாய் வழியாக வெளியே போய்விடும். வாளியில் ரத்தம் விழும் சத்தம் எப்போது நிற்கிறதோ, அப்போது உன்னிடமுள்ள எல்லா ரத்தமும் வெளியேறிவிடும். உன் உயிர் தானாகப் பிரிந்துவிடும்" என்று அவரது ஆழ்மனதில் பதியும்படிக் கூறினர்.
அடக்க்கப்பட்ட தனியறையில், எழுந்திருக்க முடியாத அந்த குற்றவாளி தன் இதயத் துடிப்பையும், துளித் துளியாக 'ரத்தம்' விழும் சப்தத்தை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார். உண்மையில் உடம்பிலிருந்து ரத்தம் எடுக்கப் படவில்லை. வேறொரு குழாயிலிருந்து வெறும் நீர் வந்து அந்த வாளியில் சொட்டு சொட்டாக விழும்படி செய்திருந்தார்கள். ஓரிரு நாட்களுக்குப் பிறகு திடீரென ரத்தம் வாளியில் விழும் சப்தம் நின்றதுதும், ஆ! அந்த குற்றவாளியும் இறந்தே போனார். என்ன நடந்தது? உண்மையில் அந்த நபர் பலசாலிதான். ஆனால், மருத்துவர்கள் திரும்பத் திரும்ப ' நீ சாகப் போகிறாய்' என்ற ஒரே விஷயத்தை அவரது ஆழ்மனதில் பதிய வைத்ததால், அவரும் அதனை அப்படியே நம்பி இறந்தும் போனார். புறச்செவி மூலம் அகச்செவியைப் பிடித்துவிட்டதால் ஏற்பட்ட விளைவு இது. புறச்செவி மூலமாகக் கேட்கப்படுவது அகச்செவியையும் பாதிக்கின்றது. அகச் செவி ஆழ்மனதில் அதைத் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்கிறது.
மனோவசியத்திலிருந்து விடுபடு:.....சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் மக்களின் ஆழ்மனங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். தொடர்ச்சியாக ஒருவர் கேட்கும் நல்ல மற்றும் தீய விஷயங்கள் எப்படி ஒருவரை பாதிக்கின்றன என்பதைப் பற்றி அவர் கூறுகிறார் கேளுங்கள்.....
' ...நியுயார்க்கிற்கு வரும் ஐரிஷ்காரர்களை நான் (சுவாமி விவேகானந்தர்) கவனித்திருக்கின்றேன். அவர்கள் வரும்பொழுது தாழ்வு மனப்பான்மையுடன், குழிவிழுந்த கண்களுடன், உடைமைகள் அனைத்தையும் இழந்து, கையில் காசில்லாமல், உணர்ச்சியற்றுப் போய், தங்கள் ஒரே உடைமையான துணிமூட்டையை ஒரு கம்பி நுனியில் கட்டி அதைத் தூக்கியபடி, பயந்த நடையும், மிரண்ட கண்களுமாக வருவார்கள். 'ஆனால் வந்த ஆறு மாதங்களில் காட்சி மாறிவிடும். நிமிர்ந்த நடையும், மாறிய உடையும்: கண்களிலும், நடையிலும் அச்சத்திற்குரிய அறிகுறிகளே தென்படாது. காரணம்?
'காரணத்தை நமது வேதாந்தம் விளக்குகிறது' அந்த ஐரிஷ்காரன் தன் சொந்த நாட்டில் வேருப்புனர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தான். இயற்கை முழுவது அவனிடம் ஒரே குரலில், 'உனக்கு எதிர்காலமே இல்லை, நீ அடிமையாகப் பிறந்தாய், அடிமையாகவே வாழ்வாய்' என்று கூறியது. 'பிறந்த நாள் முதல் இவ்வாறே கூறப் பட்டு வந்ததால் அவன் அதை நம்பினான்; அவனது ஆன்மா செயல் இழந்துவிட்டது. 'ஆனால் அவன் அமெரிக்காவில் காலடி வைத்தவுடனே, 'நீயும் எங்களைப் போன்ற மனிதன்தான். மனிதனே அனைத்தையும் செய்துள்ளான். உன்னையும் என்னையும் போன்ற மனிதன் எல்லா காரியத்தையும் செய்ய முடியும். வீரம் கொள், என்ற குரல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கேட்டது. ' அவன் தலை நிமிர்ந்தான், தான் அவ்வாறே உயர்ந்தவன் என்பதைக் கண்டான். அவனது ஆன்மாவும் விழிப்புற்று எழுந்தது'.
ஐரிஷ்காரனைவிட அன்றைய நம் மக்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும், பாரம்பரியப் பெருமையைப் புறக்கணித்தும் இருந்தனர். இதனால் தான் சுவாமி சிவேகானந்தர் நம் ஒவ்வொருவரிடமும் "DE-HYPNOTISE YOURSELF - பலவீனமான மனவசியத்திளிருந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்" என்றார்.
புறச்செவியில் தொடங்கி, அகச்செவியை அடையவேண்டும்!!!
ஹிரண்யகசிபு என்ற அரக்கன் மகாவிஷ்ணுவைப் பகைத்துக் கொண்டான். ஆனால், அவனது மகன் பிரகலாதனோ விஷ்ணுவின் பரம பக்தன். எப்படி? ஹிரண்யகசிபுவின் மனைவி க்யாதுவிடம் நாரதர் விஷ்ணுவின் மகிமையை எடுத்துக் கூறினார். அதைக் கேட்காது அன்று அசதியில் தூங்கிவிட்டாள். அவளது கர்ப்பத்திலிருந்த பிரகலாதனோ விஷ்ணுவின் மகிமையை நாரதர் மூலம் கேட்டான். நாரதர் கூறியதைச் செவிமடுத்ததால் தான் பிரகலாதன் கருவிலேயே திருவுடையவன் ஆனான். அவனது அகச்செவியும் திறந்தது.
மந்திரமும், உபதேசமும் புறச்செவியில் கேட்பதன் மூலம் தொடங்குகின்றன. இறைவனின் மகிமைகளைக் கேட்கும் காதே காது.
"தோல் இலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?....என்று சிலப்பதிகாரம் கூறும். அவ்வாறு கேட்கப்படுவது முறையாக நடந்தால், இறையருளாலும் மனித முயற்சியாலும் ஒருவனின் அகச் செவியில் அபூர்வ ஆன்மீக விஷயங்கள் உதிக்கும் என்பர் சான்றோர்.
சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சிஷ்யை மிஸ்.மேக்லவுட் என்பவர் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல சேவைகளைச் செய்தவர். சுவாமிஜியிடம் தீட்சை பெற்று அவர் பணித்த தொண்டிலேயே தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். சுவாமிஜியையும் அவரது உபதேசங்களையும் மக்கள் மத்தியில் பரப்பினார் அவர். அந்தப் புனிதமான பணி அவரை எந்த அளவிற்குக் கடவுளுடன் இணைத்தது தெரியுமா? சுவாமிஜி மகசாமாதி அடைந்து பல ஆண்டு களுக்குப்பின் மிஸ்.மேக்லவுட் அடிக்கடி ராமகிருஷ்ண மிஷனின் தலைமையகமான பேலூர் மடத்தில் வந்து தங்கிச் செல்வார். காலையில் புனிதமான கங்கைக் கரையில் அமர்ந்து தியானிப்பார்.
அப்போது அவரது முயற்சி இல்லாமலேயே அவரது இஷ்டமந்திரம் அவருக்குள் முகிழ்க்கும். அவ்வாறு ஆழ்மனதில் தோன்றும் அந்த மந்திரத்தைக் கேட்டுக் கொண்டே அவர் தியானத்தில் ஆழ்ந்து போவார். பலரது புறச்செவிகளுக்குப் பாங்கான பண்புகளையும் பகவானின் பெருமைகளையும் கூறி வந்ததால், மேக்லவுட்டின் அகச்செவியிலும் அந்த உன்னதங்கள் கேட்டனவோ? பிருந்தாவனத்தில் ஸ்ரீகிருஷ்ணன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே இருக்கின்றான். அகச்செவி திறக்கப் பெற்றவர்கள் அந்த அருபுத நாதத்தைத் தங்களுக்குள் கேட்கின்றனர். இது உயர்ந்த பக்தர்கள் மற்றும் மகான்களின் அனுபவமாக இன்றும் உள்ளது.
உங்களது அகச்செவியை 'ஆக்டிவேட்' செய்திட, புறச்செவியை அவ்வப்போது 'ஸ்விட்ச் ஆப்" செய்யுங்கள். புறச்செவியில் நல்லவற்றைக் கேட்டுக் கொண்டே இருங்கள். அது 'சார்ஜ்' செய்வது போல! அகச்செவியிளிருந்து அபூர்வ விஷயங்கள் வருவதற்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
'ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: - தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களக் கேட்கவேண்டும்.
நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம்
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!