Search This Blog

Mar 13, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:21/2. சந்திர யோகம் (பாடல்கள்:20-33/33)பாகம்-II






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
======================================================================== 


மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்..........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்...............................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்...............................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்.............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்..................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:06: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை.....................பாடல்கள்: 012
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி .....................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்..................பாடல்கள்: 030
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை.................பாடல்கள்: 020  
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:18: கேசரி யோகம்..................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:19: பரியங்க யோகம்.............பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:20: அமுரி தாரணை..............பாடல்கள்: 005
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:21: சந்திர யோகம்..................பாடல்கள்: 033
========================================================(288+033=321)


மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:21. சந்திரயோகம் (பாடல்கள்:20-33/33)பாகம்-II
பாடல் எண் : 20
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொழிப்புரைநூல்களைக் கற்பினும் அவற்றின் பயனைச் சிறிதும் உணரமாட்டாத அறிவிலிகள், அவற்றைப் பிறர் உரைப்பினும் உணர் வாரல்லர். ஆதலின், அவர் நிற்க. நீவிர் யாம் கூறிய முறையால் குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் சந்தித்தலோடு ஒழியாது, அதன் முடிவிடமாகிய சந்திர மண்டலத்திலும் விடாது பொருந்தி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்க வல்லிராயின், அவ்விடத்தில் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவான்.
==========================================
பாடல் எண் : 21
பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே. 

பொழிப்புரைகுண்டலினியாகிய பாம்பு சந்திரகலை, சூரியகலை என்னும் இருகலை வாயுவையும் ஒருங்கே உட்கொண்டு சிறந்து எழும். பின் பெருந்தகையோனாகிய சிவபிரான் அந்தப் பாம் பினையும், சகத்திராரத்தில் உள்ள சந்திரனையும் மாறிநிற்க விடாமல் ஒன்றியிருக்கச் செய்து, அவ்வொன்றுதலில் தானும் நீங்காது நிற்பான்.
==========================================
பாடல் எண் : 22
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின்
வியந்தரு பூரணை மேவும் சசியே. 

பொழிப்புரைசர நிலையில் சந்திர கலை இயங்கும்பொழுது உறங்காமல் விழித்திருந்து, சந்திர கலை நின்று சூரிய கலை இயங்கும் பொழுது உறங்கி, இரண்டு கலையும் சேர இயங்கும்பொழுது யோகத்திற் சென்றால், சந்திர மண்டலம், விரிவடைதலாகிய பௌர்ணிமை நிலையை எய்தும்.
==========================================
பாடல் எண் : 23
சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே. 

பொழிப்புரைசந்திர யோகத்தில் சந்திர மண்டலம் தோன்று மளவும் சோம்பல் இன்றி யோகத்தில் முயன்று, அது தோன்றியபின் அதினின்றும் பெருகும் அமுதத்தைப் பருகிச் சரவோட்டத்தில் சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் தக்கது.
==========================================
பாடல் எண் : 24
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே. 

பொழிப்புரைஊழிகள் பல சென்றாலும் உலகிலே வாழ்கின்ற காய சித்த யோகிகள், தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே முழம் அளக்கும் கையாகக் கொண்டு எமனது ஆற்றலை அளப் பார்கள். ஆயினும், இங்குக் கூறப்படுகின்ற சந்திர யோகிகள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள சிவனேயாகின்ற உயர்நிலையை அடைவர்; உலகியலில் தாழ்தற்கு உரியரல்லராவர்.
==========================================
பாடல் எண் : 25
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
கண்மதி வீழ்வள விற்கண மின்றே.

பொழிப்புரைமக்களது உணர்வு அவர்களது தலையில் உள்ள சந்திர மண்டலம் உருப்பெற்றுத் தோன்றிய பின் அவர்களது சந்திர கலை சூரிய கலைகளாகிய வாயுக்கள் இயங்கும் வழியிலே விளங்கி, உலகம் மதிக்கின்ற இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங் களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை முறையே கண்டு விளங்கிய பின், முடிவில் அச்சந்திர மண்டலம் வீழ்ச்சி அடையும்பொழுது ஒரு நொடி நேரமும் இல்லாதொழியும்.
==========================================
பாடல் எண் : 26
வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 

பொழிப்புரைசந்திரனிலும் ஆற்றல் மிகுகின்ற சூரியனது கலைகள் ஆறும், சூரியனும் ஆற்றல் மெலிகின்ற சந்திரனது கலைகள் ஆறும் தனித்தனி இருதயத்திற்குமேல் பன்னிரண்டங்குலம் சென்று சந்திர மண்டலத்தில் பரவி நின்றதன் பயனை அறிகின்றவர் உலகத்து அரியர்.
==========================================
பாடல் எண் : 27
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே. 

பொழிப்புரையோகிக்கு உணர்வு பெருகுகின்ற உயிர் போல் வதாகிய சந்திர கலை குறைகின்ற நாளே விந்து இழப்பாகின்ற காலம் என்க. ஆகவே, முன்னை மந்திரத்திற் கூறியவாறு சந்திர கலையைக் குறைவுறாதபடி செய்கின்ற சமநிலை யோகத்தையுடைய யோகிக்கு எக்காலத்தும் விந்து இழப்பாகாது. ஏனெனில், மூலாதாரத்தில் உள்ள ஓங்கார உணர்வு நுண்ணிய நாதமாத்திரையாய்ச் சந்திர மண்டலத்துட் சேர்க்கப்பட்டதனால் ஆகிய உரை உணர்வுகளால் காமம் மீதூரா தொழிய, விந்து தனக்கு மூலமாகிய சுவாதிட்டானத்தில் கட்டுண்டு நிற்கும் ஆதலால்.
==========================================
பாடல் எண் : 28
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.

பொழிப்புரைமேல் சூரிய கலை பன்னிரண்டினின்று வேறாகத் தோன்றக் கூறிய ஆறனுடன், சுவாதிட்டானத்தினின்றும் கீழ்ச் சென்று மூலாதாரத்தைத் தாக்குவதாகிய அக்கினி கலை நான்கு தொடர்ந்து பொருந்தி நிற்கும் இயல்புடையன. அவற்றால் பத்தாகின்ற சூரிய கலைகளோடு சந்திரனது அடக்கமான கலை ஆறு கூடின், அந்நிலை யோகிக்கு மேற்கூறிய உரை உணர்வுகள் முழுதும் அற்றொழிகின்ற அமாவாசியை நாளாம்.
==========================================
பாடல் எண் : 29
உணர்விந்து சோணி உறஇனன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 

பொழிப்புரைபுணர்ச்சிக் காலத்துச் சந்திர கலை குறையுமாயின், சூரிய கலை உணர்விற்கு முதலாகிய வெண்பாலினையும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலினையும் மிக இழக்குமாறு தனது ஆற்றலைச் செயற்படுத்தி நிற்கும். ஆகவே, உணர்வும், உடம்பும் போல்வன வாகிய சூரிய கலை, சந்திர கலைகளாகிய அவை தம்மில் ஒத்து நிற்பின், உணர்விற்கு முதலாகிய வெண்பாலும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலும் ஒருபோதும் மிக இழக்கப்படா.
==========================================
பாடல் எண் : 30
அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 

பொழிப்புரைசந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதம், தான் பாய்கின்ற யாறாகிய புருவ நடுவின் எல்லையைக் கடந்து வழிந்து கொண்டிருக்க, அப்புருவ நடுவினின்றும் மேன்மேல் சுடர்விட்டு விளங்குகின்ற ஒளிகள் ஐந்தையும் ஒன்று படுத்தி, அவற்றிற்கு ஏற்பு டையதான அந்தத் தண்டின் முனையில் அவைகளை ஓங்கி எரியச் செய்து, அவற்றைச் சுமக்க வல்லவர்கட்கு, நமனது வருகையும், கலை, நாள் முதலாகச் சொல்லப்படுகின்ற காலப்பகுதிகளும் இல்லையாகும்.
==========================================
பாடல் எண் : 31
உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 

பொழிப்புரைஉலகீர், அமுதம் நிறைந்துள்ள ஊற்றின் மடையைத் திறந்து, அவ்வமுதம் பெருகிவர, அதனை உண்ணுங்கள். அதனை உண்டதன் பயனாக இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ நினையாமல், ஞான சமாதியில் அமர்ந்து சிவனது இரண்டு திருவடிகளாகிய தாமரை மலரின்கீழ்ச் சென்று இருக்கவே நினையுங்கள். அங்ஙனம் இருத்தலாகிய அழியா இன்பத்தின் பொருட்டு முதற்கண் உங்கள் மூச்சுக் காற்றினை இருமூக்காகிய வழிகளை மாற்றிக் கண்வழியாகச் செலுத்துங்கள்.
==========================================
பாடல் எண் : 32
மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 

பொழிப்புரை :  இடநாடி வழியாகவும், வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பினின்றும் மாறுகின்ற சந்திர கலையும், சூரியகலையும் பின், யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும், குறைவுறாமலும் சுழுமுனை வழியே சென்று சந்திர மண்டலம் உள்ள தலையை அடையுமாயின், உடல், தனது நலத்திற்கு வேண்டுகின்ற வழிகளில் சிறிதும் சிதைவு உண்டாகாது. என்றும் அழிவில்லாத வீட்டின்பமும் இவ்வுலகில் மிகுவதாகும்.
==========================================
பாடல் எண் : 33
விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்க நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே. 

பொழிப்புரை :  ஓடுதலை விடாத மனம் பிராணாயாமத்தால் ஒருவழிப்பட்டுச் சிவநாத ஒலியைக் கேட்பிக்கும். மதம் நீங்காத ஐம்பொறிகளாகிய யானைகளும் உரிய இடத்தில் கட்டுப்படும். அதனால், பருகப்படுகின்ற சந்திர மண்டலத்து அரிய அமிர்தமே பெத்த காலத்தில் விளையாத பேரின்பமாய் நிற்கும்.
==========================================
 
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.



No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!