பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
========================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்..........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்...............................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்...............................பாடல்கள்: 002 மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்.............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்..................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:06: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை.....................பாடல்கள்: 012
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி .....................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்..................பாடல்கள்: 030
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை.................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:18: கேசரி யோகம்..................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:19: பரியங்க யோகம்.............பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:20: அமுரி தாரணை..............பாடல்கள்: 005
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:21: சந்திர யோகம்..................பாடல்கள்: 033
========================================================(288+033=321)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:21. சந்திரயோகம் (பாடல்கள்:01-19/33)பாகம்-I
பாடல் எண் : 1
எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.
பொழிப்புரை : சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக நிறைவெய்தும், (பின் பருமை யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மையினின்றும் வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும் தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.
==========================================
பாடல் எண் : 2
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
பொழிப்புரை : யோகத்திற்கு உரியனவாகின்ற சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை என்பவை முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்து என்னும் எண்ணிக்கையை உடையன. இயங்குகின்ற அவ் எல்லாக் கலைகளும் யோகி தனது அறிவால் அறிந்து அமைக்க அமைவனவே; அண்டத்தில் உள்ள சந்திரன் முதலியவற்றின் கலைகள் போல இயல்பாக அமைந்தன அல்ல.
==========================================
பாடல் எண் : 3
ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.
பொழிப்புரை : சூரியன் பன்னிரண்டு கலைகளையே உடைய தாயினும் அது சந்திரனது பதினாறு கலைகளையும், அதற்கு ஏதுவாய் நிற்கும் பதினாறு மாத்திரைப் பிராண வாயுவையும் உட்கொள்ளும் ஆற்றல் படைத்தது. அஃது அன்னதாவது, தான் அக்கினி கலையோடு சேரும்பொழுதேயாம்.
==========================================
பாடல் எண் : 4
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.
பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.
பொழிப்புரை : `சூரியன், சந்திரன்` என்னும் இரண்டற்கும் மேற் சொல்லிய கலையளவில் வேறுபாடில்லை. ஆயினும், அக்கினிக்கு மேற்சொல்லப்பட்ட கலையளவு இழிபளவாக, உயர்பளவு அறுபத்து நான்காம். இதனை யோக முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
==========================================
பாடல் எண் : 5
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.
பொழிப்புரை : அக்கினி முதலிய மூன்றற்கும் சொல்லப்பட்ட கலை அளவுகளை ஒன்றற்கு உரியது மற்றொன்றற்கு ஆகுமாறு பொருத்துதல் கூடாது.
==========================================
பாடல் எண் : 6
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.
பொழிப்புரை : அக்கினிக்கு அறுபத்து நான்கு, சூரியனுக்குப் பன்னிரண்டு, சந்திரனுக்குப் பதினாறு எனக் கலைகள் மேற்கூறியவாறு வரையறுக்கப்படும் பொழுது அவற்றிற்கு மேலும் நட்சத்திரக் கலை என நான்கு சொல்லப்படும். ஆகவே, அவையும் கூடக் கலைகள் தொண்ணூற்றாறாம். இத்தொண்ணூற்றாறு கலைகளையும் தத்துவ தாத்துவிகங் களாகிய தொண்ணூற்று ஆறுமாகக் கொள்க.
==========================================
பாடல் எண் : 7
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே.
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே.
பொழிப்புரை : தொண்ணூற்றாறு கலைகளும், `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பவற்றுடன், நடுநாடி வழியாகக் கீழ்ப் போய்த் தொடர்கின்ற, இதுகாறும் சொல்லப்படாத மூலாதாரத்திலும் ``பூரகம், கும்பகம்`` என்பவற்றில் ஏற்ற பெற்றியால் பொருந்திப் பின் மேல் எழுந்து தலையிலே சேர்தலால், யோகிகள் சிவனது திருவடியை அடைய வல்லவராவர்.
==========================================
பாடல் எண் : 8
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.
பொழிப்புரை : `அக்கினிகலையில் சந்திரன், சூரியன்` என்னும் இரண்டன் கலைகள் தாக்குதலால் அவற்றொடு வைத்து எண்ணப் படுகின்ற நட்சத்திரக் கலைகள் தோன்றும். இங்கு, `சந்திரன், சூரியன், அவற்றின் கூறுகளாகிய நட்சத்திரம்` என்று சொல்லப்படுவன வெல்லாம் சத்தியது ஒளிப்பகுதிகளே. அதனால், இவை பிரணவ யோகிகட்கு நவமண்டலமாயும் நிற்கும்.
==========================================
பாடல் எண் : 9
தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.
பொழிப்புரை : `பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.
==========================================
பாடல் எண் : 10
தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாம் சொரூபமே.
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாம் சொரூபமே.
பொழிப்புரை : நட்சத்திரங்கள் சந்திரன் தேயும் பக்கத்தில் விளங்கு தலன்றி, அது வளரும் பக்கத்தில் தனியே விளங்கா; சந்திரனது ஒளியிலே ஒன்றி அதுவாய்விடும். யோகத்தில் ``நட்சத்திரங்கள்`` எனப்படுபவை, பூமியில் உள்ள பலவகை உயிர்கள். எனவே, யோகியின் சந்திர மண்டலம் விளங்கி நிற்கும்பொழுது உலகப் பொருள் பற்றிய உணர்வுகள் முன்னை மந்திரத்துட் கூறிய நட்சத்திர மண்டலத்தில் வேறு நின்று விளங்காது, சிவ உணர்விலே ஒன்றிவிடும்.
==========================================
பாடல் எண் : 11
முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.
பொழிப்புரை : பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும், அண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் போலவே தனது முற்பக்க நாள் பதினைந்தில் தோன்றி வளர்ந்து, பிற்பக்க நாள் பதினைந்தில் நிறைவினின்றும் தேய்ந்துவிடும். அதனால், அவ்விருவகைப் பதினைந்து நாள்களையும் அறிந்து முற்பக்க நாளில் யோகம் புரிய வல்லவர்கட்கு, சொல்லுதற்கரிய சிவனது திருவடியைச் சேர்தலும் கூடும்.
==========================================
பாடல் எண் : 12
அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.
பொழிப்புரை : முதற்கண் மூலாக்கினியை எழுப்பிப் பின் அவ்வக் கினியோடே சூரிய வட்டத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயு அங்ஙனம் ஓடித் தங்குதற்கு நாள்கள் பத்தாகிவிடப் பின் அவ்வக்கினி, நட்சத்திரங்களாகிய புலன் உணர்வு ஒழியும்படி சந்திர மண்டலத்தில் சென்று சேர்கின்ற யோக நாள்களே முற்பக்க நாள்களாம்.
==========================================
பாடல் எண் : 13
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
பொழிப்புரை : இங்குக் கூறிய இருவகைப் பக்கங்களின் படி வளர்ந்தும், தேய்ந்தும் நிற்கின்ற சந்திர கலை பதினாறும் அண்டத்தில் உள்ளது போலவே பிண்டத்திலும் பொருந்தி உள்ளதை உயர் நெறியில் வேட்கையில்லாதோர் நினைப்பதில்லை. அதனால், வாழ்நாளை வீணாளாக்கிய குற்றம்பற்றி அவர்கள்மேல் சீற்றங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை இழிபிறப்பில் தள்ளியபின், அதிலே சென்று வீழ்ந்து மேல் ஏற வழியறியாது திகைத்தலையே அவர்கள் உடையராவார்கள்.
==========================================
பாடல் எண் : 14
அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே.
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே.
பொழிப்புரை : இடை நாடி வழியாகப் பூரிக்கப்படும் சந்திர கலையாகிய வாயு அக்கினி கலையாகிய சுவாதிட்டான கும்பகத்தில் முன்னர்ப் பொருந்தி நிற்பின், பின்னர் வல நாடி வழியாகப் பூரிக்கப்படும் சூரிய கலையாகிய வாயுவே அவ்வக்கினி கலையில் சென்று பொருந்துவதாகும். அவ்வாறே, சூரிய கலையாகிய வாயு முன்னர் சென்று அக்கினி கலையில் பொருந்தின், பின்னர் சந்திரகலையே அதன் கண் சென்று பொருந்துவதாகும். இவ்வாறு அக்கினி கலையில் சந்திர கலை, சூரிய கலை என்னும் இரண்டும் பொருந்திய பின்னரே, அதனை மூலாதாரத்திற் செலுத்துதலாகிய அந்த நட்சத்திர, கலை மூலா தாரத்தில் சென்று தங்கி, அதுவே அனைத்துக் கலைகளுமாய் அங்கு நிரம்பி நிற்கும்.
==========================================
பாடல் எண் : 15
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.
பொழிப்புரை : ``பன்னிரண்டு`` என வரையறுக்கப்பட்ட சூரிய கலைகள் பெண் கலைகள். ``பதினாறு`` என வரையறுக்கப்பட்ட சந்திர கலைகள் ஆண் கலைகள். இவைகளை இந்த அளவுகளில் குறையாமல் பூரித்து, மூலாக்கினி விளங்கும் இடமாகிய சுவாதிட்டானத்தில் கும்பித்தால், அவ்விடத்துத் தெவிட்டாது தோன்றுகின்ற இன்பம் பேரின்பமே.
==========================================
பாடல் எண் : 16
காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.
பொழிப்புரை : சூரிய கலையைப் பூரித்துப் பின் இடநாடி வழி இரேசித்தும், சந்திர கலையைப் பூரித்துப் பின் வலநாடி வழி இரேசித்தும் பிராணாயாமத்தை இவ்வாறு பன்முறை தவறாமல் போற்றிச் செய்வீராயின், ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உம் உடல் தளர்ச்சி யடையாமலே யிருக்கும்.
==========================================
பாடல் எண் : 17
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
பொழிப்புரை : சிவன், யோகிகளது உள்ளத்திற்குத் தோன்றும்படி தருகின்ற தச நாதங்களில் சங்கொலி ஒழிந்த ஒன்பது நாதங்களாய் முதற்கண் அவர்கட்கு அநுபவப் படுவான். பின்பு மேலிடமாகிய ஆஞ்ஞையில் விளக்கொளி போலக் காட்சியளிப்பான். அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்கி ஞான ஒளி வெளிப்படுகின்ற நான்காம் சத்தி நிபாதமாகிய காலைப் பொழுதில் காலைச் சங்கொலியாயும், காலைக் கதிரொளியாயும் கேள்வியிலும், காட்சியிலும் அனுபவமாவான்.
==========================================
பாடல் எண் : 18
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.
பொழிப்புரை : சூரிய கலை சந்திர கலைகள் சரவோட்டத்தில் மக்களது வாழ்நாளைப் படிமுறையாகக் குறைத்து நிற்பன. உடல் அழியாது நிலைபெறும்படி பொழிகின்ற அமுத மழை, யோகத்தால் ஆற்றல் மிகுகின்றவனது உடலினுள்ளே நீங்காது நிலை பெற்றுள்ளது. பிராணாயாமத்தால் நாடிகள் மாற்றத்தை எய்தப்பெறுகின்ற யோகி, `அண்டம்` எனப்படுகின்ற தலைக்கு அப்பால் நிராதாரத்திற் சென்று அதனை ஒளி மண்டலமாகச் செய்ய, அவன் அங்குக் காண்பது சிவனது இருப்பிடத்தையே.
==========================================
பாடல் எண் : 19
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
பொழிப்புரை : நாபித் தானத்தில் தோன்றிப் பின் மேல் ஓங்குகின்ற குண்டலி சத்தியைத் தலைப்படுதற்குரிய மந்திரத்தை அறிபவர் அரியர். அதனை அறிந்தால், தந்தைக்கு முன்னே மகன் பிறத்தலாகிய புதுமை காணப்படும்.
==========================================
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!