பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
========================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்..........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்...............................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்...............................பாடல்கள்: 002 மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்.............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்..................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:06: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை.....................பாடல்கள்: 012
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி .....................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்..................பாடல்கள்: 030
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை.................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:18: கேசரி யோகம்..................பாடல்கள்: 020
========================================================(243+020=263)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:18. கேசரி யோகம் (பாடல்கள்:20)
பாடல் எண் : 1
கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.
பொழிப்புரை : இம் மந்திரத்தின் பொருள், மேல் ஆதனம் கூறிய விடத்துச் சிங்காதனம் கூறிய மந்திரத்தின் பொருளே மேலும் சிறிது உறுதிப்படக் கூறுதலாய் இருத்தல் கண்டுகொள்க. `கேசரி` என்பது சிங்கத்தின் மறுபெயராதல் வெளிப்படை.
=============================================
பாடல் எண் : 2
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
பொழிப்புரை : ஆடையை அழுக்கு நீக்க விரும்புகின்ற வண்ணான் முதலில் தனக்குப் பயன்படுகின்ற வாய்க்காலை ஓட்டை போகாமற் கட்டிப் பின் ஆடை ஒலிக்கின்ற கல்லிற்கும் உயரமான அளவில் கரை கட்டி, மழை நீரால் பெருகி வருகின்ற ஆற்று நீரை அவ்வாய்க்காலின் வழியால் புகவிட்டுப் பள்ளத்தை நிரப்பினாலே அதில் ஆடையைத் தோய்த்து எடுத்து உயரத்தில் விரித்து உலர்த்திப் பார்க்கும்பொழுது அவ் ஆடை அழுக்கு நீங்கி விளங்கும். அம்முறை போல்வதுதான், யோகத்தால் உயிர் மல மாசு நீங்கி விளங்கும் முறையும்.
=============================================
பாடல் எண் : 3
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
பொழிப்புரை : இடநாடி. வலநாடி இரண்டையும் விடுத்து, நடு நாடியாகிய சுழுமுனை நாடியால் பிராணனைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகிகட்கு, உடல், நரை திரை மூப்புக்களால் தளர்தல் இல்லை. இதற்குமேல், உலக மயக்கத்தில் ஆழ்தலை ஒழித்துத் திருவருளை நினைந்திருக்க வல்லவர்க்கு அவர் தம் விருப்பத்திற்கு மாறாய் இறப்பு உண்டாகாது; அவர் விரும்புமளவும் இவ்வுலகில் வாழ்தல் கூடும்.
=============================================
பாடல் எண் : 4
ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
பொழிப்புரை : யோக நூல்கள் ஆராய்ந்து கூறிய முறையை மேற் கொண்டு பிரத்தியாகாரம் முதலியவற்றைச் செய்தால், உடம்பினின்றே அமுதம் சுரக்கும். சுரக்கும் அவ்வமுதம் நாடிகளிற் பாய்கின்றபோது அதனை யோகி தனது அநுபவமாகப் பிறர்க்கும் சொல்லுவான். இனி, நரை திரை மூப்புப் பிணி சாக்காடுகளை யேயன்றிப் பிறவிக் கடலையும் யோகி கடக்கின்ற முறையைச் சொல்லுமிடத்து, மேற் சொல்லிய அமுதம் சந்திர மண்டலத்திலிருந்து பாய்ந்து உடலைக் காப்பாற்றுகின்ற அதுவேயாம்.
=============================================
பாடல் எண் : 5
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே.
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே.
பொழிப்புரை : பிராண வாயு சுழுமுனை வழியே மேல் ஏறும் பொழுது அது மீளக் கீழ்ப் பாயாதபடி நாவின் நுனியால் அண்ணாக் கினை அடுத்துள்ள துளையை அடைத்தால், (அவ்வாயு தலையிலும், நெற்றியிலும் உள்ள நாடிகள் வழியாகப் பரவுதலால்) சீவனும், சிவனும் இருக்கும் இடம் தலையில் உள்ள அவ் ஆயிர இதழ்த் தாமரை யாகவே முடியும். (அஃதாவது, பாச ஞானங்கழல, பசு ஞான பதி ஞானங்கள் விளங்குவனவாம்.) ஆகவே, அப்பொழுது மூவர் காரணக் கடவுளரையும், ஏனை முப்பத்து மூவர் தேவரையும் காணும் ஒளிக்கண் கிடைக்கும். மற்றும் நூறு கோடி யுகங்கள் சென்றாலும் உடம்பு அழியாது நிலைபெற்றிருக்கும்.
=============================================
பாடல் எண் : 6
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே.
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே.
பொழிப்புரை : குருதி பாய்ந்து ஓடுகின்ற தலையிலிருந்தே தேவருலகத்து அமுதம் பாய்கின்ற வகை அறிகின்றவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனை அறிதல் உடையவர்க்கு அந்தத் தேன்போலும் அமுதத்தை உண்டு, அதன் சிறப்பை உணர்தலும் கூடும்.
=============================================
பாடல் எண் : 7
மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.
பொழிப்புரை : அண்ணாக்கின் அருகில் உள்ள துளையில், `இடை கலை, பிங்கலை` என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் பிராணனைப் பொருத்தினால், யம பயம் இல்லை. மேலுலகத்து வாயிற் கதவும் திறக்கும். உளவாய் இருந்த நரை திரைகளும், உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணம் மாறிவிடும். அதன்பின் யோகி இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இஃது எங்கள் ஆசிரியர்மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.
=============================================
பாடல் எண் : 8
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
பொழிப்புரை : கேசரி யோகத்தைச் சிவபெருமானையே முதல்வனாக உணரும் உணர்வில் நின்று செய்து, அதனானே, அவனைத் தலைப்படுகின்ற யோகி, உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அங்ஙனமாகவும், அவ்யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் பலவற்றை ஆக்க நினைத்துக்கொண்டிருப்போர், நல்வினை இல்லாதவரே யாவர்.
=============================================
பாடல் எண் : 9
தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும் பாமே.
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும் பாமே.
பொழிப்புரை : முன் செய்த தீவினை வந்து விளையாட, அவ் ஆடலைப் போக்க வழியறியாது நின்றவர், கேசரி யோகத்தைச் செய்யின், அவ் ஆடல் இல்லையாய் விடும். மேலும் அதனானே, அவர்க்குச் சிவனோடு கூடித் திளைத்தற்கு, இனிய கரும்புபோலும் திருவருளும் கிடைப்பதாகும்.
=============================================
பாடல் எண் : 10
தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
பொழிப்புரை : மேற்சொல்லிய கரும்பைப் பயிரிட (திருவருளைப் பெற) விரும்புவோர் கேசரி யோகத்தால் குண்டலியை எழுப்பி நிராதாரத்திற் செலுத்துதல் வேண்டும். செலுத்தினால், அருவருக்கத் தக்க இவ்வுடம்பே ஆனந்தத்தைத் தரும் கரும்பாகி, நிராதாரத்தில் உள்ள திருவருள் வெள்ளம் பாய்ந்தோடி வரும்.
=============================================
பாடல் எண் : 11
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.
பொழிப்புரை : மேற்கூறிய திருவருள் வெள்ளம் பெருகுதல் உண்டாகும் முறையிலே கேசரி யோகத்தைச் செய்து, அதனால், தேன்போல இனிய அந்த வெள்ளத்தைப் பருகி, திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதியிருக்க, காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அவ்வாறு அக்கங்கை வரும் வழியை அமைந்துணர்ந்து, முயலுங்கள்.
=============================================
பாடல் எண் : 12
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.
பொழிப்புரை : நிராதார கேசரி யோகம் சிவானந்தத்தைத் தருமாற்றை அறிந்து அதன்கண் நின்றவர், அவ் யோகத்தானே பாசங்களை வென்று அறிவே வடிவாய் இருக்குமாறு சிவன் தனது திருவருளைப் பொழிவான். மேலும், அவரை அவன் தனது வியாபகத்துள் அடக்கிக் காப்பவனும் ஆவான்.
=============================================
பாடல் எண் : 13
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.
பொழிப்புரை : சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கிப் புறம் போகாது நிற்கும் நிராதார கேசரி யோகிகள், எல்லா உயிரிடத்தும் தாயினும் மிக்க அருளுடையராய் இருப்பர். அறியாமையால் சிலர் அவர்க்கு ஊறு செய்யினும், அவரிடத்தும் அவர் அவ்வருள் நீங்குதல் இலர். ஆயினும், அவர்க்கு ஊறு செய்தவர் அத்தீவினையால் தம்மால் தாம் கேடுறுவர் ஆதலின், அது பற்றி அவர்க்கு அவ்யோகிகள் தீயினும் கொடியராகவும் சொல்லத்தக்கவர்.
=============================================
பாடல் எண் : 14
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே.
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே.
பொழிப்புரை : தன்னை வழிபடும் நல்லூழ் இல்லாதவர்க்கு அவர் தலைக்கு அப்பால் மறைந்தே நிற்கின்றவனும், தன்னை யாதானும் ஒரு குறியில் புறத்தே வைத்து வழிபடுகின்றவர்கட்கு அக்குறியேயாய் நின்று அருள் செய்கின்றவனும், தன்னை அகத்தே ஆதாரங்களில் வைத்துப் பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே விளங்குகின்றவனும் ஆகிய சிவன், பெருஞ்செயலாகிய நிராதார யோகத்தைச் செய்கின்றவர்கட்கு அவர்களது உணர்வு வடிவாய் நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 15
மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
பொழிப்புரை : மாவினையாளர் மதியில் உள்ள சிவன், அதில், சந்திரனது கலைகள் போல்வனவாகிய பிராசாத கலைகள் பதினாறாய் நின்றும், புவன பதிகளின் இடமாகிய புவனங்கள் இருநூற்றிருபத்து நான் காய் நின்றும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகள் ஆகிய பகைவர் அவ்யோகியர் எதிர்சென்று போர்புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.
=============================================
பாடல் எண் : 16
இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்ஏர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்ஏர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
பொழிப்புரை : மதியின் எழுங்கதிர்போல நிற்கும் பிராசாத கலைகள் பதினாறும் தன்னைச் சூழ்ந்து நிற்க, அவற்றின் நடுவே திரோதான சத்தி, தனது அழகிய முகமாகிய சந்திரன் நிறைந்த ஒளியுடன் விளங்க, அந்தப் பிராசாத கலைகளின் வழி அமுதத்தைப் பொழிந்துகொண்டு, அவற்றோடு தானும் இருக்கின்றாள்.
=============================================
பாடல் எண் : 17
பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகும் குணமது தானே.
வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகும் குணமது தானே.
பொழிப்புரை : பிராசாத கலைகளின் வழிச்சத்தியால் பொழியப் பட்டு விளங்குகின்ற அந்த ஞானம், அகார கலை முதலிய கலைகளின் அளவில் சுவாதிட்டானம் முதலிய கீழ் இடங்களோடு நில்லாது, அருத்த சந்திர கலை முதலிய கலைகளின் வழி ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களை அடையுமாயின், அவ்விடத்தே அந்த ஞானத்திற்கு முதலாகிய சிவம் வியாபகப் பொருளாய் விளங்கித் தோன்றும். அதன்பின் அந்த அருத்த சந்திராதி கலைகளின் ஞானங்கள் மறைந்து முன் போலக்கீழே போய்விடாமல் காக்க வல்லவர்கட்கு அந்த ஞானம் முடி நிலை வளர்ச்சியை எய்தும். அதுவே, அந்தக் கலா யோகத்தின் பயனாம்.
=============================================
பாடல் எண் : 18
குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.
பொழிப்புரை : சத்தி, பிறர்க்குப் பிறவித் துன்பத்தைத் தருபவள் போலாது வீட்டின்பத்தைத் தருபவளாய் மாறுகின்ற அந்நிலை யிலேயே நிற்கும்படி யோகி மேற்கூறிய மேல் நிலையினின்றும் தாழாது நிற்பானாயின், அச்சத்தியால் நிதிபோலக் கிடைக்கின்ற உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.
=============================================
பாடல் எண் : 19
இருந்த பிராணனும் உள்ளே எழுமா
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.
பொழிப்புரை : சுவாதிட்டானத்தில் இருந்த பிராண வாயு வெளிப் புறமாக அன்றி உட்புறமாக எழுமாறு திறக்கப்பட்ட சுழுமுனை நாடி வழியே சென்று, ஆஞ்ஞையும் திறக்க, அதற்குமேல் விரிந்து விளங்குகின்ற ஆயிர இதழ்த் தாமரை மலரின்மேல் பின்னும் மேல் எழும் வகையில் பொருந்தச் செய்தால், ஞான மண்டலமாகிய நிராதாரமும், அதற்குமேல் உள்ள பரமண்டலமாகிய மீதானமும் இனிது விளங்குவனவாம். அதுவன்றி, நெடுங்காலம் வாழ்தலும் கூடும்.
=============================================
பாடல் எண் : 20
மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.
பொழிப்புரை : ஞானமண்டலமாகிய நிராதாரத்தில், மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து, தியானத்தை அவ்விடத்தே செய்து, அதனாலே மனம் கீழ்ப் போகாதவாறு தளைத்து, உடம்பில் எக்காலத்தும் இருள் இன்றி ஒளியே வீசப் பண்ணினால், சிவன், ஆடும் பெருமானாய் அசைந்து கொண்டிராமல், ஏக பாதனாய் அசையாது நிற்பான்.
=============================================
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!