Search This Blog

Mar 12, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:16&17. வார சரம் & வார சூலம் (பாடல்கள்:06&02)






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================
 

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்..........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்...............................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்...............................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்.............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்..................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:06: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை.....................பாடல்கள்: 012
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி .....................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்..................பாடல்கள்: 030
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை.................பாடல்கள்: 020  
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002
========================================================(235+006 +002=243)

மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:16. வார சரம் (பாடல்கள்:06 )

பாடல் எண் : 1
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

பொழிப்புரை :  கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும், வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.
=======================================
பாடல் எண் : 2
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 

பொழிப்புரை :  `பிராணன், மேற்கூறியவாறு, குறித்த கிழமைகளில், குறித்த நாடியின் வழியே இயங்குமாயின், ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு யாதொரு குறையும் உண்டாகாது` என்று, அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் எங்கட்குத் திருவுளம் உவந்து அருளிச்செய்தார்.
=======================================
பாடல் எண் : 3
செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

பொழிப்புரை :  பிராணன், மேற்கூறியவாறு செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமை களில் வல நாடி வழியே இயங்குதல் வேண்டும் என்பதை அறிந்த யோகியை, `சிவன்` என்றே சொல்லலாம். அஃது அவ்வாறு இயங்காது மாறி நிகழும்பொழுது அதனை ஒத்த முறையில் இயங்கச்செய்து அதன் பயனை அறிபவர்க்கு, அப்பயன் சிவானந்தமாய் முடியும்.
=======================================
பாடல் எண் : 4
மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 

பொழிப்புரை :  இடை நாடி பிங்கலை நாடிகளாகிய வழியால், முறையே, `சந்திர கலை` என்றும், `சூரிய கலை` என்றும் ஆகின்ற பிராணன், எஞ்ஞான்றும் அவ்வாறே இயங்கி அப்பெயரையே பெற்று நில்லாமல் மாறி வரும். (அஃதாவது, இடை நாடியில் இயங்கி, `சந்திர கலை` எனப் பெயர்பெற்று நின்ற பிராணனே அந்நிலையினின்றும் மாறிப் பிங்கலையில் இயங்கி, `சூரிய கலை` எனப் பெயர்பெற்று நிற்கும். பின்னும் அச் சூரிய கலைதானே சந்திர கலையாய் மாறும். இம் மாற்றத்திற்கு முடிவில்லை) இனி, பிராணன் மேற்கூறியவாறு, `சந்திர கலை, சூரிய கலை` எனப்பெயர் பெறும்பொழுது, அவ்வந் நாடியின் வழி முன்னர் வெளிச் செல்லுதலையும், பின்னர் உட்புகுதலையும் உடையதாய் இருக்கும். நீர் ஊற்றுப்போல இங்ஙனம் சுரந்து முடிவின்றிச் சர ஓட்டமாய் ஓடுகின்ற பிராணன், மேற்கூறிய இரு நாடிகளின் வழி ஓடாது, நடு நாடி (சுழுமுனை நாடி) வழியே இயங்குமாயின், (அஃதாவது, பிராணாயாமமாய் அமையுமாயின்,) அஃது உடற்கேயன்றி, உயிர்க்கும் வலிமை தருவதாம். ஆகவே, அதனை அறிந்து, உலகீர், பிராணனை நடு நாடியிற் செலுத்தும் முறையைக் குருமுகமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுங்கள்.
=======================================
பாடல் எண் : 5
உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.

பொழிப்புரை :  பிராண வாயு வல நாடியால் நுழைந்து, இட நாடியால் வெளியேறுமாயின், அது, பிராணன் தனது நிலை கலங்கி இயங்குதலாம். ஏனெனில், அவ்வாறான ஓட்டத்தால் பிராணன் தனது வலிமையை மிக இழந்து நிற்கும். இனி, அதுதானே இட நாடியால் நுழைந்து வல நாடியால் வெளியேறுமாயின், `அது தன் இயற்கையில் உள்ளது` என அறிவாயாக.
=======================================
பாடல் எண் : 6
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

பொழிப்புரை :  சுழுமுனையில் நில்லாமல், ஏனை இருவழிகளிலும் ஓடி, அதனால் வாழ்நாளைத் தேய்க்கின்ற பிராண வாயுவை யோகி தன் வசமாக்கிக் கொள்ளும் வழியிலே சென்று, அதனால் குண்டலி சத்தியை உணர்ந்தபின், அவ்வுணர்வு வாயிலாக அணையும் விளக்குப் போல மிக ஒளிவிடுகின்ற திரோதான சத்தியை அனுபவமாகக் காண்பான்.
=======================================

மூன்றாம் தந்திரம்-பதிக எண்:17. வார சூலம்(பாடல்கள்:02)

பாடல் எண் : 1

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 

பொழிப்புரை :  சிவபெருமானது சூலம் மாறி மாறி வருகின்ற திசைகளைச் சொல்லுமிடத்து, திங்களும், சனியுமாகிய கிழமைகளில் கிழக்காம். செவ்வாயும், புதனுமாகிய கிழமைகளில் வடக்காம். ஞாயிறும், வெள்ளியுமாகிய கிழமைகளில் மேற்காம். இக்கிழமைகளில் சூலம் இவ்வாறாக நிற்கும்.
=======================================
பாடல் எண் : 2
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 

பொழிப்புரை :  வியாழக்கிழமையில் சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம் செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப்பக்கத்திலும், பிற்பக்கத்திலும் இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப் பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.
=======================================








மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!