Search This Blog

Mar 14, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம்:02/2. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:24-46/89)பாகம்-II






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ...........................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ....பாடல்கள்: 089
========================================================(030+089=119)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:02. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:24-46/89)பாகம்-II

பாடல் எண் : 24
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.

பொழிப்புரை :  தானாகவே முன் வந்து காக்கின்ற அருட் சத்தியின் எழுத்தாகிய வகாரத்தை ஓதினால், அவள் தானே முன்வந்து சிவ ஞானத்தை அளித்துப் பரமுத்தியை அடையச் செய்வாள். இனி, அவளாலே உபதேசிக்கப்பட்ட மல எழுத்தாகிய மகாரத்தை ஓதினால், அவ்வருட் சக்தியால் வழங்கப்பட்ட மாணிக்கமாகிய உயிர் மாசு நீங்கி ஒளியுடையதாய் விளங்கும்.
=============================================
பாடல் எண் : 25
கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.

பொழிப்புரை :  வெள்ளியேயானும் மாணிக்கத்தைப் போலச் சிறப்புற்று நிற்கின்ற, வடதிசைக்கண் உள்ள மலை ஆகிய கயிலாயத்தின் கண் தழல்போன்ற உருவினையுடையவனாய் உள்ள சிவபெரு மான், திருவைந்தெழுத்தில் மாணிக்கம் போலச் சிறந்து நிற்பதாகிய சிகாரத்தையே தானாக உணரும்படி, மாணிக்கமாகக் காட்டி நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 26
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே.

பொழிப்புரை :  ஆன்மா சீவ நிலையினின்றும் ஏழு மடங்கு உயர்ந்து தண்ணிய சந்திரனைப் போல விளங்கி நிற்றலும், நூலறிவை உடையதாதலும், நல்லியல்பைப் பெறுதலும் தனது எழுத்தை ஓதுவதனாலாம். தனது எழுத்தாவது ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள `` என்பதாம்.
=============================================
பாடல் எண் : 27
மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

பொழிப்புரை :  ஆன்மா மந்திர ஆன்மாவாய் விளங்கிச் சிவமாக வேண்டியே சிவபிரானால் கொடுக்கப்பட்டது மக்கட்பிறவி. ஆகவே, அதில் நிற்கும் ஆன்மா அங்ஙனமே மந்திர ஆன்மாவாய் விளங்குதலை அறிந்து அப்பெருமான் மகிழ்வதைக் காணக்கூடியவர்கள், எல்லா மந்திர வடிவினனுமாயினும் சிறப்பாகத் திருவைந் தெழுத்துள் மறைந்து நிற்கும் கள்வனாகிய அப்பெருமானது திருவைந்தெழுத்தே தாமாய் நிற்பவரே; பிறரல்லர்.
=============================================
பாடல் எண் : 28
ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.

பொழிப்புரை :  திருவைந்தெழுத்தில் நகாரம் கூத்தப் பெருமானுக்குத் திருவடியாயும், மகாரம் வயிறாயும், சிகாரம் தோள்களாயும், வகாரம் முகமாயும், யகாரம் சென்னியாயும் நிற்கும்.
=============================================
பாடல் எண் : 29
அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு தனக்குத் திருமேனியாய் அமைகின்ற, பிரணவத்தோடு கூடி ஆறெழுத்தாய் நிற்கின்ற நகாரம் முதலிய ஐந்தெழுத்தினாலும் ஆகிய மந்திரத்தையே சிவபெருமான் தனக்கு நேர் வாயிலாகக் கொண்டு நிற்கின்றான். ஆகையால், அவனை அந்தப் பிரணவத்தின் காரியங்களாகிய ஏனை எழுத்துக்களையும் அவனது ஒளிக்கதிர்களாகப் பொருந்தக் கொண்டு தியானித்தால், அவன் தனது ஆனந்தக் கடலாய் அளவின்றி நிற்பான்.
=============================================
பாடல் எண் : 30
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

பொழிப்புரை :  மந்திரம் வகையாலும், விரியாலும், பலவாய்ப் பரந்து கிடப்பது. அதனால், அவை பலதிறத்து எல்லா உயிர்கட்கும் அவை விரும்பிய பயனைத்தரும் தன்மையன ஆதலின், உனக்கு உன் குருவினது அருளால் மந்திரம் கிடைக்குமாயின் அதனைப் பெற்று அதன் துணையால் உன்னைச் சூழ்ந்துள்ள வினையாகிய பகை தொலையும் படி ஓட்டு. ஓட்டுமாறு எங்ஙனம் எனின், அதற்குரிய வலிமையை உனக்குத் தருகின்ற மந்திரத்தை முதற்கண் பிரணவத்தை வைத்து உச்சரி.
=============================================
பாடல் எண் : 31
ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

பொழிப்புரை :  மந்திரங்கட்கெல்லாம் தலையானதாகிய சிவமூல மந்திரமாம் திருவைந் தெழுத்தை முதற்கண் பிரணவமும், நகார மகாரங்களும் முற்பட்டு நிற்க ஓதிப் பின்னர், அவ் ஐந்தெழுத்தில் நடுவண் விளக்குப்போல எழுச்சிபெற்று விளங்குகின்ற சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையும் அம்ச மந்திரத்தாற் செய்யப்படும் பிராணா யாமத்தால் இதய வெளியில் உள்ள ஒளி விளக்கமுறும்படி செய்து, தியானிக்கப்படும் பொருளை மேற்கூறிய சிகாரம் முதலிய மூன்றெழுத்தின் முறைமையதாகவே அறிந்து நிற்பவர்கள், திருவம் பலத்தை உள்ளவாறு தரிசித்து மகிழ்ந்திருப்பார்கள்.
=============================================
பாடல் எண் : 32
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.

பொழிப்புரை :  மேற்கூறிய சக்கரத்தில் பாகுபட்டு நின்ற அறைகளில் வழங்கப்படுகின்ற ஐம்பத்தோரெழுத்துக்களின் இடையே திருவைந்தெழுத்து நிற்குமாயின், கூத்தப்பெருமான் அந்தச் சக்கரத்தில் பாகுபோல இனிதாய ஆனந்த நடனத்தைப் பொருத்தி நிற்பன்.
=============================================
பாடல் எண் : 33
பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.

பொழிப்புரை :  திருவைந்தெழுத்து மேற்கூறியவாறு ஐம்பத்தோரெழுத்துக்களின் இடை நிற்குங்கால் நெடுக்காயினும் குறுக் காயினும் நடுவரிசை யுள்ளே நிற்கும். ஆகவே, அதன்பொருட்டு ஏனைய இடங்களில் எழுத்துக்கள் நடுவரிசைக்கு மேல் வரிசையில் (2) `ய ந வா சி ம`` என்றும், அதற்கு மேல் வரிசையில் (3) `ம வா ய ந சி` என்றும், அடி வரிசையில் (4) `சி ய ந ம வா` என்றும் அதற்கு மேல் வரிசையில் (5) `வா சி ம ய ந` என்றும், மாறி நிற்பனவாம்.
=============================================
பாடல் எண் : 34
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

பொழிப்புரை :  மேலை மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு பொறிக்கப் பட்டபின் செங்குத்தாய் நின்ற வரிசைகளில் முதல் வரிசையிலுள்ள எழுத்துக்களை மேல்நின்று நோக்கினால், `ம ய ந வா சி` என வரும். அவை முறையே, `நிலம், நீர், தீ, வளி, வான்` என்னும் பூதங்களாய் நிற்கும். ஆதலால், அவற்றை முதலாகக் கொண்டு வலம் நோக்கிச் செல்லும் தொடராகிய மந்திரங்களும் அப்பூதங்கள் ஆதலையுடையவாம். அதனால், அவ்வெழுத்துக்களும், தொடர்களும் அப்பூதங்கட்கு உரிய `பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகைமை` என்னும் நிறங்களாயும் நிற்பனவாம். அவை இவ்வாறு நிற்றலால், அவை அடங்கி நின்ற சக்கரத்தைக் கூத்தப்பெருமான் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்றான்.
=============================================
பாடல் எண் : 35
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.

பொழிப்புரை :  மேற்கூறிய பேரம்பலச் சக்கரம் மேலை மந்திரத்திற் கூறியவாறு அமைந்த பெருமையுடையது ஆகலின், அதன்கண் எல்லா உலகங்களும் அடங்குவனவாம். அதனால், அந்தச் சக்கரத்தையே திருவம்பலமாகக் கொண்டு விளங்கும், சிதாகாய வெளியனாகிய சிவபெருமானாகிய பசுவை, அந்தச் சக்கரத்தையே கன்றாகக் கொண்டு , அவனது திருவருளாகிய பாலைத்தருமாறு எம் ஆசிரியர் நந்தி பெருமான் கறந்து கொண்டார். அதன் பயனாகக் குன்றின் உச்சியில் ஏறி நின்றவர் போன்ற உயர்வை அவர் பெற்றவரானார்.
=============================================
பாடல் எண் : 36
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

பொழிப்புரை :  கூத்தப்பெருமானது பஞ்சாக்கர பேதங்கள் அனைத்தும் இச்சக்கரத்தை இடமாகக் கொண்டன. அதனால், இதன்கண் அமைந்த நலங்கள் இன்னும்பல. அவை அத்திருவைந் தெழுத்தால் குறிக்கப்படும், `சிவன், அருள், ஆன்மா, திரோதாயி, ஆணவம்` என்பனவும், அவற்றுள் சிவன் ஆன்மாக்களின் பொருட்டுச் செய்யும் அளவிறந்த கூத்துக்களும், பிறவுமாம்.
=============================================
பாடல் எண் : 37
வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச்
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

பொழிப்புரை :  வெறுவெளியாய் யாதும் எழுதப்படாத பரப்பு ஒன்றில் ஒரு நேர்க்கோடு இழுத்து, அக்கோட்டின் தலையில் ஒரு சுழியை இட்டால் அஃது உகாரவடிவாய்த் தோன்றும். அதில் `கொம்பு` எனப்படுகின்ற சுழியும், நேர்க்கோடும் முறையே விந்துவிற்கும், நாதத்திற்கும் உரிய வரிவடிவமாகும். இனி அவையே `தீ, காற்று` என்னும் பூதத்திற்கு உரிய குறிகளாயும் நிற்கும். இவற்றை இவ்வாறு தெளிவதே சிவ மந்திரத்தை உணர்தலாகும்.
=============================================
பாடல் எண் : 38
அகார உகார சிகாரம் நடுவா
வகாரமொ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

பொழிப்புரை :  சிகாரம் அகார உகாரங்களின் நடுவே நிற்கக் கொண்டு செய்கின்ற பிராணாயாமத்தில் கும்பிக்கப்பட்ட பிராணவாயு வோடே ஆறு ஆதாரங்களில் பொருந்தி, `சிவ என்னும் மந்திரத்தை ஓதிச் சிவனைத் தியானித்தால், பிரணவ முதல்வனாகிய அப்பெருமான் மகிழ்ந்து சக்கரங்களில் நின்று அருள் செய்வான்.
=============================================
பாடல் எண் : 39
அற்ற இடத்தே அகாரம தாவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு அகாரம் முதலியவற்றால் ஆயாமம் (தடுத்தல்) செய்யப்பட்ட பிராணவாயு நிராதாரமாகிய உச்சியை அடைந்தபொழுது, அடைதற்குரிய பொருளாகிய சிவனைக் காணலாம். அப்பொழுது முன்பெல்லாம் மறக்கருணை உடையனாய் இருந்த சிவன் அந்நிலை நீங்கி அறக்கருணை உடையனாய், வளவிய ஒளியாயும், உண்மையாயும் நின்று, செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாகச் செய்யும் குளிகைத் தன்மையைப் பொருந்தி நிற்பன்.
=============================================
பாடல் எண் : 40
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

பொழிப்புரை :  அகாரத்தை உச்சரித்த உடனே உகாரத்தை உச்சரித்தால், மேலிடத்ததாக அறியப் படுகின்ற வீட்டின்பம் பொங்கி வழிந்து உயிரின் கண் கலக்கும். அந்த இரண்டெழுத்தையும் மகாரத்துடன் சேர்த்து உச்சரித்து என் உடலகத்தே நான் சிவனை வழிபட்ட செயலால் விளைந்த அவனது இன்பத்தை நான் எவ்வாறு பிறர்க்குச் சொல்லுவேன்! அவ்வின்பம் அத்தகையதாய் இருந்தது.
=============================================
பாடல் எண் : 41
நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே
ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.

பொழிப்புரை :  இவ்வுலகத்தில் உள்ள பலரும் அறிதல் நீர்மேல் எழுத்துப் போலும் அழியும் எழுத்துக்களையேயாம். மேலை வெளியில் அழியாத எழுத்து ஒன்று உள்ளது. அதனை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனை அறிபவர் எவரோ அவரே உடம்பில் நின்று அறியும் நிலையில்லாத எழுத்தை அறியாதவர் ஆவர்.
=============================================
பாடல் எண் : 42
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்திதந் தானே.

பொழிப்புரை :  பிராணவாயுவை உடம்பில் நடுநாடியாகிய சுழுமுனையில் பொருந்தும்படி செலுத்தினால், அந்நாடியில் நிற்கின்ற ஆதார மலர்களில் ஐம்பத்தோர் எழுத்துக்களும் முறையானே விளங்கி நிற்கும். அவ்வாறு நிறைவிடத்து முதற்காலத்திலே யாவர்க்கும் பொதுவாக வேதத்தை அருளிச்செய்த முதற்பொருளாகிய சிவன் தன் அடியார் நடுவில் இருக்கும் வீடுபேற்றைத் தருதல் திண்ணம்.
=============================================
பாடல் எண் : 43
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியஒண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

பொழிப்புரை :  உந்தியின் கீழ் மூலாதாரத்தில் சிறப்புடைய ஓர் எழுத்து உள்ளது. அதன்மேலேதான் சிவன் தானும், தன் துணைவியுமாக எழுந்தருளியிருக்கின்றான். அதனைத் துறவுபூண்ட முனிவராலும் அறிதல் இயலாது. எனவே, துறவுள்ளம் தோன்ற ஒட்டாது மயக்கி நிற்கின்ற வினைக்கட்டில் அகப்பட்டுள்ளவர் அறிய மாட்டாதவராதல் சொல்லவேண்டுமோ!.
=============================================
பாடல் எண் : 44
அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

பொழிப்புரை :  சிவனை, `` என்றும், `சௌ` என்றும் பிறந்து பொருந்திய மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் அமைந்த மறை பொருளை ஒருவரும் அறியவில்லை. அறிந்தார்களாயின் `அம்சம்` எனப்படுகின்ற அந்த மந்திரந்தானே அனாதியான சிவமாய் நிற்கும்.
=============================================
பாடல் எண் : 45
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

பொழிப்புரை :  மேல், ``நல்ல எழுத்து`` எனப்பட்ட அந்த ஓர் எழுத்தே, அகமலர்களாகிய ஆதார பங்ககயதந் தோறும் பலவகை யாகக் காட்சிப்படும். அது மூலாதாரத்தில் நிற்பதாயினும், சுவாதிட் டானத்தில் கும்பிக்கப்பட்ட பிராண வாயுவாய் மேலெழுந்து மணி பூரகம் முதலாக விளங்கத் தொடங்கும். சந்திக்காலங்களில் சந்திவழி பாட்டினைத் தவறாது செய்பவர்களுங்கூட, `அவ்வழிபாடு இக்காட்சியை எய்துதற்கு வழி` என்பதை அறிவதில்லை. ஏதோவோர் ஒழுக்கமாகக் கருதி அந்தியிலுங்கூடத் தவறாமல் அவ்வழிபாட்டினை முடித்து, வேறு செயல் செய்யச் சென்றுவிடுகிறார்கள்.
=============================================
பாடல் எண் : 46
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

பொழிப்புரை :  மக்கட் பிறப்பு எடுத்தோர் ஒருதலையாக வணங்குதற்குரிய இத்தந்திரத்தில் தொடக்கம் முதலாகப் பலவிடத்தும் கூறி, இங்கும் கூறப்பட்ட ஓரெழுத்தாகிய பிரணவம், மேற்கூறியவாறு விளங்கி நிற்கும் நிலையைப் பெறுவதற்கு, உயிர்ப்புக்கு இன்றியமை யாததாகிய அம்சமந்திரம் முதலிய பிராணாயாம மந்திரங்களே பற்றுக் கோடாகும். ஆகவே, ஆதார பங்கயங்களில் பிரணவத்தை மேற்கூறியவாறு குற்றமறக் காண வேண்டின், அந்தப் பிராணாயாம மந்திரங்களே ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசமாய் நின்று, மனத்தை ஒருவழிப்படுத்துவனவாகும்.
=============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!