பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==================================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ..................................பாடல்கள்: 030
========================================================(030+089=119)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:02. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:01-23/89)பாகம்-I
பாடல் எண் : 1
இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
பொழிப்புரை : மந்திரங்களைச் செபிக்கும் முறைகளுள் ஒன்றாதல் பற்றி மேலையதிகாரத்துள் பொது வகையாகக் கூறப்பட்ட திருவம்பலச் சக்கரத்தின் இயல்புகளை இனி இவ்வதிகாரத்துள் எண்பத்தொன்பது திருமந்திரங்களால் கூறுகின்றார். சக்கரங்கள் பலவற்றில், நெடுக்கும், குறுக்குமாகப் பன்னிரு, பன்னிரு கீற்றுக்கள் கீற, நூற்றிருபத்தோர் அறைகளாக அமைகின்ற சக்கரத்தில் கூத்தப் பெருமான் விளங்கித் தோன்றுவான்.
=============================================
பாடல் எண் : 2
தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.
பொழிப்புரை : தான்மேலே குறிக்கப்பட்ட பெருமான், ஒன்றி வாழ்தல், நடுவிடத்தை ஒட்டியிருத்தல். தன் எழுத்து சிகாரம். தன்பேர் எழுத்து, தனது திருப்பெயராகிய மூல மந்திர எழுத்துக்கள். அவற்றுள் சிகாரமாகிய ஒன்று முன்னே கூறப்பட்டமையின், இவை ஏனைய நான் கெழுத்துக்களாம். நாற்கோணம், நான்கு திசைகளிலும் இடை வெளியாய் நீண்டு, நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு சக்கரத்தைப் பிரித்து நிற்கும் நேர்க்கோட்டு அறைகள். அவைகளில் ஐந்தெழுத்துக் களும் சிகாரம் முதலாக அமையும். ஒன்றிலே ஒன்றுதல், நடுவணதாகிய ஓர் அறையிலே பொருந்துதல். அரன், `ஹர`: என்னும் மந்திரம். இஃது `ஓம்` என்பதனை முன்னர்க் கொண்டு நிற்கும் என்பது ஆற்றலால் விளங்கும்.
=============================================
பாடல் எண் : 3
அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.
பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை
குறிப்புரை : இதனால், மேற்குறித்த சக்கரத்தின் நடுவண் நிற்கும் `ஹர`: என்னும் மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது. சிவனுக்கு இப்பெயர் பாசங்களைப் போக்குபவனாதல் பற்றி வந்தது. மெய்கண்ட தேவரும் தமது நூலுள் 1 இப்பெயரையே சிறந்தெடுத் தோதினார். `சிவன்` என்னும் பெயரது சிறப்பே இதுகாறும் கூறிவந்தமையின், இதனை இங்குக் கூறல் வேண்டினார்.
=============================================
பாடல் எண் : 4
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.
பொழிப்புரை : எட்டுநிலை, மேற்காட்டிய சக்கரத்துள் நடு அறையைச் சுற்றியுள்ள அறைகள். அவற்றில் சிகாரம் நிற்றல் மேலே கூறப்பட்டது. அவ்வெட்டில் கோணத்திசை (மூலைகள்) நான்கும் ஒழித்து எஞ்சிய நான்கிற்கும் நேர் நேராக நடு அறையுள் மேலைச் சக்கரத்தில் உள்ள `ஹர`: என்பதை நீக்கி ஹும், ஹௌம், ஹம், ஹ: என்பவற்றைப் பிரணவத்திற்கு மேலே பொறிக்கப் பெருமானோடு, பெருமாட்டிக்கும் உரிய சக்கரமாய் விளங்கும்.
=============================================
பாடல் எண் : 5
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.
பொழிப்புரை : தேனோடு மலர்கின்ற இதயத் தாமரையுள் சிவன் அருட் சத்தியுடன் எழுந்தருளியிருக்கும் முறையை மக்கள் அறி கின்றார்களில்லை. அதனை அறிந்து பாசங்களை நீக்கி விட்ட ஆன்ம எழுத்தைச் சிவத்தை ஒருபோதும் விட்டு நீங்காத அருளெழுத்துடன் பிணைக்கவல்லவர் உளராயின், அவரே தம்மைப் பிறவிக்கடலில் வீழ்ந்து அழியாமல் காத்துக்கொள்ள வல்லவராவர்.
=============================================
பாடல் எண் : 6
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.
பொழிப்புரை : இறைவன் தனக்கு இடமாக விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவைந்தெழுத்து, முதற்கண் அவன் அங்ஙனம் எழுந் தருளியிருந்த தூல நிலை போகப் பின்பு அவனுக்கு மிக உவப்பான இடமாக அறியப்படுகின்ற சூக்கும நிலையைத் தனக்கு இடமாகும்படி கொண்டு அதன்கண் மிக விரும்பி எழுந்தருளியிருக்கின்றான்.
=============================================
பாடல் எண் : 7
இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.
பொழிப்புரை : இறைவன் அமர்ந்திருக்கின்ற மேற்சொல்லிய சக்கரத்தில் இருபத்தைந்து அறைகள் அமைந்துள்ள ஒரு பகுதியைத் தனியாக வாங்கித் தனிச்சக்கரமாகக் கொண்டு, அதன் நடுவிடத்தில் மகாரத்தைப் பொறிக்க.
=============================================
பாடல் எண் : 8
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
யகாரம் தலையா இருகண் சிகாரமா
நகார அகாரம்நற் காலது வாமே.
ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
யகாரம் தலையா இருகண் சிகாரமா
நகார அகாரம்நற் காலது வாமே.
பொழிப்புரை : மேற்சொல்லியவாறு நடுவே பொறிக்கப்பட்ட மகாரத்தைச் சூழ வகாரத்தைப் பொறியுங்கள்; பின்பு அவ்விரண்டையும் ஒகாரத்தால் வளைத்து, அவ் ஒகாரத்துள் உகாரத்தைத் தொடங்கி அடுத்த அறைகள் இரண்டிரண்டாகும்படி பிளந்து ஏறக் கீறிப் புறவட்டத்தில் இருபக்கத்து அறைகளைத் தலைகளாகவும், மற்றைய இருபக்கத்து அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு, தலைகளாகின்ற அறைகளில் யகாரத்தையும், கால்களாகின்ற அறைகளில் ஒன்றில் நகாரத்தையும், மற்றொன்றில் அகாரத்தையும் பொறித்து வழிபடுதலையும், செபித்தலையும் செய்யுங்கள்.
=============================================
பாடல் எண் : 9
நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.
பொழிப்புரை : மேற்சொல்லிய தூலசக்கரத்தில்தானே முன் சொன்ன எழுத்துக்களை நீக்கி நடுவிடத்தில் நடுவிலே பிரணவத்தையும், (நடுவிடத்தை இருமுக்கோணத்தின் கூட்டாகக் கருதி) மேல் முக் கோணப் பகுதியில் சிகாரம் நான்கும், கீழ் முக்கோணப் பகுதியில் வகாரம் நான்கும், நடுவிடத்தைச் சூழ்ந்துள்ள உள்வட்டக் கட்டங்கள் எட்டினையும் முன்சொன்ன வாறே பகுதிப்படக் கருதி மேற் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `நம` என்பதனையும், கீழ்ப் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `ய` என்பதனையும், சுற்று வட்டத் தின் (விளிம்பு வட்டத்தில்) மேற் புறத்து இடப்பக்க மூலையிலும், கீழ்ப்புறத்து வலப்பக்க மூலையிலும், `சி` என்பதை நிறுத்தி, அவற்றின் இருபக்கக் கட்டங்களிலும் முறையே, `வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களையும் பொறித்து வழிபட்டுச் செபிக்க.
=============================================
பாடல் எண் : 10
ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.
பொழிப்புரை : `சிவாயநம` என்பதை ஒன்று, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டாம் எழுத்துக்களை முறையே முதலில் வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே மேற்கூறிய சக்கர அறைகளில் பொறிக்கச் சிகாரமே முதலாகத் தொடங்கி, முடிவாகவும் முடியும்.
=============================================
பாடல் எண் : 11
அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி
அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.
அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி
அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.
பொழிப்புரை : இதுமுதல் ஐந்து மந்திரங்களால் பெரியதொரு திருவம்பலச் சக்கரம் கூறுகின்றார். எனவே, இது பேரம்பலச் சக்கரமாம். பெருமை, எல்லா மந்திரங்களும், எல்லா எழுத்துக்களையும் கொண்டிருத்தல். இதனால், முன்னவை சிற்றம்பலச் சக்கரங்களாய் நிற்பனவாம். சிறுமை, சிலமந்திரங்களையே கொண்டிருத்தல். மேற் சொல்லிய வகையில் நெடுக்கில் ஐந்தும், குறுக்கில் ஐந்துமாக இருபத்தைந்து அறைகள் உள்ள சக்கரத்தில் மாதுரு காட்சரங்கள் (மூல எழுத்துக்கள்) ஐம்பதும் அடங்கி நிற்கும். அம்முறையில் உயிரெழுத்துப் பதினாறு, உடலெழுத்து முப்பத்தைந்து (வட மொழி எழுத்துக்கள்) ஆக ஐம்பத்தொன்றினையும் `அ, ஆ` முதலாக முறையே ஓர் அறைக்கு இரண்டாக வைத்துப் பொறித்துவர, ளகாரம் ஈறாக மேற்கூறியவாறு ஐம்பது எழுத்துக்களும் நிரம்பும். அதற்குமேல் ஐம்பத்தொன்றாவது எழுத்தாக நிற்பது க்ஷகாரம். அதனை எல்லா எழுத்திற்கும் பொதுவாகிய `ஹ` என்பதுடன் கீழ்வரிசை அறை ஐந்தில் நடு அறையின் கீழ் வெளியில் பொறித்துவிடல் வேண்டும்.
=============================================
பாடல் எண் : 12
அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம்
அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.
அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம்
அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.
பொழிப்புரை : சதுரத்தில் அமைந்த மேற்கூறிய சக்கரத்திற்கு வெளியே அதனை உள்ளடக்கி `புறம், நடு, உள்` என மூன்று வட்டங்களை வரைந்து, சதுர சக்கரத்தில் அறைகள் உண்டாதற் பொருட்டுக் கீறியுள்ள கீற்றுக்களை வெளியே நிற்கும் புற வட்டம் வரையில் நீட்டி, மேலும் வெற்றவெளியிலும் செல்ல நீட்டி, அக்கீற்றுக்களின் முனைகளைச் சூலவடிவாக ஆக்குதல் வேண்டும். பின்னர் வெற்ற வெளியை ஒட்டிநிற்கும் புறவட்டத்தில் உள்ள அறைகளில் ஒவ்வொன்றிலும் `ஹர` என்பதையும், நடுவட்ட அறைகளில் `ஹரி` என்பதையும், சதுரத்தை அடுத்து நிற்கும் உள்வட்டத்தில் `ஹம்ஸம்` என்பதையும் பொறித்தல் வேண்டும்.
=============================================
பாடல் எண் : 13
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.
சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.
பொழிப்புரை : மேற்கூறிய சூலங்கள் ஒவ்வொன்றின் முனை யிலும் சத்தி பீசம் (ஹ்ரீம்) காணப்படும்; அங்ஙனம் காணப்படுதல் தன்னைச் சூழ நிற்கும் ஓங்காரத்துடனாம்.
இனி ஒரு சூலத்திற்கும், மற்றொரு சூலத்திற்கும் இடையேயுள்ள வெற்றிடங்கள் ஐந்திலும் இடத்திற்கு ஒன்றாக ஐந்தெழுத்துக்கள் பொறிக்கப்படும். இதுவும் மேற்கூறிய சக்கரத்தின் முறையாம்.
இனி ஒரு சூலத்திற்கும், மற்றொரு சூலத்திற்கும் இடையேயுள்ள வெற்றிடங்கள் ஐந்திலும் இடத்திற்கு ஒன்றாக ஐந்தெழுத்துக்கள் பொறிக்கப்படும். இதுவும் மேற்கூறிய சக்கரத்தின் முறையாம்.
=============================================
பாடல் எண் : 14
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.
அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.
பொழிப்புரை : அகார, இகார, உகார, எகார, ஒகாரங்களே மேற் கூறிய அவ் ஐந்தெழுத்துக் களாம். அவ்வெழுத்துக்களையுடைய ஐந்து ஓங்காரங்களே புறவட்டத்திற்கு மேல் மற்றொரு வட்டமாய் நிற்கும். இனி, அறைகளாய் நில்லாது சதுரத்தின் மேல் பொதுவாய் நிற்கும் இடைவெளிகளில் பஞ்சாக்கர பேதங்களுள் ஒன்று எழுதப்பட்டு விளங்கும்.
=============================================
பாடல் எண் : 15
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.
பொழிப்புரை : மேல் ``நம் பேர்`` என்றது சிவமூல மந்திரத்தையாம். அதன் பேதங்களில் இறுதியானதாகிய சிகார வகாரங்கள் இணைந்துநிற்கும் மந்திரம், வளைந்து நிற்கும் வட்டங்கட்கு உள்ளே சதுரத்திற்கும் அவற்றிற்கும் இடையே உள்ள சந்தி அறைகளில் நிற்பதாம். இங்கு எடுத்துக்கொண்ட சக்கரத்தின் இயல்பு இவ்வாறாம்.
=============================================
பாடல் எண் : 16
இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.
பொழிப்புரை : மேற்சொல்லிய சக்கரத்தில் உள்ள மந்திரங்கள் பொறிக்கப்படும் வழியையும், பொறித்து வழிபட வேண்டிய முறைகளையும் அறிந்தால் அவ்வாறு அறிபவர்கட்கு இறைவன் அவர்களது உணர்வு தெளிவுபெறும்படி செய்வான். இனி, அம்மந்திரங்களில் ஒவ்வொன்றும் நிலம் முதலிய மா பூதங்களை வழிபடுவதற்கு அமைந்த வித்துக்களில் (பீசாக்கரங்களில்) ஒவ்வொன்றின் முன்னதாயிருக்கும். அதுவும் அவை எய்தும் வழிகளில் ஒன்றாகும்.
=============================================
பாடல் எண் : 17
ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
பொழிப்புரை : மேற்கூறிய சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத் தெட்டாம் எழுத்துடன் (`ஸ்` என்பதுடன்) ஆறாம் எழுத்தையும், (`உ` என்பதையும்) பதினான்காம் எழுத்தையும் (`ஔ` என்பதையும்) ஏறச்செய்து, (`ஸு` என்றும், `ஸௌ` என்றும் ஆக்கி,) அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் மூன்று மலங்களும் அலறி ஓடிவிடும்.
=============================================
பாடல் எண் : 18
அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.
பொழிப்புரை : சிவனும், சத்தியும் தம்முள் வேறல்லர். ஆதலால், அவருள் ஒருவர்க்கு உரிய பீசங்களிலும், மந்திரங்களிலும் மற் றொருவர் பொருந்தியே நிற்பர். என்றாலும் இருவரையும் வேறுபோல எண்ணி, இருதிறத்து மந்திரங்களையும் செபிக்கின்ற செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.
=============================================
`பாடல் எண்: 19
அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.
பொழிப்புரை : மேற்கூறிய சக்கரத்தில் சந்திகளில் உள்ள குற்றெழுத்துக்களில் முதலாவதாகிய அகாரத்தை வாங்கி அடியிலும், இகாரத்தை வாங்கி முடியிலும் வைத்து இடையில் `ஹர` என்னும் மந்திரத்தை வாங்கியிட்டு நோக்கினால் இலிங்கமாய்த் தோன்றும். ஆதலின் அவற்றை அம்முறைப்படி மூலாதாரம், இருதயம், புருவநடு என்பவற்றில் வைத்துத் தியானித்து மகாரத்துடன் கூட்டிப் பிராணாயாமத்துடன் செபித்தால், கூத்தப்பிரானது ஒளிவடிவு காட்சிப்படும்.
=============================================
பாடல் எண் : 20
அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.
பொழிப்புரை : எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண்டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடிவாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.
=============================================
பாடல் எண் : 21
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.
பொழிப்புரை : மேல், ``அதுவாம் அகார`` என்னும் மந்திரத்தில் (910) கூறப்பட்ட ஐந்தெழுத்து வழியாகவே சிவபிரான் வந்து அமர் கின்றான். அந்த ஐந்தெழுத்தினாலே அவனது பஞ்சாக்கர மந்திர எழுத்துக்களும் அமைகின்றன. ஆகவே, அவ்விருதிற எழுத்துக்களாலும் அமைகின்ற சக்கரங்களிலே அவன் தங்கி நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 22
கூத்தனைக் காணும் குறிபல பேசிடின்
கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாகுமே.
கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாகுமே.
பொழிப்புரை : கூத்தப்பெருமானைப் பருவடிவிற்காண நிற்கும் பொருள்கள் பலவாம். அவற்றுள் மந்திரம் சிறந்தது ஆதலின், அவற்றுள் தலையானதாகிய மந்திரத்தை முதலெழுத்தளவில் ஓதினாலும் அப்பெருமானோடு ஒற்றித்து நிற்கும் உணர்வை மக்கள் பெறுவார்கள். ஆகவே, இதுகாறும் சக்கர வடிவில் மந்திரங்களைக் கூறி வந்ததன் குறிக்கோள் அப்பெருமானை அடைவிப்பதேயாம்.
=============================================
பாடல் எண் : 23
அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.
பொழிப்புரை : மேற்காட்டிய சக்கரங்களில் யாதானும் ஒன்றில் உணர்வை நிறுத்திப் பிராணாயாமத்தால் மூலாதாரத்தில் உள்ள அனலை ஓங்கி எழச்செய்து, சக்கரத்தில் உள்ள எழுத்துக்களில் நகாரத்தைச் செபித்தால், அச்சக்கரத்தில் மறைந்து நிற்கும் கூத்தப் பெருமானை அந்த நகாரத்திற்கு உரியவளாகிய திரோதன சக்தி அச்சக்கரத்திலே பொருந்தச் செய்வாள்.
=============================================
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!