Search This Blog

Feb 19, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:5,6&7. பதிகம் 5. பிரளயம் (பாடல்:2), பதிகம் 6.சக்கரப் பேறு(பாடல்:04)& 7.எலும்பும் கபாலமும்(பாடல்:01)

 (



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  


இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ..பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009


இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்...............பாடல்கள்: 001 
=================================================================
இரண்டாம் தந்திரம்–பதிகம் எண்: 5. பிரளயம்(பாடல்கள்-05)

பாடல் எண் : 1
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 
பொழிப்புரை :கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.
=============================================
பாடல் எண் : 2
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

பொழிப்புரை :சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறியவாறு அனற்பிழம்பாய்த் தோன்றியபொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப்பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.
=============================================
பாடல் எண் : 3
தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடிபுகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.
=============================================
பாடல் எண் : 4
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. 

பொழிப்புரை :சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான். இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை ஏற்குமாற்றாற் கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் ஒருபெற்றியனாய் நிற்பவனும் ஆகிய அப்பெருமானை அத்தன்மையன் என்று அறிந்து துதித்து உளத்துள் இருத்த வல்லவர் இவ்வுலகத்து உளரோ! இல்லை.
=============================================
பாடல் எண் : 5
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொழிப்புரை :சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ் வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக் கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.
=============================================
இரண்டாம் தந்திரம்-பதிகம் எண்:6. சக்கரப்பேறு(பாடல்கள்-04)

பாடல் எண் : 1
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

பொழிப்புரை :`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.
=============================================
பாடல் எண் : 2
சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே. 

பொழிப்புரை :சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.
=============================================
பாடல் எண் : 3
கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொழிப்புரை :சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.
=============================================
பாடல் எண் : 4
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

பொழிப்புரை :தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

=============================================
இரண்டாம் தந்திரம்-பதிகம் எண்:7. எலும்பும் கபாலமும்(பாடல்கள்-01)
பாடல் எண் : 1
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. 

பொழிப்புரை :இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.
=============================================








மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!