(
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்.....................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு .பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
=================================================================
இரண்டாம் தந்திரம்-பதிக எண்:3. இலிங்க புராணம்(பாடல்கள்:6)
பாடல் எண் : 1
அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.
பொழிப்புரை : உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.
=============================================
பாடல் எண் : 2
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.
பொழிப்புரை : `முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார்பால் அருளுடையவனாய் நின்று அவரவர்க்குத் தக்கவகையில் அவன் அருள் செய்வான்.
=============================================
பாடல் எண் : 3
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.
பொழிப்புரை : மிக்க வலிமை பொருந்தித் தம்மில் போர்செய்த பிரமன், திருமால் என்னும் இருவரும் தம்முன் தீப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானைப் பின்பு இலிங்கத் திருமேனியில் நெடுங்காலம் வழிபட, அவர்கட்குச் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல் களைச் செய்யுமாறு அருள்புரிந்தான்.
=============================================
பாடல் எண் : 4
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.
பொழிப்புரை : சிவபெருமான் தனது கயிலைப்பெருமலையைத் தூக்கி எறியக்கருதி இருபது தோள்களாலும் மேல் எழுமாறு தாங்கி எடுத்த இராவணனது நிகரில்லாத பேராற்றலைத் தனது கால் விரலால் விரைய ஊன்றி அவன், இறைவனே என்று அழைத்து அலறி முறையிட்டபின் அவனை விடுத்து, அழிவில்லாத வரத்தையும் கொடுத் தருளினான்.
=============================================
பாடல் எண் : 5
உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.
பொழிப்புரை : `செய்யத்தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்குவதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.
=============================================
பாடல் எண் : 6
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.
பொழிப்புரை : தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.
=============================================
இரண்டாம் தந்திரம்–பதிக எண்:4. தக்கன் வேள்வி (பாடல்கள்-09)
பாடல் எண் : 1
தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
பொழிப்புரை : தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.
=============================================
பாடல் எண் : 2
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.
பொழிப்புரை : வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன்போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.
=============================================
பாடல் எண் : 3
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
பொழிப்புரை : மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவநிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்ய முற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோடேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.
=============================================
பாடல் எண் : 4
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.
பொழிப்புரை : மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய்தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனாகிய அக்கினி தேவன், ஏனை இடங்காலங்களிற் போலவே தன் கடமையுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.
=============================================
பாடல் எண் : 5
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.
பொழிப்புரை :: அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளியாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.
=============================================
பாடல் எண் : 6
அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
பொழிப்புரை : சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலைமகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.
=============================================
பாடல் எண் : 7
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
பொழிப்புரை : தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூசுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.
=============================================
பாடல் எண் : 8
நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
பொழிப்புரை : நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.
=============================================
பாடல் எண் : 9
நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.
பொழிப்புரை : சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே யன்றோ!
=============================================
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!