பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்
பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்
பதிகம் :1. சிவபரத்துவம் (பாடல்கள்29-42/56) பகுதி-III
பாடல் எண் : 29
பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
பொழிப்புரை : பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.
****************************************************
பாடல் எண் : 30
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
பொழிப்புரை : சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 31
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.
பொழிப்புரை : பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.
****************************************************
பாடல் எண் : 32
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
பொழிப்புரை : எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்.
****************************************************
பாடல் எண் : 33
நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
பொழிப்புரை :சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.
****************************************************
பாடல் எண் : 34
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.
பொழிப்புரை : யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.
****************************************************
பாடல் எண் : 35
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.
****************************************************
பாடல் எண் : 36
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
பொழிப்புரை : கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.
****************************************************
பாடல் எண் : 37
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
பொழிப்புரை : சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத் தோடு ஒப்பச் செய்யப்பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத்தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.
****************************************************
பாடல் எண் : 38
போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே
பொழிப்புரை : சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.
****************************************************
பாடல் எண் : 39
அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
பொழிப்புரை : சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 40
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
பொழிப்புரை : தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.
****************************************************
பாடல் எண் : 41
விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.
பொழிப்புரை : கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.
****************************************************
பாடல் எண் : 42
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
பொழிப்புரை : `அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.
*************************************************
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!