Search This Blog

Feb 4, 2012

திருமந்திரம்-தந்திரம்01/01:(பாடல்:15-28/56) பகுதி-II சிவபரத்துவம்




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் 

பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார். 
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39


முதல் தந்திரம்: 27-பதிகங்கள்1. சிவபரத்துவம் (56-பாடல்கள்)



பாடல் எண் : 15
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொழிப்புரை சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; அவ் வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 16


முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே

பொழிப்புரைஉயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.
****************************************************
பாடல் எண் : 17
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே

பொழிப்புரைகண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 18
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே..

பொழிப்புரை :  உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்துவருகின்றான்.
****************************************************
பாடல் எண் : 19
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொழிப்புரை : `நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.
****************************************************
பாடல் எண் : 20
காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே.

பொழிப்புரை : `இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 21
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொழிப்புரை :சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

****************************************************
பாடல் எண் : 22
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே..

பொழிப்புரையாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.
****************************************************
பாடல் எண் : 23
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே..

பொழிப்புரை :   `அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 24
இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே

பொழிப்புரை :  மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

****************************************************
பாடல் எண் : 25
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.

பொழிப்புரைமேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.
****************************************************
பாடல் எண் : 26
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.



பொழிப்புரை :    `வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.


****************************************************
பாடல் எண் : 27
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

பொழிப்புரை :   மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 28
தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே.

பொழிப்புரை :   சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.
*************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!