Search This Blog

Feb 3, 2012

திருமந்திரம்> பாயிரம்(பாடல்கள்:01-10/39)பகுதி-01:



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்:
39 ... 40
பத்தாம் திருமுறை : திருமூலர் - திருமந்திரம் :  237 பதிகங்கள், 3000 பாடல்கள் : பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்.
பாயிரம்: பாடல்கள் 39 (முதல் பகுதி: 1- 10 )

பாயிரம்
பாடல் எண் : 1
கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

பொழிப்புரை :  ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
****************************************************
பாடல் எண் : 2
நுதலிய பொருள்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொழிப்புரை :  மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!
****************************************************
பாடல் எண் : 3
நூற் சிறப்பு

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 4
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொழிப்புரை :  மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத் தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத் திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 5

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
 
பொழிப்புரை :  எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்ப வற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொரு ளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.
****************************************************
பாடல் எண் : 6

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
 
பொழிப்புரை :  நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடு கூட எண்மருமாவர் என்பதாம்.
****************************************************
பாடல் எண் : 7

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
 
பொழிப்புரை :  நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 8

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

பொழிப்புரை :  எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.
****************************************************
பாடல் எண் : 9

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.
 
பொழிப்புரை :  நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.
****************************************************
பாடல் எண் : 10

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
 
பொழிப்புரை :  பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான்மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோகமாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.
****************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!