Search This Blog

Jan 24, 2012

சிவவாக்கியம் (506-510) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (506-510)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -506
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்து ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் ஒன்றுமே சிவாயமே.   
           

உண்மையான மந்திரமான ஓரெழுத்து ஒளியாகிய சோதியில் இருக்கின்றது. அச்சோதியிலிருந்து ஐம்பூதத் தன்மைகளால் ஐந்தெழுத்து மந்திரமாக அமைந்து அதனாலேயே உருவம் ஆகி உடம்பு வந்தது. அதிலிருந்தே வெண்மையான நீராக விளைந்து அதுவே மந்திரமான நீராக நிற்கின்றது. இவை யாவையும் உங்களுக்குள் நன்கு ஆய்ந்தறிந்து மெய்யிலே ஒன்றான ஓரெழுத்து மந்திரமே உண்மையான சிவம் என்பதை உணர்ந்து கொண்டு அந்த ஒன்றிலேயே ஒன்றி தியானம் செய்யுங்கள்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -507
பண்ணிரண்டு நாணிருத்திப் பஞ்ச வண்ணம் ஒத்திட
மின்னி யவ் வெளிக்குள் நின்று வேறேடுத் தமர்ந்து
சென்னியான தலத்திலே சீவனின்றி மாங்கிடும்
பன்னியுண்ணி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே.

பண்ணிரண்டு அங்குல அளவு வெளியேறும் மூச்சுக் காற்றை வில்லில் உள்ள நாணில் அம்பை ஏற்றி விடுவது போல் மேலேற்றி வாசியாக்கி ஐந்து வண்ணங்கள் கொண்ட பரமன் திருவடியில் சேர்த்து இருத்தி அதிலேயே ஒத்து ஒன்றாக்கி இருங்கள். சோதியானது மின்னிக் கொண்டு யகாரமான ஆகாயவெளிக்குள் நின்று அங்கிருந்து வேராக இறங்கி அமர்ந்து இருக்கின்றது. சென்னியான தலையில் தான் சீவனாகிய உயிர் நின்று இயங்குகின்றது. இதனை நன்கு அறிந்து அத்தலத்திலேயே யோக ஞான சாதகம் செய்து அதைய உன்னிப்பாய் ஆராய்ந்து தியானிப்பவர் பரம்பொருளான ஈசனோடு சேர்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள்.  
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -508
தச்சு வாயிலுச்சி மேல் ஆயிரந் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரமதாகியே வளர்ந்து நின்ற தெவ்விடம்
இச்சுடரும் இந்திரியமும் ஏகமான தெங்
னே
                       
உடம்பின் தலை உச்சியில் மேல் ஆயிரம் இதழ் கமலமான சஸ்ரதலத்தில் சூரிய சந்திர அக்னி என்ற முச்சுடரிலும், ஆறு ஆதாரங்களிலும் மூண்டெழுந்த தீச்சுடராகிய சோதி சூட்சமாய் வச்சிர தேகமாகி சாகாத் தலையாக வளர்ந்து நின்றது நமக்குள் எந்த இடம் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். இந்த மூன்று தீயும், பஞ்சேந்திரியங்களும் ஏகமான மெய்ப்பொருளில் அமைந்திருப்பது எவ்வாறு என்பதை நன்கு அறிந்து அந்த பொருளிலேயே ஏகமாகி நின்று தியானியுங்கள்.       
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 509
முத்தி சித்தி தொந்தமாய் முயுங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த வைம்புலன்களாகு மத்திமப் புலன்
அத்தனித்த கால கண்டரன்பினால் அனுதினம்
உச்சரித்து ளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே

முத்தி தருவதற்கும் சித்தி அளிக்கவும் வல்ல ஈசன் நமக்குள் சொந்தப் பொருளாக இயங்குகின்ற மூர்த்தியாக இருக்கின்றான். அதை வைத்தே உதித்த மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களில் நடுவாக இருக்கின்றான். மார்க்கண்டேயனைக் காக்க எமனை எட்டி உதைத்த காலகண்டரான அப்பனே அணுதினமும் அன்பினால் உங்கள் உள்ளத்திலேயே சிவயநம என உச்சரித்து அவனையே எண்ணித் தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். அந்த நடுவாக நின்ற ஒன்றே எமனை உதைத்த திருவடி என்பதை உணர்ந்து அந்த ஒன்றையே பற்றியிருந்து மரணத்தை வெல்லுங்கள்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 510
அண்ணலார் அனாதியாய் அனாதிமுன் அனாதியாய்
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதாகு முன்னல்லோ
கண்ணிலானின் சுக்கிலம் கருத்தொடுங்கி நின்ற பின்
மன்னுளோரும் விண்ணுளோரும் வந்த வார தெங்
ஙனே.
          
அண்ணலாகிய ஈசனே அனாதியானவன். நம்முள் அனாதியாகிய மெய்ப்பொருளுக்கு முன் உள்ள அனாதியாய் இருக்கின்றான். பெண்ணும் ஆணும் இணைந்ததனால் உருவாகும் உயிர் பிறப்பதற்கு முன்பு பெண்ணுமின்றி ஆணுமின்றி ஒன்றான ஆன்மாவாகவே இருந்தது. கண்ணில் ஆணியாக சுக்கிலம் நினைவிலேயே ஒடுங்கி நின்றது. இதன் பின்னரே கருவில் உருவாகி உயிர் வளர்ந்து பிறக்கின்றது. இப்படி நீரினால் தான் மண்ணில் வந்த மனிதர்களும் விண்ணில் உள்ள தேவர்களும் தோன்றியுள்ளார்கள். வந்த அவ்வழியை அறிந்து அதிலேயே ஒடுங்கி தியானித்திருங்கள்.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 

2 comments:

  1. ஓம்நமச்சிவாய 🙏🙏

    ReplyDelete
  2. மிக்க வந்தனங்களும், இனிய வாழ்த்துக்களும்.

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!