Search This Blog

Jan 3, 2012

சிவவாக்கியம் (371-375) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (371-375)
 
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -371
பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணா கையின் மேவியே
பிறந்ததே யிறந்த போதிற் பீடிடாம
ற் கீயிலே
சிறந்து நின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.   
   

உடம்பை துறந்து பறந்த சிவம் பாய்ச்சலூர் வழியிலே சென்றதை அறிந்து கொள்ளுங்கள். வாசி யோகத்தினால் வாணர்கை யாழிசையைப் போல் இடைவிடாது ஏற்றுங்கள். பிறப்பதும் இறப்பதும் அற்று மரணமிலாப் பெரு வாழ்வு பெற 'கீ' எனும் சிகாரத்தில் சோதியாக சிறந்து நின்ற மௌனத்தில் இருந்து தவம் புரிந்து சிவத்தை தெளிந்து சேருங்கள். 


***************************************************
சித்தர் சிவவாக்கியம் -372
வடிவு பத்ம ஆசனத்திருத்தி மூல அனலையே
மாருதத்தினலேழுப்பி வாசலைந்து நாலையும்
முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால்
முளரி ஆலயங் கடந்து மூல நாடி யூடுபோம்.
 

பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை அனலாக்கி வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒக்க அடைத்து யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றுங்கள். மூன்று மண்டலங்களைக் கடந்து மூலநாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை சேருங்கள்.
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -373
அடி துவங்கி முடியளவு ஆறு மாநிலங் கடந்து
அப்புறத்தில் வெளி கடந்த ஆதியெங்கள் சோதியை
உடுபதிக்கணமுதருந்தி யுண்மை ஞான உவகையுள்
உச்சிப் பட்டிறங்குகின்ற யோகி நல்ல யோகியே.
 
அடியெனும் மூலாதாரத்திலிருந்து முடி எனும் சகஸ்ரதளம் வரை வாசியை ஆறு ஆதாரங்களையும் கடந்து செலுத்த வேண்டும். முப்பாழுக்கப்பாலாய் அப்புறத்தில் வெளிக்கு உள் கடந்த வெளியில் ஆதியாக விளங்கும் எங்கள் சோதியில் வாசியை சேர்த்து தியானிக்கவேண்டும், அதனால் அமிர்த கலை இயங்கி அம்பிகையின் அமிர்தம் உண்ணாக்கில் இறங்கி உண்மையான ஞான ஆனந்தம் கிட்டி உச்சி முதல் பாதம் வரை உடம்பு முழுவதும் இறங்க வைத்து தியானம் செய்யும் யோகியே நல்ல யோகி என்பேன். 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 374
மந்திரங்களுண்டு நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்களாவதும் மரத்திலூற லன்று கான்
மந்திரங்களாவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை யுண்டவர்க்கு மரணமேதுமில்லையே    
  . 
மந்திரங்கள் உண்டு என்பதை அறிந்து அது எது என்பதை அறியாமல் பல மந்திரங்களை ஓதி மயங்குகின்ற மாந்தரே! மந்திரங்கள் என்பது மனதின் திடமே. மந்திரங்கள் மரத்தில் ஊர்வன ஊர்ந்து ஏறுவது போல் மனம் உடம்பில் ஊர்ந்து எழுந்து மெய்ப்பொருளை சேரவேண்டும் என்பதை கண்டு கொள்ளுங்கள். மந்திரங்களை உச்சரிக்கும் தொனியில் ஓத ஓத அது மூலாதாரத்தில் பாம்பு போல் சுண்டு கிடந்த குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து தனஞ்செயன் என்ற பத்தாவது வாயுவை கிளப்பி மேலேற்றி உணர்வுறு மந்திரத்தில் சேர்ப்பதுவே உண்மையான மந்திரம். அந்த மந்திரத்தால் கிடைக்கும் அமுதத்தை உண்டவர்கள் மரணம் என்பதை வென்று பிறவாநிலை பெற்று ஈசனை அடைவார்கள்.   
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 375
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்ற நீர் மரித்தபோது சொல்வீரோ
மந்திரங்கள் உம்முளே மதித்த நீறும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தினைத் தெழுத்துமே.

மாந்திரங்கள் யாவையும் செம்மையுற கற்று மனப்பாடம் செய்தும் உண்மை உணராது மயங்குகின்ற மாந்தர்களே! இத்தனை சாத்திர மந்திரங்கள் கற்ற நீங்கள் மரணமடைந்த போது அதனை சொல்லி மீண்டு வர முடியுமா? மந்திரமாக இருப்பதும் உனக்குள்ளே உள்ள ஊமையெழுத்தே. அதுவே யாவரும் மதிக்கும்படி நீராக உள்ள உயிர் நின்றதும் உனக்குள்ளே உள்ள ஒரேழுத்து மந்திரமே. மந்திரங்கள் ஆவது மனதின் திடமாகி நினைவான ஒரெழுத்தில் உள்ள பஞ்சாட்சரமே என்பதை அறியுங்கள்.
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!