Search This Blog

Jan 2, 2012

சிவவாக்கியம் (366-370) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (366-370)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -366
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே     
பிறந்ததே பிராணனன்றிப் பெண்ணு மாணு மல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூய துங்க மானதோ
இறந்தபோ திலன்றதே இலங்கிடுஞ் சிவாயமே.
   

பறந்து கொண்டு நின்ற உயிர் இறந்த போது பாய்ச்சலாக சென்றது பத்தாம் வாசல் வழியிலே பிறக்கும் பொது உயிர் பிராணனாகவே இருந்தது அது இறையருலாலேதான் பெண்ணாகவும் ஆணாகவும் பிறந்தது. அவ்வுடம்பில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல அழியும் அல்லாமல் நின்றது. அப்பிரா
னே உடலுக்குள் அமைந்து சிறந்த தூய தங்கமாக மிளிர்ந்தது. உடம்புக்குள் உலாவி சிறந்து நின்ற உயிரானது இறந்த போதில் எங்கு அகன்றது என்பதை சிந்தியுங்கள். அனைத்தும் சிவம் இருந்தே ஆட்டுவித்தது என்பதை உணருங்கள், ஆகையால் உடம்பில் இருந்து பறந்து கொண்டிருந்த உயிர் பாய்ச்சலூர் வழியே பறந்து செல்வதை அறிந்து அவ்வழியிலேயே நின்று சிவத்தைக் கண்டு அது நம் உடம்பில் இருக்கும் போதே உணர்ந்து தியானியுங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -367
அருளிருந்த வெளியிலே அருக்கநின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியன்கிநின்ற வாலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும் ஹீயுமானதே.


சிவத்தின் அருள் இருந்தது வெளியாகிய ஆகாயத்தலத்தில். சூரியன் நின்றிருப்பது இருளாகிய மனத்தில். மெய்ப்பொருளாக இருந்தது சுழியாகிய பிரமத்தில், குண்டலினி விழிப்படைந்து புரண்டு எழுந்து மேலேறுவது சுழிமுனை வழியில். இதனை எல்லாம் நன்குணர்ந்து தெளிவு பெற்று வாசிகலையால் அறிவையும் உணர்வையும் நினைவால் ஒன்றிணைத்து தியானியுங்கள். இவை எல்லாம் இயங்கி நின்றது வாலையில்தான் என்பதை குரு இருந்து சொல்லித்தரும் சூட்சும வழியில் நின்று அகாரத்திலிருந்து உகாரத்தை ஹூ எனும் நாதத்தால் ஏற்றி ஹீ எனும் சிகாரத்தில் சேர்ப்பதை தெரிந்து தியானியுங்கள்.
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -368
ஆன தொரெழுத்திலே அமைந்து நின்ற ஆதியே
கானமோடு தாளமீதிற் கண்டறிவ தில்லையே
தானுந் தாணு மானதே சமைந்த மாலை காலையில்
ஏனலோடு மாறுபோல் விரிந்ததே சிவாயமே.
 
சிகாரத்தினால் ஆன ஒரெழுத்தில் அமைந்து நின்ற ஆதியை கானல் நீரைப் போல் தன்னுள்ளேயே இருந்ததை இப்பூமியில் யாரும் கண்டு அறியாமல் இருக்கின்றார்களே. தானாகவே ஆகி தானாக நின்ற அதனை இராப்பகல் இல்லாத இடத்தே கண்டு காலையும் மாலையும் கருத்துடன் ஊன்றி தியானியுங்கள். அது நெருப்பாறாக ஓடி விரிந்து சேர்ந்த இடமே சிவம் என்பதை கண்டு அறிந்து கொள்ளுங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 369
ஆறு கொண்ட வாரியு மமைந்து நின்ற தெய்வமுந்
தூறு கொண்ட மாறியுந் துலங்கி நின்ற தூபமும்
வீறு கொண்ட மோனமும் விளங்குமுட் கமலமும்
மாறு கொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே.
  . 
ஆறு உட்கொண்ட திருப்பாற்கடலும், அதில் அமைந்து நின்ற தெய்வமும், தூய்மை கொண்டு விளங்கும் மழை நீராகவும் விஸ்வரூப காட்சியாக உள்ள மௌனமாகி பிரமமும், உள்ளத்தாமரையாக விளங்கும் மனமும் எல்லாம் ஒன்றாகி அகார உகாரத்தில் மறைந்து சிவமாகும். 
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 370
வாயில் கண்ட கோணமில் வயங்கு மைவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்ததுந் தலை மன்னா யுரைந்ததுங்
காயவண்டு கண்டதுங் கருவூரங்குச் சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே.

வாயிலாக விளங்கும் கோயிலைக் கண்டு அக்கோனாகிய இடத்திலேயே ஐந்து பூதங்களும் இருந்து கொண்டு அவ்வீசனின் சாயலான சோதியைக் கண்டு அதிலேயே தியானித்து நில்லுங்கள். தலையில் மன்னனாக உறைந்து நின்ற அதாலேயே காயமாகிய உடம்பு தோன்றி கருவாக வளர்ந்தது. அவ்வுடம்பில் இருந்த உயிர் போனதும் பறந்து நின்ற சிவம் பாய்ந்து மறைந்தது.
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!