தேவாரத் திருவாசகங்கள்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் முதற்கண் வகைப் படுத்தப்பட்டுள்ள எட்டுத் திருமுறைகளைத் தேவாரத் திருவாசகங்கள் என்று கூறுவர். சைவத் திருமுறைகள் என்ற முந்தைய பதிவில் ஒன்பது, பத்து, பதினொராம் திருமுறைகள் தொடர்பான செய்திகள் திரட்டி வழங்கப்பட்டன. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் தொடர்பான விரிவான விளக்கம் அடுத்து வரும் பதிவில் விளக்கப்படவுள்ளது.
எனவே, தேவாரத் திருவாசகங்கள் என்ற இப்பதிவில் மூவர் தேவாரம் மற்றும் திருவாசகம் குறித்த செய்திகள் தொகுத்து உரைக்கப்பட உள்ளன. நூலாசிரியர்களின் சுருக்கமான வரலாறு, காலம்-நூல் அமைப்பும் பகுப்பும், நூற் செய்திகள், தமிழ்ச் சைவ சமய வரலாற்றிலும் தமிழ் இசை வரலாற்றிலும் இவற்றிற்கு உரிய இடம், தம் காலத்திற்குப்பின் இப்பனுவல்கள் சமய - சமூக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் முதலியன இப்பதிவில் முறையாக விளக்கி உரைக்கப்பட உள்ளன.
கடந்த பதிவில் http://keyemdharmalingam.blogspot.com/2012/01/blog-post_22.html நாம் கண்டது:தேவாரத் திருவாசகங்கள் (பகுதி-1) என்ற தலைப்பில் தேவாரம் தொகுக்கப்பட்டமை, தேவாரம் - பன்முறை - தலைமுறை மற்றும் தேவார பண்கள். மேலும் திரு ஞானசம்பந்தர் என்ற தலைப்பில் சம்பந்தரின் வரலாறு, முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளைப் பற்றியும், புதிய யாப்பு வகை குறித்தும் கண்டோம். இப்பதிவில் நாம் காணவிருப்பது: திருநாவுக்கரசர் குறித்தும் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளையும் பொதுத் திருத்தாண்டகங்களைக் குறித்தும் இவ்விரண்டு பதிவுகளிலும் நாம் குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டியவைகளையும் கண்போமாக.
: திருநாவுக்கரசர் வரலாறு : THIRUNAAVUKKARASAR
தேவார மூவருள் இரண்டாமவர் திருநாவுக்கரசர். இவர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரில் அவதரித்தார். வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் வந்த புகழனார் -மாதினியார் என்ற பெற்றோரின் மகவாகத் திலகவதியாருக்குப் பின் வந்தவர்
இளமைப் பெயர் மருள் நீக்கியார். சமண சமயத்தில் தலைமை பெற்ற போது அமைந்தது தருமசேனர் என்ற பெயர். திருவதிகையில் சிவபெருமான் வழங்கியது நாவுக்கரசு என்பது. திருஞானசம்பந்தர் முறையிட்டு அழைத்தது அப்பர் என்பது. சமணம் சென்று சைவம் மீண்ட போது திருநாவுக்கரசர் பாடிய முதல் திருப்பதிகம் ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்குவது. பல்லவ வேந்தன் அழைப்பை மறுத்துப் பாடியது " நாமார்க்கும் குடியல்லோம்" என்று
இளமைப் பெயர் மருள் நீக்கியார். சமண சமயத்தில் தலைமை பெற்ற போது அமைந்தது தருமசேனர் என்ற பெயர். திருவதிகையில் சிவபெருமான் வழங்கியது நாவுக்கரசு என்பது. திருஞானசம்பந்தர் முறையிட்டு அழைத்தது அப்பர் என்பது. சமணம் சென்று சைவம் மீண்ட போது திருநாவுக்கரசர் பாடிய முதல் திருப்பதிகம் ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்குவது. பல்லவ வேந்தன் அழைப்பை மறுத்துப் பாடியது " நாமார்க்கும் குடியல்லோம்" என்று
அப்பூதி அடிகளின் மகனை உயிர் பெறச் செய்தது; திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது; திருமறைக் காட்டில் மறைக்கதவம் திறந்தது; கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் கண்டு மகிழ்ந்தது; திருப்புகலுரில் இறைவன் திருவடிகளில் ஒரு சித்திரைச் சதயநாளில் கலந்தருளியது என்பன இவரது வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்வுகள். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரோடு ஒரே காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி.
நான்காம் திருமுறை:
திருநாவுக்கரசர் அருளியனவாக இன்று கிடைத்துள்ள பதிகங்கள் 312. தேவாரப் பாடல்களின் எண்ணிக்கை 3066. திருநாவுக்கரசரின் நான்காம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகங்களைத் திருநேரிசை என்றும் குறிப்பர். இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள பதிகங்கள் 113. பாடல்கள் 1070. நான்காம் திருமுறையுள் 50 சிவத்தலங்களுக்கு உரிய பதிகங்கள் இடம் பெற்றுள்ளன.
கொல்லி (1) திருநேரிசை (58) திருவிருத்தம் (34) (இவ்விருவகைப் பாடல்களும் (62) கொல்லிப்பண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன) 3. காந்தாரம்(6) 4. பியந்தைக் காந்தாரம் (1) 5.சாதாரி (1) 6. காந்தார பஞ்சமம் (21). பழந்தக்கராகம் (2) 8.பழம் பஞ்சுரம் (21) 9. சீகாமரம் (2) 10. குறிஞ்சி (1) என நான்காம் திருமுறையுள் 10 பண்கள் இடம் பெற்றுள்ளன. இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்கள் ஒன்பது இடம் பெற்றுள்ளன. சைவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் இத்திருப்பதிகங்கள் குறித்த விளக்கங்களைக் கீழே உள்ள அட்டவணை விளக்கி நிற்கிறது.
1. சூலை நோய் நீக்கியது - திருவதிகை (தலம்) = துவக்கம் : கூற்றாயினவாறு.
2. நீற்றறையில்பிழைத்தது -திருப்பாதிரிப்புலியூர் (தலம்) = துவக்கம் :மாசில் வீணை
3. யானை இடறவந்த போது பாடியது - திருப்பாதிரிப்புலியூர் (தலம்) - துவக்கம் : சுண்ணவெண் சந்தன
4. கல் மிதக்கப் பாடியது - திருப்பாதிரிப்புலியூர் (தலம்) - துவக்கம் :சொற்றுணை வேதியன்
5. மறைக்கதவம் திறப்பித்தது - திருமறைக்காடு (தலம்) - துவக்கம் : பண்ணின் நேர்மொழி.
6. அப்பூதி மகனை உயிர்ப்பித்தது - திங்களூர் (தலம்) - துவக்கம்: ஒன்றுகொலாம்
7.சூல-இடபக்குறிகளைப் பெற்றது (தோள்மீது சிவபெருமானுக்கு உரிய சூலம் மற்றும் இடபத்தின் வடிவத்தைப் பொறித்தல்) - திருத்தூங்கானை மாடம் (தலம்) - துவக்கம் : பொன்னார் திருவடிக்கு,
8. திருவடிசூட்டப் பெற்றது -திருநல்லூர் (தலம்) - துவக்கம் : நினைந்து உருகும்
9. கயிலைக்காட்சிகண்டது - திருவையாறு(தலம்) - துவக்கம் : மாதர் பிறைக்கண்ணி
நான்காம் திருமுறை - சில காட்டுகள்:திருநாவுக்கரசர் பாடல்களில் பத்திமையும், அனுபவ முதிர்வும், தன்னிலை இரக்கக் குறிப்பும் (தன்நிலையை எண்ணி வருந்தும் போக்கு) மிகுந்திருக்கும். எடுத்துக் காட்டுகளாகச் சில தொடர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சலம் பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்...............(4164)
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை................................................(4169)
உற்றார் ஆருளரோ உயிர் கொண்டுபோம்பொழுதுகுற்றாலத்து உறை கூத்தன் அல்லால்நமக்கு உற்றார் ஆருளரோ ?.................(4249)
நான்காம் திருமுறையில், தலங்களில் பாடிய பதிகங்களோடு, திருநாவுக்கரசர் பாடிய பொதுப்பதிகங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.
ஐந்தாம் திருமுறை :
திருநாவுக்கரசரின் ஐந்தாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ள பதிகங்களைத் திருக்குறுந் தொகை எனக் குறித்துள்ளனர். இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள பதிகங்கள் 100. பனுவல்கள் 1015. பாடப் பெற்ற சிவத்தலங்கள் 76. இத்திருமுறைப் பாடல்களை இயல் தமிழ்ப் பாடல்களாகவே கொள்ள வேண்டும். ஆயினும் நடைமுறையில் இவை இந்தளப் பண்ணில் பாடப்பெற்று வருகின்றன. எளிய இனிய சொற்களால் இத்திருமுறைப்பாடல்கள் அமைந்
துள்ளன. சைவப் பெரு மக்கள் பெரிதும் போற்றும் அரிய பல தொடர்களும், பாடல்களும், பதிகங்களும் இத்திருமுறையுள் அமைந்துள்ளன.
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே....(5440)
என இறையவர்களைப் பகுத்து ஆய்ந்து அருளும் திறமும்,
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே....(6118)
இறைவனை வாழ்த்தி வணங்காது நாள்களைக் கடத்துவார் மீது பரிவு கொண்டு தன்மேல் வைத்துப்பாடும் கருணையும்,
விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே....(6121)
எனச் சிவ பரம்பொருளை அடைதற்கு உரிய நெறிமுறைகளை உணர்த்தும் பனுவல்களும் என ஐந்தாம் திருமுறை அரிய சமயக் களஞ்சியமாக அமைந்துள்ளது.
ஆறாம் திருமுறை:
திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையைத் திருத்தாண்டகம் எனக் கூறுதல் வழக்கு. இவரைத் ‘தாண்டக வேந்தர்’, ‘தாண்டகச் சதுரர்’ எனப் பின் வந்தோர் போற்றினர். இதில் 99 பதிகங்களும் 981 திருத்தாண்டகங்களும் இடம் பெற்றுள்ளன. 65 சிவத்தலங்களில் பாடப்பட்ட பதிகங்களும், பல பொதுப் பதிகங்களும் இதனுள் இடம் பெற்றுள்ளன. தாண்டகம் என்பது ஒவ்வோர் அடியிலும் அறுசீர்களோ அல்லது எட்டுச்சீர்களோ அமையக் கடவுளையோ அல்லது ஆண் மக்களையோ நான்கு அடிகள் அமையப் பாடும் அமைப்பு உடையது. அறுசீரான் அமைவது குறுந்தாண்டகம். எண் சீரான் அமைவது நெடுந்தாண்டகம்.
பொதுத் திருத்தாண்டகங்கள்:
திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம் பெருஞ் சிறப்புமிக்கது. தமிழ்நாட்டுச் சைவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுவது. எளிய இனிய சொற்களால் இயற்றப்பட்டுள்ளது. வடமொழி வேத மந்திரங்களுக்கு இணையாகத் தமிழில் போற்றிப் பனுவல்கள் பலவற்றைக் கொண்டு இயங்குவது. நெஞ்சத்தை விட்டு அகலாத பல அரிய தொடர்களை உள்ளடக்கியது. தலங்களுக்கு உரியன அல்லாது பல பொதுத்தாண்டகப் பதிகங்களும் ஆறாந்திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. கீழ்க்காணும் அட்டவணையில் பொதுத் திருத்தாண்டகங்கள் குறித்த செய்திகள் திரட்டித் தரப்பட்டுள்ளன.
பொதுத்திருத்தாண்டகப் பெயர் | தொடக்கம் | பதிகஎண் | |||
பலவகைத் திருத்தாண்டகம் | ‘நேர்ந்து ஒருத்தி’ | 1 | |||
நின்ற திருத்தாண்டகம் | ‘இருநிலனாய்’ | 1 | |||
தனித் திருத்தாண்டகம் | ‘அப்பன் நீ’ ‘ஆமயந்தீர்த்து’ | 2 | |||
திருவினாத் திருத்தாண்டகம் | ‘அண்டங் கடந்த’ | 1 | |||
மறுமாற்றத் திருத்தாண்டகம் | ‘நாமார்க்கும்’ | 1 |
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே... (6244)
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான்..... (6791).. (தீராநோய் = பிறவி
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண்.....(7000)
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்.....(7104)
அங்கமெலாம் குறைந்து அழுகுதொழுநோயராய்
ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும்கடவுளாரே......(7182)
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.....(7205)
இவை போன்ற மேலும் பல அரிய தொடர்கள் ஆறாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ளன.
அரிய திருத்தாண்டகங்கள்: திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் அகத்துறை தழுவி அமைந்த பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே...... (6501)
(நாமம் = திருப்பெயர், பிச்சி = பித்துக்கொண்டவள் அத்தன் = தந்தை, ஆசாரம் = குடும்ப மரபுகள் தலைப்படல் = சேர்தல்)
போற்றித் திருத்தாண்டகங்கள்: இறைவன் திரு முன்பு நீரும் பூவும் கொண்டு சென்று தாமே அடியார் இறைவனை நீராட்டி, பூப்பெய்து, ஆரத்தழுவி வழிபடும் உரிமை முற்காலத்தில் தமிழ்நாட்டில் நிலவியிருந்துள்ளது. மலர் தூவி வழிபடும் போது, இறைவனைப் புகழ்ந்து போற்றும் அரிய பாடல்களைத் திருநாவுக்கரசர் ஆக்கி அளித்துள்ளார். வடமொழி மந்திரங்களுக்கு இணையான இவற்றைச் சிவபெருமான் திரு முன்பு ஓதி வழிபடும் முறைமை மீண்டும் இன்று தமிழகத்திருக்கோயில்களில் மலர்ந்துள்ளது. அவ்வாறான ‘போற்றி’த் திருத்தாண்டகங்களில் ஒன்றைக் காணலாம்.
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லல்அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம்புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.....(6563)
( கழல் = இறைவன் திருவடி, கதி = வீடுபேறு அல்லல் = துன்பம், மைந்தா = வலிமை மிக்கவனே, வானவர் = தேவர்கள், செற்றவர் = பகைவர். திருமூலட்டானம் = திருவாரூரில் சிவபெருமான் எழுந்திருளியிருக்கும் கருவறைக் கோயில்).
தேவாரத் திருமுறைகளைத் தொகுத்தளித்த அருளாளர் பெயர் யாது?...நம்பியாண்டார் நம்பிகள்.
தேவாரத் தொகுப்பில் ‘பண்முறை’ ‘தலமுறை’ என்பன யாவை?.......ஓர் ஆசிரியர் பல தலங்களிலும் பாடிய பதிகங்கள் பலவற்றையும் அவற்றின் பண் வரிசையில் தொகுப்பது பண்முறை. பாடப் பெற்ற தலப்பதிகங்களைத் தலங்கள் அடிப்படையில் தொகுப்பது தலமுறை. தேவாரத்திருமுறைகள் ஏழாகத் தொகுக்கப்பட்டது பண் முறையில்தான்.
தேவாரத் திருமுறைகளைத் தொகுத்தளித்த அருளாளர் பெயர் யாது?...நம்பியாண்டார் நம்பிகள்.
தேவாரத் தொகுப்பில் ‘பண்முறை’ ‘தலமுறை’ என்பன யாவை?.......ஓர் ஆசிரியர் பல தலங்களிலும் பாடிய பதிகங்கள் பலவற்றையும் அவற்றின் பண் வரிசையில் தொகுப்பது பண்முறை. பாடப் பெற்ற தலப்பதிகங்களைத் தலங்கள் அடிப்படையில் தொகுப்பது தலமுறை. தேவாரத்திருமுறைகள் ஏழாகத் தொகுக்கப்பட்டது பண் முறையில்தான்.
திருஞானசம்பந்தர் தேவாரம் எத்தனைத் திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?......முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று திருமுறைகளுள் இடம் பெற்றுள்ள பண்களில் மூன்றின் பெயர்களைத் தருக......முதல் திருமுறை - நட்டபாடை, இரண்டாம் திருமுறை - இந்தளம், மூன்றாம் திருமுறை - காந்தார பஞ்சமம்.
முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக !!! அன்புடன் கே எம் தர்மா...
மிக்க நன்று.
ReplyDelete