Search This Blog

Dec 15, 2011

சிவவாக்கியம் (296-300) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (296-300)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -296 
வாக்கினால் மனத்தினால் மதித்த காரணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கை யாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்கி வந்து நோக்க நோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்கு வந்து நோக்கை எங்கும் நோக்குமே.
 
    
வாக்கினாலும் மனத்தினாலும் இறைவனை எந்நேரமும் நேசமுடன் பூசித்து யோக ஞானத்தை மதித்து கடைப்பிடித்த காரணத்தினால் உண்மையான பரம்பொருளின் காட்சி கிட்டும். நோக்கொணாத நோக்கை அகக்கண்ணால் நோக்கி தியானிக்கவும். அதையே நோக்கவும் யார் வல்லவர்கள், பார்க்க வொண்ணாத பார்வையை ஊடறுத்து பார்ப்பவனையே பார்த்து பார்க்க பார்க்க பார்த்து இருந்தால் புறப்பார்வை மறைந்து அகக்கண் திறந்து அதுவே அதுவாய் அகிலமெங்கும் நிறைந்து பார்க்கும் இடம் எங்கும் பராபரமாய் விளங்கும்.


***************************************************
சித்தர் சிவவாக்கியம் -297
உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கனம் பரந்து
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான்
மெல்ல வந்து என்னுட் புகுந்து மெய்த்தவம் புரிந்த பின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே.


உள்ளே மனமாகவும் புறத்தே வெளியாகவும் உலகம் எங்கணும் பரந்து நின்று சிறய வித்தான எள்ளில் இருக்கும் எண்ணெய் போலவே எம் உடம்பிலே நின்று இயங்கின்றவன் எம்பிரானாகிய ஈசன். அவன் வருந்தா வகையில் மெல்ல வந்து என் அணுவும் அசையாது என்பதை உணர்ந்து யோக ஞானம் பற்றுதலும் குறு விசுவாசமும் கொண்டு தியானம் செய்ய செய்ய மெய்த்தவம் வாய்க்கும். அந்த மெய்த்தவம் புரிந்து வள்ளலுக்கு வள்ளலாய் விளங்கும் ஈசனின் வண்ணம் பொன் வண்ணம் என்பதனையும் அவன் திருவடியின் வண்ணம் ஐவண்ணம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


****************************************************
சித்தர் சிவவாக்கியம் -298
வேதமொன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால்
போதம் நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.

  
நான்கு வேதங்களும் சொல்லும் ஒன்றான பரம்பொருளை நான் கண்டிலேன். அதனை கண்டு அறிந்து உணர்ந்த பிறகு வெம்மாயப் பிறப்பு என்பது இல்லாது போய்விடும். இரவு பகல் என்ப துன்பம் என்று போதப் பொருளாய் நின்ற வடிவழகாய் ஈரேழு புவனங்கள் எங்கும் பிரம்மமாய் ஆகினாய். சோதியுள் ஒளியாய் துரியமோடு துரியாதீதமாய் ஆதி மூலமான பிரம்மனே என் உயிரில் ஆதியாய் அமைந்திருப்பது சிவம் என்ற சிவாயமே. அந்த ஒன்றையே பற்றி தியானியுங்கள். 

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 299
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே
பேணி அப்பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணி கண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.
 
      .
இரண்டு சாண் அளவுள்ள ஒரு முழக் கூந்தலை கொண்டையிட்டு சரியவிட்டு கடைக்கண்ணால் காம வலை வீசும் பெண்களில் மயங்கி அப்பேரழகே நிலையெனவும் அப்பெண்ணின்பமே பெரிதெனவும் வாழ்ந்து வீழ்ந்து பிறந்து இறந்து பிறந்து உழலும் உலகீரே! தோனியான உடம்பில் உள்ள ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் ஒடுக்கி அனைத்தயும் துறந்து பாவமேனும் அழுக்கை அகற்றி ஈசனையே தியானிக்க வல்லவர்கலானால் இக்காணி முழுதும் கண்களில் கண்டு கோடி கோடியாய் கலந்திருப்பது சிவம் என்பதை உணர்வீர்கள்.  
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 300 

அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சு கூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும் ஓர் எழுத்தாய் அமைந்ததே சிவாயமே. 
     
  . 
'சிவயநம' என்ற அஞ்செழுத்து மந்திரத்தை மவுனமாக இருந்து கோடி முறை செபித்து ஐம்புலன்களையும் ஈசன் பால் அடங்கி நின்று உனக்குள் உள்ளத்தில் உள்ள நெஞ்செழுத்தாகிய சிகாரமேனும் ஒரெழுத்தில் மனம் ஒன்றி நினைந்து தியானியுங்கள். அஞ்சு பூதங்களும் நான்கு அந்தக் காரணங்களும் ஆணவம், கன்மம், மாயை, என்ற மூன்று மலங்களும் மூன்றெழுத்தான ஓங்காரத்தில் உகாரம் என்ற உயிரில் அடங்கினால் அஞ்செழுத்தும் பஞ்சாட்சரப் பொருளாகி ஓரெழுத்தாய் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரமாய் அமைந்தது சிவமே என்பதை அறிந்து கொள்ளுங்கள். 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!