Search This Blog

Dec 11, 2011

சிவவாக்கியம் (266-270) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (266-270)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -266
மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனல்கழல்
விட்டு வீழில் தாக போக விண்ணில் நண்ணில் வெளியிலும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதலின்பம் ஆகுமே.   
 
 

துளசி மாலையில் மணம் விலாகாது வீசுவதைப் போல, எப்போதும் என் மனம் நீராக உள்ள இறைவனின் திருவடிகளை விட்டு விலகாது உள்ளது. ஆகாயமே எனக்குள் மனமாகி வெளியாக திகழ்கிறது. எட்டு இரண்டு எனும் அகார உகார அட்சரத்தால் இதமாக இருத்தி ஞான யோகத்தால் தியானித்தால் மனம் மெய்ப்பொருளாகிய ஈசன் இருப்பிடத்தை அடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து ஆனந்தமாகிய பேரின்பம் அடையும். ஞான யோகத்தால் மனத்தினைக் கட்டி அறிவாகிய வீட்டை அடைந்து ஈசனை காதலாகி கசிந்து கண்ணீர் மல்க தியானித்து ஆனந்தம் பெறுங்கள்.      
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -267
ஏகமுத்தி மூன்று நாலு முத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய்
தகமுற்று சயனமாய் நலங் கடல் கடந்த நீ
யாகமுற்றி ஆகி நின்ற தென்கொலாதி தேவனே.
 

ஏகமாகிய பரம்பொருளை சேர்ந்து முத்தி பெற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் நீக்கி மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக் கரணங்களாலும் நன்மைகளைச் சேர்க்க வேண்டும். வாசி யோகத்தினால் உடலையும் உயிரையும் ஒன்றாக்கி சிவனாகிய அறிவையும் உணர்வாகிய சக்தியையும், மனமாகிய நினைவினால் ஒரே இடத்தில் இணைத்து இருத்தி தியானிப்பதுவே சிவபோகம். இதுவே புண்ணியத்தை சேர்ந்து மூன்று தீயும் ஒன்றாக்கி சோதியாகி சிவத்தை அடைந்து முத்தியைத் தருமே அன்றி வேறு வழிகளில் முக்தி கிடைக்காது. மூலாதாரத்தில் பாம்பைப் போல் சுருண்டு உறங்கும் குண்டலினி சக்தியை கனலாகிய தீயால் எழுப்பி மேலேற்றி திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்ற நாகத்தின் மீது பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவை அறிந்து உணர்ந்து அப்பாலாய் உள்ள சிவமாகிய சோதியில் ஒடுங்கி தியானிக்க வேண்டும். இதனை அறிவதற்கே யாகங்களில் தீயை வளர்த்து அனைத்தையும் அவ்வேள்வியில் சேர்த்து ஆதியாகவும், சோதியாகவும் உள்ள ஈசனிடம் ஒப்படைத்து செய்கிறார்கள். இப்படி தீயாக என்னுள் விளங்கும் அதிசயம்தான் என்ன ஆதிதேவனே!!  
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -268
மூன்று முப்பது ஆறினோடு மூன்று மூன்று மாயமாய்
மூண்டு முத்தி ஆகிமூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தொன்று சாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
என்ற ஆவின் உல் புகுந்த தென்கொலோ நம் ஈசனே.
  
மூன்று முப்பது ஆறு -- தொண்ணூற்றி ஆறு தத்துவங்கள்.
மூன்று        --          ---     -- ஆணவம், கன்மம், மாயை.
மூன்று        --          ---     -- மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.
மூன்று        --          ---     -- சந்திர மண்டலம், சூரிய மண்டலம், சுழுமுனை.
மூன்றதாய் -          ---     -- ஆண், பெண், அலி  உடம்பில் உள்ள.

தொண்ணூற்று ஆறு தத்துவங்களில் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும், மண், பெண், பொன் என்ற மூவாசைகளும் மாயமாய் அமைந்திருக்கின்றது. அதில் மூன்று தீயாக சந்திர மண்டலம், சூரிய மண்டலும், அக்னி மண்டலம் என்ற மூன்று மண்டலங்களும் சந்திர கலை, சூரிய கலை, சுழுமுனை என்ற நாடிகளில் ஓடும் மூச்சாகி நடந்து வருகிறது. அவ்வுடம்பில் ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற மூன்று குணங்களும், வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று பிணிகளும், லோக ஏடனை, அர்த்த
டனை, புத்திர டனை என்ற மூன்று டனைகளும் சேர்ந்து ஆண், பெண், அலி என்ற மூன்று சாதியாகி அதில் உள்ள ஆன்மாவில் சோதி விளக்காக ஈசன் இருக்கின்றான். இப்படி என்றன் நாவில் புகுந்து அஞ்செழுத்தாக வந்த அதிசயம் எவ்வாறு என் ஈசனே. 

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 269
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்ற நீ
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே.
 .
ஐந்தேழுத்தாகவும், பஞ்ச பூதங்களாகவும், ஐம்புலன்களாகவும் இம்மானுட தேகத்தில் அகாரத்துள் அமைந்த மெய்ப் பொருள் வ
ஸ்துவாய் பஞ்சாட்சரமும் ஓங்காரமும் ஒன்றான ஒரேழுத்தாகி நின்ற ஆதி தேவனே!! அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்ற பஞ்ச கோசங்களாகவும், சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் என்ற பஞ்ச தன் மாத்திரைகளாகவும், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், திரியாதீதம் என்ற பஞ்ச அவஸ்தைகளாகவும் அமைந்து அனைத்துமாய் நின்றவனும் நீயே. சிவயநம என்ற பஞ்சாட்சரப் பொருளாகவும் ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாகவும் நின்ற உன்னை யார் அறிந்து உணர்ந்து நினைந்து கானவல்லவர்.     
   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 270
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் எழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊரும் ஓசையை அமர்ந்த மாமாயம் மாயனே.
ஆறு ஆறும் ஆறும் .................= 18
ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்தும்..= 16
ஏறு சீர் இரண்டு.........................=  32  -- 64
மூன்றும்.........................= இடகலை, பிங்கலை, சுழுமுனை.
ஏழும்............................... = ஏழு திரைகள்.
ஆறும்..............................= ஆறு ஆதாரங்கள்.
எட்டு.................................= ஆகாயம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டு படிகளை கொண்ட நிலைகளை அடைய பதினாறு மாத்திரை அளவு பூரகத்தால் மூச்சுக் காற்றை மேலேற்றி அறுபத்தி நான்கு மாத்திரை அளவு கும்பகத்தில் அடக்கி பின் முப்பத்திரண்டு மாத்திரை அளவில் லேசாக ரேசகம் செய்ய வேண்டும். இதுவே பிராணாயாமம். இதனை இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளையும் அறிந்து செய்து வர வேண்டும். இதனால் புருவ மத்தியில் உள்ள ஏழு திரைகளும் விலகி உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களும் பரிசுத்தமாகி எட்டாகிய வெட்ட வெளியாக இருக்கும் சோதியில் உடலும், உயிரும், மனமும் ஒன்று சேர்ந்து ஆனந்தம் கிடைக்கும். இதுவே வேறு வேறு வகைகளில் ஞானமாகி பொய்யான உடம்பில் மெய்யான ஆன்மாவும் அதனுள் இறைவனும் இருப்பதை அறிந்து இந்த மெய்யான பிராணாயாமம் செய்யுங்கள். அதனால் வாசி ஊறும், நாத ஓசையாகி மாயனாகிய கண்ணன் கைப் புல்லாங்குழல் இசையோடு இலயமாகி இறையோடு சேரும்.   
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

1 comment:

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!