Search This Blog

Dec 11, 2011

குறுந்தொகை, அகநானூறு & புறநானூறு :பதினெண் மேற்கணக்கு தொகை நூல்கள்

  
பதினெண் மேற்கணக்கு: எட்டுத்தொகை
1) ஐங்குறுநூறு, 2)அகநானூறு, 3)புறநானூறு, 4)கலித்தொகை, 5) குறுந்தொகை, 6)நற்றிணை, 7)பரிபாடல், 8)பதிற்றுப்பத்து.எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
இவற்றுள், அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.  அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடல் வேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன. ****************************************************************************
நற்றிணையும், ஐங்குறுநூறும் ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்; கற்றறிந்தார் ஏத்தும்
கலித்தொகையைக் கண்ட நாம் இனிய காணவிருப்பது நல்ல குறுந்தொகையும், அகம்புறம் காணும் நானூறும் ஆகும்.
குறுந்தொகை: எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. 

ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப் பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

பாடியோர்: இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந் தேவனார்.


நூலமைப்பு: நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல்,கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. 

பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னனியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகைக் காட்டும் செய்திகள்: 
குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, ந்ன்னன் போன்ற சிற்றாரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் சிறந்த வரலற்றுச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே
என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.

"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.
**********************************************************

அகநானூறு:  சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

நூலமைப்பு:  இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப் படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

பாடியோர்: இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

அகநானூற்றின் மூன்று பகுப்பு: அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டி லுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்.
பழம்பாடல்:
நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5)
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
களித்த மும்மதக் 'களிற்றியானை நிரை' (10)
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு மரபின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15)
அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக்
கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையால்
கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20)
வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூருள்ளும்
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொப்மை சான்ற நன்மையோனே.
இது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது:
களிற்றியானைநிரை: 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்: 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை: 301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன
பாடல் - 1 : பஃறொடை வெண்பா
வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.
இரண்டாம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்திதான் இந்தப் பாடலிலும் கூறப்பட்டுள்ளன. எனினும், இதில் திணையின் விளக்கங்கள் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன. வெண்தேர் என்னும் கானல்காற்று ஓடுவது பாலை. தாமரை என்பது ஆகுபெயராய் அது பூத்திருக்கும் மருத நிலத்தைக் குறிக்கும். காமம் உண்டாக்கக் கூடிய முல்லைப்பூ பூத்திருக்கும் நிலம் முல்லை. இதுவும் ஆகுபெயர்.
வெறி என்பது மணத்தையும், வெறியாட்டத்தையும் குறிக்கும். இந்த இரண்டும் உள்ளது குறிஞ்சி. குட்டத்தில்(உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல்.

பாடல் 2  - வெண்பா :
ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.
பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) - பாலைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) - முல்லைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) - மருதத் திணை
பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) - நெய்தல் திணை
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை.

பாடல் 2  - வெண்பா :
பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால் - மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்.
பாட்டு 2-ல் கூறப்பட்டுள்ள செய்தியே இந்தப் பாட்டிலும் வேறு வகையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றையெல்லாம் 'செந்தமிழின் ஆறு(நெறி)' என்று குறிப்பிடுவது பிற மொழிகளில் இல்லாத தமிழ்நெறி இந்தத் திணைப் பாகுபாடு என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நெறி என்பது தமிழிலக்கிய நெறியாகும்.

அகப்பொருள்: பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். "உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்" எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலை பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தை கைக்கிளை என்றும் கூறுகின்றன.

அகநாநூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்: அகப்பொருள் நூலான அகநானூறில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிவிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும்: நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை
"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"
என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்: அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது.
********************************************************

புறநானூறு:  என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக் கின்றன. 

போராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

பாடியவர்கள்: இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கு  இருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.


நூல் அமைப்பு: இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்ப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

புறப்பொருள்: அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, இப்புற ஒழுக்கங்களை வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு தினைகளாகக் குறிப்பிடுகின்றன புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள் : அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

சமூக நிலை: பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கண்வனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோண்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும், 30படைக்கலக் கருவி களையும், 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என புறநானூறு விளங்குகிறது.

வரலாற்றுக் குறிப்புக்கள்: புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டையப் போர்க் களங்களான வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கமுமலம்,தலையாலங்கனம், தகடூர், கானப்பேரெயில் போன்றவற்றை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளன.

எடுத்துக்காட்டுப் பாடல்:
தொடியுடைய தோண்மணந்தனன்
டிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே. - நம்பி நெடுஞ்சொழியன் - புறம் - 239

மேலும் பயணிப்போம் சங்க இலக்கியங்களின் ஊடாக பதினெண் கீழ் கணக்கினைக் காண வேண்டி.. அன்புடன் கே எம் தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!