சிவவாக்கியம் (161-165)
சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் - 161
அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மிக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே!
(அக்கிடீர்=நீரும், நெருப்பும்) ஆதியாக உள்ள மெய்ப்பொருளே அனைத்து உயிர்களிலும் நீராகவும், நெருப்பாகவும் இருக்கின்றது. அதுவே உங்களிடம் அறிவு, உணர்வு, மனம் என்று மூன்றாக தரித்து முப்பொருளாய் உணராது இப்பூமியில் பிறந்து இறந்து பிறந்து மாண்டு போகிறார்கள். ஆகவே மெய்ப்பொருளை அறிந்து அதையே ஒத்து தியானம் செய்வதுவே இப்பிறவித் தளையிலிருந்து ஆன்மா விடுதலை அடைவதற்கான வழி என நான் உங்களுக்கு உணர்த்துவிக்கும் உண்மையாகும்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -162
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙகனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்
வையத்தில் மாந்தரோடு வாய் திறப்பது இல்லையே!
ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -163
நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வு யவ்வுளும் சிறந்த வன்மை ஞான போதகம்
ஒவ்வு சுத்தியுள் நிறைந்து உச்சியூடுருவியே
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே!
அஞ்செழுத்தில் 'ந' என்ற சுவாதிட்டானத்தையும், 'ம' என்ற மணிப்பூரகத்தையும் கடந்து அனாகத்தில் உள்ள 'சி' யின் மேல் இருக்கும் விசுத்தியில் 'வ'வும் ஆஞ்ஞாவில் 'ய' வும் ஓதி உணரவேண்டும். இந்த நமசிவய என்ற அஞ்செழுத்து நம் உடம்பில் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களாக இருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரத்தில் 'ஓம்' என்ற அட்சரத்தால் குண்டலினி சக்தியை, வாசியால் மேலேற்றி நினைவால் "ஓம் நமசிவய" என்று ஓதி ஒவ்வொரு சக்கரத்திலும் அதற்குறிய எழுத்தை நிறுத்தி அப்பியாசித்து வரவேண்டும். தூலத்தில் "ஓம் நமசிவய" எனும் இந்த பஞ்சாட்சரமே உள்ளே சூட்சுமமாகவும் எல்லா வல்லமையும் உள்ள சிறந்த ஞான போதப் பொருளாக இருக்கிறது. அதுவே உச்சியில் உள்ள மெய்ப் பொருள். இதற்குள் ஈசன் சோதியாக இருப்பதை உணர்ந்து "சிவயநம ஓம்" என்ற பஞ்சாட்சரத்தை அங்கு நிறுத்தி தியானிக்க வேண்டும். இப்படி மூலாதாரத்தில் இருந்து உச்சி வரை முதுகுத்தண்டின் வழியாக ஊடுருவி வாசியை மெய்ப் பொருளில் உள்ள சோதியில் சேர்க்கவேண்டும். "ஓம் நமசிவய" என்ற பஞ்சாட்சரமே நம் உடம்பில் தூலமாகவும், உயிரில் சூட்சுமமாகவும் இருப்பதை அறிந்து இந்த யோக ஞானத்தை உணர்ந்து தவம் புரிபவர்கள் ஈசனாகவே ஆவார்கள்!! இது அந்த பஞ்சாட்சரமாக விளங்கும் ஈசன் மீது ஆணை.
*****************************************************
சித்தர் சிவவாக்கியம் -164
அக்கரம் அன்னதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ!
அட்சரங்களாக இருக்கும் மந்திரங்கள், ஆன்மா எனும் உயிர், உலகத்தில் உள்ள பஞ்சபூதங்கள், உடலில் உள்ள ஐம்புலன்கள், தத்துவங்களை அலசி ஆராய்ந்து இயற்றிய நூல்கள், வேத சாஸ்திரங்கள் ஆகியவைகள் யாவும் அனாதியாக என்றும், எங்கும், எப்போதும் இருப்பது. இவற்றின் அனைத்து நுட்பங்களும் நமக்குள்ளேயே தற்பரமாக விளங்கும் சற்குருவான ஈசனே அநாதி என்பதனை அறிந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 165
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூடழிந்திடும்
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச்சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே!
எல்லாவற்றையும் பார்த்தது எது என்பதை அறிந்து, அதையே பார்த்து தியானிக்க பார்வை ஒடுங்கி, அகக்கண் திறந்திடும். அதையே குறியாகக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து சுழுமுனையில் கூர்மையான நினைவை குவித்திருந்தால் சோதியைக் காணலாம். அதுவே சிவம் ஆகும். ஆகவே தியானம் செய்யும் போதெல்லாம் பார்ப்பானையே பார்த்திரு. அதை விடுத்து நினைவை பல இடங்களில் வைத்து, பார்வையை பலவிதங்களில் செலுத்தி தியானத்தை இகழ்ந்து மறந்தால் நீங்கள் மீண்டும் பூத்த பூவும் காயுமாய் பிறப்பிறப்பில் உழலுவீர்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!