Search This Blog

Nov 17, 2011

சிவவாக்கியம் (156-160) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (156-160)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!

சித்தர் சிவவாக்கியம் - 156
செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலந்திட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே!

செ
ம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும்  உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.
******************************************
சித்தர் சிவவாக்கியம் - 157
நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார்  உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே!

இறைவனை அடைவதற்கான வழி, அவனையே நாடி அவன் புகழைப் பாடி அவனை நயந்து தேடி நமக்குள்ளேயே கண்டு கொண்டு, யோகமும் தியானமும் பழகவேண்டும். அதனால் நம்மில் இருந்து வெளியேறி ஓடும் மூச்சு நமக்குள்ளேயே ஒடுங்கி பிராணசக்தி கூடி உயிரிலேயே   அடங்கிடும். இப்படியே தினமும் செய்ய வல்லவர்களுக்கு ஆயுள் கூடி தேடி வரும். எமனே திகைத்து திரும்பிடுவான், அவர்கள் கல்பகோடி காலமும் ஈசனோடு உகந்து இருப்பார்கள். ஆகவே யோக ஞான சாதனங்களைக் கைக்கொண்டு பிறவாநிலை பெறுங்கள்.
**********************************************
சித்தர் சிவவாக்கியம் -158
பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பினங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லீரே
பி
ங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கலாகுமே!!!

கோபம் கொள்வது ஏது என்பதை உணராத மூடரே!! சாந்தமான பேரொளியாக ஈசன் உன் பிராணனில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வுலகில் பிறக்க வைக்கும் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை யோக ஞானத்தால் பிணக்கு அறுத்து தியானம் செய்ய வல்லவர்கலானால் ஈசன் அருளால் பேரின்பம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் இருக்கலாகுமே.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 159
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்
மான் யாரிச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பு நூல் அணிவதும்.

மீன் இறைச்சி வேதம் ஓதும் பிராமணர்கள் எப்போதும் உண்பதில்லை. அசைவத்தை உண்பதால் அசுத்தம் வந்துவிடும் என்றிடும் அவர்கள் மீன் இருக்கும் நீரில்தான் குளிக்கின்றார்கள், அதையேதான் குடிக்கின்றார்கள். தின்னாமல் குடிப்பதில் மட்டும் சுத்தமாகிவிடுமா? மான் இறைச்சியை உண்பதில்லை என்று சொல்லும் பிராமணர்கள் அந்த மானை உரித்த தோலில் பூணூல் அணிகின்றார்களே, இறைச்சி உண்ணாமல் இருப்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. சுத்தம் என்பது அவரவர் எண்ணத்தில்தான் இருக்கின்றது.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 160
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

ஆட்டின் இறைச்சியை அந்தணர்கள் உண்பதில்லை. ஆனால் ஆட்டை பள்ளியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டு செய்வது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டு செய்கின்றார்கள். மாட்டிறைச்சி தின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே. உணவுப் பழக்கத்தினாலோ, ஆசார அனுட்டனங்கலாலோ இறைவனை அடைந்து விடமுடியாது.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!


No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!