Search This Blog

Oct 30, 2011

தியானமும், யோகமும் - ஸ்ரீ அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் (முதல் பகுதி)

அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (முதல் பகுதி)
அரவிந்தர் - அன்னையை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் இல்லையா? அரவிந்தர் நமக்கு அளித்த மிகச் சிறந்த பொக்கிஷம் இந்த யோக நூல். நண்பர்கள் அனைவருக்கும், இந்த நூலை படிக்க பரிந்துரைக்கிறேன். நாம் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று வணங்கும் முன்புநம் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக உணர்த்தும்..

ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. அந்த நூலின் தொடக்கத்திலேயே சமர்ப்பணத்தைப் பற்றி ஓர் அத்தியாயம் இருக்கின்றது. அந்நூலில் காணப்படும் 80 அத்தியாயங்களில், இந்த ஓர் அத்தியாயத்திலேயே தமது யோகத்தின் முழுமையையும் சுருக்கமாகவும், சாரமாகவும் விளக்குகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை விளக்கம் பெற்றதாக நடத்துவது என்பது, ஒரு தவ முயற்சியை மேற்கொள்வது போன்றதாகும். ஆத்ம சமர்ப்பணத்தின் சிறப்பு, வாழ்க்கை விளக்கத்தில் பெறும் இடத்தைப் பற்றித்தான் நாம் இங்கே பேசப் போகின்றோம்.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்தவுடன் பல பிரச்சினைகள் விலகி விடுகின்றனஎன்பது உண்மையேயானாலும், ‘சில பிரச்சினைகள் அப்படிச் சுலபத்தில் தீர்வதில்லைஎன்பது, சில பக்தர்களுடைய அனுபவம். அந்த அனுபவத்தில் உள்ள பாதகமான நிலையைப் பிரார்த்தனையின் மூலமே சாதகமான நிலைக்கு மாற்ற முடியும்என்ற உண்மைக்கு உட்படுத்தக் கூடியதே ஆத்ம சமர்ப்பணம்.

பிரார்த்தனை பலிக்கும்என்ற நம்பிக்கையுடன் நாம் சொல்லும்போது மனிதனுடைய குரல் அன்னைக்கு எட்டி, அன்னையின் திவ்யஒளி நம் மீது மட்டும் அல்லாமல், நமது பிரச்சினையின் மீதும் பட்டுவிட்டது என்று பொருள். பிரச்சினையும், அன்னையின் ஒளியும் சந்தித்த மாத்திரத்தில் பிரச்சினை கரைந்துவிடுகின்றது.பிரச்சினை தீரவில்லைஎன்றால் அன்னையின் சக்தி ஒளி பிரச்சினை மீது படவில்லைஎன்று பொருள். ஆத்ம சமர்ப்பணம் அந்தக் குறையை நீக்கி, பிரச்சினையைத் தீர்க்கின்றது. ஆத்ம சமர்ப்பணம்என்ற சொல்லுக்கு யோகத்தில் கொள்ளும் பொருளை இங்கு கருதாது, அதன் சாரமான கருத்தை மட்டுமே நோக்குவோம். பிரச்சினைக்கு உரியவர் பிரச்சினையின் கூறுகளை, தன் உள்ளொளிக்குச் சமர்ப்பிப்பதை இங்குசமர்ப்பணம்என்ற பொருளில் கொள்ள வேண்டும்.

நீண்ட காலமாக உள்ளூரிலேயே உத்தியோகம் செய்து வந்த ஒருவர், பதவி உயர்வை எதிர்பார்த்தார். நியாயமான எதிர்பார்ப்புத்தான். அவருடைய பதவி உயர்வுக்கு அலுவலகத்தில் யாரும் முட்டுக்கட்டை போடவில்லை. என்றாலும் ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அது என்ன என்று கண்கூடாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர். நான் அன்னையை உருக்கமாகப் பிரார்த்தித்துக்கொண்டு வருகின்றேன். பதவி உயர்வைத் தவிர மற்றவை எல்லாம் எனக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. அதற்கு மட்டும் என்ன தடை என்று புரியவில்லைஎன்று அடிக்கடி கூறி வேதனைப்படுவார் அவர்.

உங்களுக்கு உள்ளூரைவிட்டுப் போகப் பிரியம் இல்லை. பதவி உயர்வு கிடைத்தால் நீங்கள் வெளியூருக்குப் போக வேண்டியதிருக்கும். அதனால்தான் தடைஎன்று அவருக்கு விளக்கும்பொழுது,  தமக்குத் தாமே தடையாக இருந்ததை உணர்ந்து, முதல் வேலையாக உள்ளூர் ஆசையைத் துறக்கின்றார். அவருக்கு உடனே பதவி உயர்வு கிடைத்து விடுகின்றது. மனத்தால் விரும்பும் ஒன்றை, அவர் உணர்ச்சியால் விரும்பவில்லை. ஊரைவிட்டுப் போக விரும்பாத உணர்ச்சி, பதவி உயர்வுக்குத் தடையாக இருந்தது. அதுவே அன்னையின் சக்தி செயல்படத் தடையாகவும் இருந்தது. ஓர் அடாவடிக்காரனிடம் பணம் கொடுத்து பிராமிசரி நோட்டு எழுதி வாங்கினால், ‘அந்த நோட்டு அவனைக் கட்டுப்படுத்தும்என்று நினைப்பது தவறு. அந்தத் தவற்றை உணராத வரையில் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைகள், அந்தப் பணத்தைப் பெற்றுத் தாரா. ஆனால், செய்த பிரார்த்தனைகள் வீண் போகா. அவை வேறு காரியங்கள் கூடிவர உதவி செய்யும்.

சம்பந்தப்பட்டவரின் தவறான நினைவு, அந்தச் செயலின் மீது இருள் போலப் படிந்துள்ளது. பிரார்த்தனையால் நம் உள்ளே வரும் ஒளியை அது தடை செய்கின்றது. அது வெறும் இருளாக இருந்தால், அந்த ஒளியே அதைக் கரைத்துவிடும். ஆனால், அது சம்பந்தப்பட்டவருடைய அறிவின் துணையோடு ஏற்பட்ட இருள். அதனால் அன்னையின் ஒளியால்கூட அதைச் சுலபமாகக் கரைத்துவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை சம்பந்தப்பட்டவருக்குப் பொறுமை வேண்டுமே!

அன்று செய்த தவற்றை இன்று உணர்ந்தால், இருள் நீங்கி, உறுத்திக் கொண்டு இருந்த பிரச்சினை முற்றிலும் உலர்ந்து போகும். அன்னையின் ஒளிக்குப் பிரச்சினையைக் கரைப்பது சுலபம்; ஆனால், மனிதன் தன் அறிவால், சொல்லப் போனால் பிடிவாதத்தால் ஏற்படுத்திக் கொள்ளும் இருளைக் கரைப்பது சுலபம் அன்று. அது கரைய நாளாகும். ஒருவர் தவறு செய்வதன் மூலம் பிரச்சினைக்கு ஆளாகிச் சிக்கித் தவிக்கும்பொழுது, அவர் நமக்கு வேண்டியவராக இருந்தால் என்ன செய்கின்றோம்? அவரிடம் அவருடைய தவற்றை எடுத்துக் கூறுகின்றோம். அவர் புரியாமல் தவறு செய்தவராக இருந்தால், நம் அறிவுரையைக் கேட்டபிறகு திருந்தி விடுகின்றார்.வம்பு செய்து பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்என்று ஒருவர் தப்புக் கணக்குப் போட்டால், ‘சட்டம் என்ன செய்யும்? எதிராளி என்ன செய்வார்?’ என்ற அறிவுரையைப் பெறும்பொழுது, அவருக்கு இருந்த தவறான செயல் முனைப்பு அடங்கிப் போகும்.

ஒரு தொழில் கூட்டாளி மற்றவருடைய பங்கை அபகரிக்க முயன்றால், ஒரு மருமகளை மாமியார் கொடுமை செய்தால், மாமியாரை மருமகள் வறுத்து எடுத்தால், ஒரு மாணவன் போலீஸிடம் வீண் வம்பு வளர்த்தால், அரசியல் காழ்ப்புக் காரணமாக ஒருவர் வன்முறையைத் தூண்டிவிட நினைத்தால், அவர்களுக்கு வேண்டிய நல்லவர்கள், அதனதன் பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். அது பிரச்சினை வளர்வதைத் தடுக்க உதவும். அதே போல நம் மனத்தை நமக்கு வேண்டிய இரண்டாம் நபராக நிறுத்தி, தீராத ஒரு பிரச்சினைக்கு வழி காண நாம் அந்த மனத்தோடு உரையாடி, வழக்குரைத்து வாதாடி, அது செய்த தவற்றையும், அதனால் பிரச்சினை ஏற்பட்ட விதத்தையும் எடுத்துக் கூறும்பொழுது, மனம் நியாயத்திற்கும், அறிவுக்கும் உட்பட்டு அவற்றை ஏற்றுக் கொண்டால், அதன்பிறகு செய்யும் பிரார்த்தனைக்கு உடனே பலன் கிடைத்துவிடுகின்றது. 6 ஆண்டுகளாகப் பலிக்காமல் இருந்த பிரார்த்தனை, தன்னைத் தானே உணர்ந்துவிட்ட கட்டத்தில் நொடிப்பொழுதில் பலித்து விடுகின்றது. இவ்வாறு மனம் தன் பிழையை, செயலை ஆத்ம ஒளிக்குக் கொண்டுசெல்வதற்கு ஆத்ம சமர்ப்பணம்என்று பெயர்.

பிரச்சினை உருவானது எப்படி?’ என்பதை நாம் விவரமாகத் தெரிந்து கொண்டால்-அதாவது அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்குத் தெளிவு இருந்தால் -ஒளி தெளிவின் வழியே விரைந்து செயல்படும். பிரச்சினை ஏன் வந்தது, எப்படி உருவாயிற்று?’ என்று தெளிவு இல்லாத குழப்பத்தில் மனம் உழலுமானால், முதலில் அந்தக் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அன்னையின் ஒளி தன் வேலையைத் தொடங்கும்.

அன்னையிடம் நாம் ஒரு பிரச்சினையைச் சொல்கின்ற பொழுது, அது சம்பந்தமான எல்லா விவரங்களையும் அவர் ஒன்றுவிடாமல் கேட்பார். விவரங்களை எல்லாம் சரியாகவும், முறையாகவும் நாம் சமர்ப்பித்தால், அன்னைக்குச் செயல்படுவது எளிதாகின்றது. உத்தியோகம் போய்விட்டது’, ‘கணவர் என்னைக் கை விட்டுவிட்டார்’, ‘கடன் சுமை தாங்கவில்லை’, ‘நகைகள் காணாமல் போய்விட்டனஎன்பன போன்ற பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளும்பொழுது, ‘உத்தியோகம் போக என்ன காரணம்? கணவர் கைவிட்டுப் போனதற்கு என்ன காரணம்? கடன் எப்படி ஏற்பட்டது? நகைகள் எப்படிக் காணாமல் போயின?’ என்பன பற்றித் தெளிவாகத் தெரிந்தால், நாம் பிரார்த்தனை செய்து கொண்ட அக்கணமே அன்னை விரைவாகச் செயல்படுவார்.


ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று.  மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் தொடர்ந்து...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!