Search This Blog

Oct 4, 2011

சக்தி தத்துவம் என்ற சாக்த மத பிரிவு .

ம்மா

 
இந்த மூன்று எழுத்தில் எத்தனை சுகம், எத்தனை இதம், எவ்வளவு பாதுகாப்பு நடந்து போகும் காலில் சின்ன சிறு கல் பட்டாலும் நம்மையும் அறியாமல் அம்மா என்று தானே கத்துகிறோம். எனக்கொரு வலி என்றால் என்னால் தாங்க முடியாத துயரம் வருகிறது என்றால் அதை உண்மையாகவே என்னிடம் இருந்து விரட்டுவதற்கு பாடுபடும் ஒரே ஜீவன் அம்மா தானே,

 
இந்த உலகில் ஒரு ஜீவனாக பிறந்து கண் விழித்ததும் பார்த்தது அவள் முகம் தானே, அவள் இல்லையென்றால் நான் ஏது? திறமைகள் ஏது? எனக்கு வளர்ச்சி தான் ஏது? அம்மாவிடம் எனக்கு பயமில்லை, அம்மாவிடம் எனக்கு வெட்கமில்லை, நான் வயது முதிர்ந்து கிழவனாகி விட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஓடி ஒய்ந்து தளர்ந்து போய்விட்டாலும் அவளை காணும் போது நான் குழந்தையாகி விடுகிறேன். 

கடவுளின் அருளில் கூட கலப்படம் இருக்கலாம், அழகான ரோஜா மலர் கூட நறுமணத்தை தராமால் இருக்கலாம். ஆனால் அம்மாவின் அன்பில் கலப்படம் இருக்காது. எப்போதுமே மாறுதல் இருக்காது. நான் என் தாயின் மீது அன்பு வைக்கலாம், வைக்காமல் கூட இருக்கலாம், வைப்பது போல் பாசாங்கு கூட செய்யலாம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நான் நிஜமா? பொய்யா? என்று ஆய்வு செய்யாமல் என் மீது பரிபூரணமான அன்பை செலுத்துவது அம்மா தான். அம்மா மட்டும் தான்.

அதனால் தான் உலகத்தை ஆண்ட தமிழ் குடிமக்கள் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றார்கள். கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், கெட்ட தாய் என்று உலகத்தில் ஒருத்தி கூட இல்லையென்று தேவி பாகவதம் சொல்கிறது. பிறக்கின்ற போதே அம்மாவின் உடம்பில், அம்மாவின் உயிரில் அம்மாவின் குருதியில் ஒட்டிக்கொள்கிறோம். அதனால் தான் அறுசுவை பதார்த்தம் கூட அவள் ஊட்டும் ஒரு பிடி சாதத்தின் முன் சுவையை தர முடியாமல் மண்டியிடுகிறது. வளர்ந்து விட்டோம், ஆயிரம் பொறுப்புகளை சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடுகிறோம். 

செல்வமும், செல்வாக்கும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. ஆனாலும் மனம் எங்கும் துயர அரக்கனே சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறான், ஆட்சி செய்கிறான். இவனின் கோரபிடியிலிருந்து ஒரு விநாடியேனும் விடுபடமாட்டோமா என நெஞ்சம் பறக்கிறது, படபடக்கிறது. பிள்ளை பிராயத்தில் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடியதையும், மணல் வீடு கட்டி விளையாடியதையும் நினைத்து நினைத்து உருகுகிறோம்.

அப்போது மட்டும் நம்மிடம் இன்பம் மட்டுமே குடி கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? என் உடம்பு அழுக்கானால் அம்மா குளிப்பாட்டுவாள், எனக்கு நோய் வந்தால் அம்மா மருந்து தருவாள், எனக்கு பசிபிறக்கும் முன்பே சாதத்தை ஊட்டி என்னை போஸிப்பாள், என்று எல்லா பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு நாம் சும்மா இருந்தோம். அதனால் சுகமாக இருந்தோம். எப்போது என்னை நான் பார்த்து கொள்வேன் என செயல்பட துவங்கினோமோ அப்போதே துயரம் என்ற காரிருள் நம்மை சூழ ஆரம்பித்துவிட்டது.

அம்மா தான் எல்லாம் என்ற ஞானம் மனிதனுக்கு புதியதாக வந்ததல்ல, பச்சை மாமிசத்தை தின்று இலை தழைகளால் உடல் மறைத்து மரக் கொம்பிலும், குகைக்குள்ளும் மனிதன் வாழ்ந்த போதே இதை உணர்ந்துவிட்டான். இதனால் தான் தாயாரை தெய்வமாக கருத வேண்டும் என்ற நிலையில் இருந்து தெய்வத்தையே தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டான். அன்று முதல் தோன்றியது தான் தாய் தெய்வ வழிபாடாகும்.

நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நினைந்திருக்கும் பராமாத்மாவை பரம தாயாளனான  இறைவனை தாயாக ஒரு பெண்ணாக பார்ப்பது மனிதனின் கற்பனையல்ல. எல்லாமான எம்பெருமானுக்குள் எல்லாமும் இருக்கிறது. ஒரு தாயினுடைய அன்பில் மூலம் எங்கே இருந்து வருகிறது. எந்த விரலை தொட்டாலும் அறிய முடியாத பாசத்தை  உணர்கிறோமே அந்த கருணை, அந்த பாசம் எங்கே இருந்து வருகிறது எது அதனின் மூலம் என்று நெருங்கி பார்த்தால் கருணாமூர்த்தியான கடவுளிடம் இருந்து வருவதை உணர முடிகிறது.

அதனால் தான் இறைவனுக்குள்ளும் இறைவி இருக்கிறாள் என நமது முன்னோர்கள் சொன்னார்கள். தாயிற் சிறந்த தயாவான தத்தவனே என மாணிக்கவாசகர் சொல்வதும், அப்பன் நீ, அம்மை நீ என்று அப்பர் சாமிகள் சொல்வதும் இதனால் தான். ஓங்கி உலகளந்து நிற்கின்ற பராமாத்மா நமது உடலையும் உயிரையும் வளர்கின்ற அம்மாவாகின்றான். அறிவை வளர்த்து ஆத்ம அனுபவத்தை தருகின்ற அம்மாவும் அவன் தான். மனித தாய் வயிற்று பசிக்கு பால் தருவது போல தெய்வ தாயான கடவுள் நம் ஞான பசிக்கு மோன வழியில் ஞான பால் தருகிறான். இப்படி இன்னும் ஏராளமான காரணங்களை தனக்குள் கொண்டு வளர்ந்து தான் சக்தி தத்துவம் என்ற சாக்த்த மத பிரிவாகும்.

இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக கண்டு வரும் நாம், முதலில் வழிபாடு என்பதே சிவலிங்கத்தில் இருந்து தான் துவங்கியது என கண்டோம். சிவ வழிபாடு என்பது எப்படி காலத்தால் கணித்து கூறமுடியாத அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறதோ அதே போலவே சக்தி வழிபாடு என்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள வைஷ்ணவம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் போன்ற பிரிவுகள் எல்லாம் சிவ சக்தி வழிபாட்டுக்கு பிறகே வந்தது என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே அடுத்து வரும் சில பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்ற சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் மகத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.  குருஜியின் அருளாசியுடன்....அன்புடன் கே எம் தர்மா....

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!