Search This Blog

Oct 17, 2011

சிவவாக்கியம் (066-070) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (066-070)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 



சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-066
கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர்
பழ்த்தவாய் விழுந்து போன பாவமென்ன பாவமே
அழுத்தமான விதத்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே  
கழுத்தையும் நிமிர்த்து அலறிக் கொண்டே நல்ல கண்களையும் விழித்துக் கொண்டே பாம்பின் வாய் அகப்பட்ட தவளையைப் போல் நீங்கள் மரணத்தின் வாயில் அகப்பட்டு இம்மாய வாழிவில் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன பாவமோ!! ஒ மனிதர்களே!! இந்த மாயப்பொய் வால்ழ்வு பான்பின் வாய் வீழ்ந்து இரையாகும் தவளைப் போன்று நாம் சிறிது சிறிதாகச் சாவதாக அல்லவா? அமைந்துள்ளது. இப்படிப்பட்ட இம்மரணத்தை வென்று மீண்டும் பிறவாதிருக்க நம் ஆன்மாவில் அழுத்தமான வித்தாக விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அது அனாதியாய் உள்ள ஒரேழுத்தாக இருப்பதை அறிந்து அந்த உணர்வுறு   மந்திரத்திலேயே மனதை நிறுத்தி வாசியாய் இருத்தி தியானம் செய்து வாருங்கள். மாயை நீங்கி சிவத்தோடு என்றும் இருக்கலாம். 
**********************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-067
கண்டுநின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்கு மாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமைய்ப் பயந்த வேத சுத்தராய்
ஆண்ட முத்தியாகி நின்ற ஆதிமூலம் ஆவீரே.


இவ்வுலக வாழில் மாயையான உடம்பில் கலந்து நின்ற பஞ்சபூதங்களையும் கண்டு தியானித்திருங்கள். உண்பதையும் உறங்குவதையும் அனுபவித்து அறிவது போல் உங்களுக்குள் உள்ள உண்மைப் பொருளை உணர்ந்து அதிலேயே மனதை நிறுத்தி தியானித்திருக்க வல்லவர்களானால் ஆறு ஆதாரங்களும் ஒன்றாக ஆகி வேதங்கள் கூறும் பரிசுத்தமான இடத்தில் மெய்ப்பொருள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்டாலே இந்த அண்டத்தில் முக்தி அடையலாம். அதிலேயே நின்று யோக சாதகத்தால் மூன்று  தீயையும் இணைத்து தவம் புரிந்தால் ஆதிமூலமான அப்பரம் பொருளை அடைவீர்கள்.
*********************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -068
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை 
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே.

மூலநாடியான சுழுமுனையில் வாசியோகம் செய்து அதனால் வரும் நாத சப்தத்தால் அங்கெ தோன்றி எழுந்த சோதியில் மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து நாடி செய்து தவம் புரியும் யோக  ஞான சாதகர்கள் என்றும் இளமையோடு பாலனாக வாழ்வார்கள். அதன் பலனாய் அவர்களே பரப்பிரமமாய் அவார்கள்  இது  ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் என்று சொல்கின்றேன்
******************************************************** .
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -069

ஈன்ற வாசலுக்கே இரங்கி எண்ணிறந்து போவீர்காள் 
கான்ற வாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன்ற மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே

பெண்கள் மேல் கொண்ட மையலினால் அவர்களுக்கு இரங்கி வாழ்நாள் முழுதும் உழைத்து இளைத்து மாண்டு போகின்ற மனிதர்காள்! வாழையடி வாழையாக வாழைமரம் கன்று ஈன்றதாயும் பூ பூத்து காய்க்கும் காரணத்தை அறிவீர்களா!! மனிதர்களுக்கும் வாழைக்கும் நீரே வித்தான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நந்தியின் வாசலைத் திறந்து மெய்ப்பொருளையே நாடி நோக்கியிருந்து தியானித்திருக்க வல்லவர் ஆனால் மனத்தினால் தோன்றுகின்ற மாயைகள் யாவும் நம்மைவிட்டு ஒழிந்து நம்முள் அருட்பெரும் ஜோதியாக ஈசன் வந்து தோன்றுவான்.
****************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -070

உழலும் வாசலுக்கு இறங்கி ஊசலாடும் ஊமைகாள்  
உழலும் வாசலைத் துறந்து உண்மை சேர எண்ணிலிர்
உழலும் வாசலைத் துறந்து உண்மை நீர் உணர்ந்த பின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே!!


வீடு மனைவி மக்கள் செல்வம் என்று அதற்காகவே அலைந்து உலக வாழ்வில் இன்ப துன்பங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஊமை மக்களே! நம்மை மீண்டும் பிறவிப்பிணியில் ஆட்படுத்தி உழலும் அந்த வாசலைத் துறந்து உண்மையை உணர்ந்து மெய்ப்பொருள சேர்ந்து மீதும் பிறவா நிலை பெற எண்ணம் வையுங்கள்.  அனைத்தையும் துறந்து அவனே கதியென சரணடைந்து தன்னைத் தான் அறிந்து தனக்குள்ளேயே இறைவன் இருக்கும் உண்மையை உணர்ந்து தியானியுங்கள் நம்மில் இருக்கும் பத்தாம் வாசலில் உள்ளிருந்து உழலும் சோதியான மெய்ப்பொருளையே பற்றி இருங்கள் நீயே அதுவாகிய பெருன்மையாக ஆவீர்கள்
**************************************************************************** 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!