Search This Blog

Aug 3, 2011

மாயஜால சக்திகளைத் துறந்து ஆத்மா விடுதலை


வாயிலிருந்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையில் விபூதி மற்றும் தங்க சங்கிலி எடுப்பதும் பல சாமியார்களின் சித்து வேலையாக இருக்கிறது. இந்த சித்துக்கள் நிஜமானதா? அப்படி செய்கின்ற வர்களை குருமார்கள் என கருதலாமா? என்று பலருக்கு சந்தேகம் உண்டு. இன்னும் பலரோ சித்து வேலைகளை கண்டு பிரமித்து மயங்கி விடுகிறார்கள்.  நம்மால் செய்ய முடியாததை இத்தகைய சாமியார்கள் செய்யும் போது அவர்களிடம் விஷேச சக்தி இருப்பதாக நினைத்து மலைப்படைந்தும் விடுகிறார்கள்.

பதஞ்சலி மகரிஷி என்பவர் யோக சூத்திரம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கைவல்லிய பாகம் என்ற பகுதியில் இந்த மாதிரி பல சித்துக்களை பற்றி மிக விரிவாகவே சொல்கிறார். என்னென்ன சித்துக்கள் செய்யலாம்சித்து செய்யும் சக்தியை எந்த வகையில் பெறலாம் என்பதை பற்றியெல்லாம் விவரிக்கிறார். முக்காலத்தையும் கூறுவது, தண்ணீல் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது என்று சித்துக்களின் மிக நீண்ட பட்டியலையும் தருகிறார்.
அந்த நூலில் கடைசியாக மாபெரும் சித்து சக்தியாக அவர் எதை குறிப்பிடுகிறார் என்றால் தன்னையும், தன் புலனையும் அடக்கி மாயஜாலசக்திகளை துறந்து ஆத்ம விடுதலை பெறுவதே  அவர் கூறும் மாபெரும் சித்தாகும்.  

யோக வாழ்க்கையில் நடுப்பகுதியில் யோகம் பயில்பவர்களுக்கு சில அதீத சக்திகள் உண்டாகும்.  தரையிலிருந்து ஒரு அடி உயரமாவது எழுவது, நினைத்தது எல்லாம் நடப்பது, கேட்பதெல்லாம் கிடைப்பது, சொல்வதெல்லாம் பலிப்பது என்று இன்னும் சில சக்திகளை பெறலாம்.  பெருவாரியான யோகிகள் இந்த சக்தி கிடைத்தவுடன் தாங்கள் முழுமை பெற்று விட்டதாக நினைத்து பொது ஜனங்களிடத்தில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.  இதனால் அவர்கள் ஆத்ம விடுதலையை நோக்கி பயணபடாமல் சாதாரண உலக சுகங்களில் மயங்கி கிடக்கிறார்கள்.

ஆண்டவனை அடைய நினைக்கும் யோகிக்கு ஆண்டவனை காண துடிக்கும் ஞானிக்கு சித்துக்கள் என்பது மலத்துக்கு சமமானது. ஞானிகளுக்காக இறைவனே சில சித்துக்களை நடத்தி காட்டுவானே தவிர ஞானிகள் அதை செய்யமாட்டார்கள். யோக வாழ்க்கையில் முறைப்படியான பயிற்சி பெறுவதன் மூலம் சித்துக்கள் பெறுவது ஒருவகை.   போலியாக பல சித்துக்களை செய்து காட்டுவது இன்னொருவகை. வாய்க்குள் இருந்து லிங்கம் எடுப்பதெல்லாம் சரியான மோசடியாகும். 

வெறுங்கையில் விபூதி வரவழைப்து, மலர்களை வரவழைப்பது, தங்க சங்கிலிகளை வரவழைப்பது என்பதில் பல மோசடிகள் இருந்தாலும் தாந்ரீக கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்ற சில சாமியார்கள் யட்சினி என்ற முக்கால் பங்கு பைசாசத்தை வசியப்படுத்தி இம்மாதிரியான காரியங்களை செய்கிறார்கள். வேறு சில சாமியார்கள் தங்களது ஆடைகளுக்குள்ளோ உடம்பிற்குள்ளோ பொருட்களை மறைத்து வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியிலெடுத்துக் காட்டி நம்மை அதிசயத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். ஒரு உண்மையான சாது தன்னிடம் ஆயிரம் சித்து சக்தி இருந்தாலும் அதை தேவை இல்லாமல் தன்னை பெருமை படுத்திக் கொள்ளும் விதத்தில் வெளிப்படுத்த மாட்டார். ஆனால் தன்னை முழுமையாக நம்பிய மனிதர்களுக்காக கடவுளின் திருவுள்ளத்தை உணர்ந்து பயன் படுத்துவார்

சில சாதுக்கள் அப்படி செய்தற்காக பயனாளிகளிடம் காணிக்கை கூட பெருவார்கள் . ஆனால் அந்தக் காணிக்கை அவர்களின் சொந்த உபயோகத்திற்கு எடுக்க மாட்டார்கள். ஆலயத் திருப்பணிகள் சமூக சேவைகள் என்று செலவு செய்து விடுவார்கள் . இப்படிப்பட்ட நிறையபேர்களை நானறிவேன். எனவே சித்து வேலைகள் செய்பவர்கள் அனைவரும் போலிகள் என்றும் கூற இயலாது. இந்தத் தரவரிசையில் அசலையும் போலிகளையும் அடையாளம் காணுவது சாதாரண மனிதர்களுக்கு சற்று கடினம்தான்

2 comments:

  1. உபயோகமான தகவலுக்கு நன்றி ...

    ReplyDelete
  2. தங்களின் கருத்து பதிவுக்கு மிக்க நன்றி முத்து அவர்களே !!! பாலோயர் லிஸ்டில் தாங்களும் பதிவு செய்து கொள்ளலாமே!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!