நண்பர் என்.கணேசன்... "பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்படுகிறேன். கீதோபதேசம் அர்ஜுனனிற்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது".
மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.
கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறார் நண்பர் என்.கணேசன் அவர்கள். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் அதன் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க நண்பர் - என்.கணேசன் முற்பட்டுள்ளார். இது அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
மீள்பதிவு: நன்றியுடன்-என்.கணேசன், விகடன் மற்றும் தொடர்பு வலைப்பூக்கள்.
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!