Search This Blog

Jul 22, 2011

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு(பேப்பர்-5,6,7), செப்டம்பர்,1893.


இறந்த பின்னரும் வாழ்கை.

இந்து மதம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் பகுதி.(பேப்பர்-5)
 (இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாகவும், தமிழாக்கம் கட்டுரைப் பகுதியாகவும்)

பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாக செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி ஆன்மாவுக்கும் கடந்த கால விளைவுகளின் காரணமாக சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. இப்படி குறிப்பிட்ட சில இயல்புகளுடன் கூடிய ஆன்மா குண ஒற்றுமை விதிகளுக்கு (LAW OF AFFINITY) இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. 
இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்ப செய்வதால்தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு அது அந்த செயலை திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்றே ஆகிறது. அந்த இயல்புகள் இந்த பிறவியில் பெறப்பட்டவை அல்ல. ஆதலால் அவை முந்திய பிறப்புக்களிலிருந்தே வந்திருக்க வேண்டும்.


 இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவை எல்லாம் சரியென்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை. இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கின்றேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில் என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத்தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்கு சிறிது முயன்றால் போதும் அவை விரைவில் வந்து விடும். 
மனக் கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி. மனத்தின் ஆழத்தில்தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகின்றது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியைப் பற்றி நீங்களும் அறியலாம். இது நேரான நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப் படுவதுதான் ஒரு கொள்கை சரி என்பதற்கு சான்று. உலகில் ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுதான். நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறி விடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள். 
புனித  ஆத்மா வினைப்பயனாக  மாறுதல்களுக்குட்படுகிறது.
இந்து மதம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் பகுதி.(பேப்பர்-6) 

தான் ஒரு ஆன்மா என்று இந்து நம்புகின்றான். ஆன்மாவை வாள் குத்திக் கிழிக்கவோ, வெட்ட முடியாது, நெருப்பு அதனை எரிக்க முடியாது, காற்று அதனை உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லை இல்லாதது ஆனால் உடலை மையமாக வைத்துக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஒரு உடலில் இருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகின்றான்
சடப் பொருளின் நியதிக்கு ஆன்மா கட்டுப் பட்டதல்ல.அது இயல்பாகவே சுதந்திரமானது. தளைகள் அற்றது, வரம்பு அற்றது. புனிதமானது, தூய்மையானது, முழுமை யானது. எப்படியோ அதுதான் சடத்துடன் கட்டுப் பட்டதாகத் தன்னை காண்கிறது. எனவே தன்னை சடமாகவே கருதுகிறது.  
சுதந்திரமான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்துக்கு அடிமையாக இருக்க வேண்டும், என்பது அடுத்த கேள்வி. கடந்த கால வினைகள், நிகழ்காலத்தையும், நிகழ்கால வினைகள் வருங் காலத்தையும் நிர்ணயம் செய்வதால், ஆன்மா தனது மையத்தை மாற்ற வேண்டி இவ்வாறு சடத்துக்கு (உடலுக்கு) கட்டுப் பட்டதாக கருதுகிறது. 

ஒ, அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே ! கேளுங்கள்
இந்து மதம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் பகுதி.(பேப்பர்-7)
இங்கு மற்றுமோர் கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி ஒரு கணம் கடல் அலையின் நுரை உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே "ஆ"வென்று பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினைத் தீவினை ஆதிக்கத்தில் மேலும் கீழும் உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா, மனிதன்?  
கடும் சீற்றமும் படு வேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் உதவியற்ற பொருளா, மனிதன்? இல்லை விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகைக் குரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா, மனிதன்?
இதை நினைக்கும் பொழுது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இதுதான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து, நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா? என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்த குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய , அவர் எழுந்து நின்று, உலகோரைப் பார்த்து கம்பீரத் தொனியுடன் பின்வரும் செய்தியினை முழங்கினார்.

ஒ, அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே ! கேளுங்கள், உயர் உலகங்களில் வாழ்பவர்களே, மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால் தான் நீங்களும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.!  
அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே, ஆஹா எவ்வளவு இனிமையான நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதர்களே, அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம் உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கின்றான். நாம் ஆண்டவனின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமானவர்கள், பூரணமானவர்கள், வையத்துள் வாழும் தெய்வங்களே, நீங்கள் பாவிகள் என்று சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம்.
சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள், நீங்கள் மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்திரமான, ஆன்மாக்கள். நீங்கள் சடப் பொருள்கள் அல்ல. நீங்கள் பணியாள், நீங்கள் இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத்தொகுதியாக வேதங்கள் கூறவில்லை, காரண காரியம் என்னும் எல்லையற்ற சிறைச்சாலையை அறிவிக்க வில்லை. சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கின்றான். அவனது கட்டளையால்தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடை போடுகிறது என்றாகிறது.
மேலும்  சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவினைக் காண்போம்..பயணிப்போம்...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!