Search This Blog

Jul 19, 2011

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு(பேப்பர்-2,3,4), செப்டம்பர்,19,1893.


சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு செப்டம்பர்,19,1893

 
இந்து மதம் என்ற தலைப்பில்
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு(தமிழாக்கம்). 
அவர் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி.(பேப்பர்-2), செப்டம்பர்,19,1893. 
இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாகவும், தமிழாக்கம் கட்டுரைப் பகுதியாகவும்:-

இவ்விதிகள், அவை விதிகளாதலால் முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு தொடக்கமும், முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கின்றதென்று விஞ்ஞானம் நிரூபித்து இருப்பதாக சொல்லப் படுகிறது. அப்படியானால் பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால், இப்போது காணப்படும் அந்த சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க
நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் கடவுள் சிலகாலம் ஒடுக்கநிலையிலும், சிலகாலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்று ஆகிறது.  அதாவது கடவுள் மாறக்கூடிய தன்மையை உடையவர் என்றாகிறது. எப்பொழுதுமே, மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத்தான் இருக்க வேண்டும் எண்டு அறிவியல் கூறுகிறது. எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரும் என்பதும் விதியாகிறது. அப்போது இறைவன் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம் அல்லவா? ஆகையால், படைப்பு இல்லாதிருந்த காலம் ஒருபோதும் இருந்ததில்லை. 

இதை ஒரு உவமையால் விளக்க நினைக்கின்றேன்.படைப்புத் தொழிலும், படைப்பவனும் தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (CHAOS ) பல ஒழுங்கு முறைகள் (SYSTEMS ) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன. சிறிது காலம் செயல்படுகின்றன. பின்னர் அழிந்து விடுகின்றன. இதனையே அந்தணச் சிறுவன் தினமும் ஒதுகின்றான். பழைய கல்பங்களில் இருந்த சூரியன்களையும், சந்திரர்களையும் போன்றே சூரியனையும், சந்திரனையும் கடவுள் படைத்தார். இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.

 
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு செப்டம்பர்,19,1893.
இந்து மதம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் மூன்றாம் பகுதி.(பேப்பர்-3)
 
இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாகவும், தமிழாக்கம் கட்டுரைப் பகுதியாகவும்:-

இங்கு நான் நிற்கின்றேன். கண்களை மூடிக் கொண்டு நான். நான், நான் என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் எண்ணத் தோன்றுகிறது. உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால், சடப் பொருள்களின் மொத்த உருவம்தானா, நான்? "இல்லை" என்கின்றன வேதங்கள். "நான்" ...உடலில் உறைகின்ற "ஆன்மா". "நான்" அழியமாட்டேன். நான் இந்த உடலில் இருக்கின்றேன். இந்த உடல் வீழ்ந்து (அழிந்து)விடும். ஆனால், "நான்" வாழ்ந்துகொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப் பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியாயின் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டி வரும். எனவே ஆன்மா படைக்கப் பட்டதாயின் அது இறக்க வேண்டும்.

சிலர் பிறக்கும் பொழுதே இன்பத்தில் பிறக்கின்றார்கள். உடல் வளத்தோடும், வனப்போடும், மன வலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும், நொண்டியாகவும், இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் படைக்கப்பட்டவர்கள் என்றால் நேர்மையும், கருணையும் உள்ள கடவுள் ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும், இன்னொருவரை துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும். அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்ட வேண்டும்.  

இந்த பிறவியில் துன்பப் படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் ஆய்வார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும், கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருரவேண்டும். எனவே படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால் ஒருவன் மகிழ்வதற்கோ, துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள் அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப் படுகின்றது அல்லவா?
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு
இந்து மதம் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் பகுதி.(4),செப்டம்பர்,19,18​93. 
இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பாகவும், தமிழாக்கம் கட்டுரைப் பகுதியாகவும்:-

வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன. ஒன்று- மனதைப் பற்றியது. இன்னொன்று- சடப் பொருளாகிய உடம்பினைப் பற்றியது. சடப்பொருளும் (உடம்பும்) அதன் மாற்றங்களும் மட்டுமே இப்போதைய நிலைமையை விளக்கிவிடும் என்றால் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி ஒரே பொருள்தான் இருக்க முடியும் என்றால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும், இப்போது நமக்கு அவசியம் இல்லை.
மேலும்  சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவினைக் காண்போம்..பயணிப்போம்...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!