Search This Blog

Jul 10, 2011

இந்து மத வரலாற்று தொடர்(பாகம் 17) உபநிஷதங்கள்-கடோபநிஷம்




இந்து மத வரலாற்று தொடர்(பாகம் 17)
குருஜியின் அருளாசியுடன்...

டுத்தடுத்து  நான்கு அத்தியாயங்களில் வேதங்களின் சாரத்தை தெளிவாக பார்த்தோம்.  அதை படித்த அறிவு நுட்பமுடைய வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும்.  வேதத்தை அறிவின் பெட்டகமாக ஆராய்ச்சியின் உறைவிடமாக இதுவரை கருதி வந்திருக்கிறோம்.  

ஆனால் சென்ற அத்தியாயங்களில் அவற்றை படிக்கும் போது நமது கருத்துக்கும், மதிப்பிற்கும் உரிய அளவிற்கு அதில் விஷயங்கள் எதுவும் விசேஷமாக இல்லையே என்று தோன்றும்.  இறைவனை துதிப்பதும் அவரிடம் பிரார்த்தனைகள் வைப்பதும் தான் வேதத்தில் மையகருத்து என்றால் அறிவுக்கு அங்கே இடம் எதுஎன்றெல்லாம் தோன்றுவது இயற்கை யாகும்.

 
மிக முக்கியமாக ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.  துதிப்பாடல்களும், பிரார்த்தனைகளும் வேத சுலோகங்களில் அதிகம் தான் என்றாலும் அந்த சுலோகங்களின் மையக்கருத்தாக பல அரிய விஷயங்கள் மறைந்து கிடப்பதை வேத நூல்களை முழுமையாக படிக்கும் போது அறியலாம்.  அதே நேரம் வேதத்தின் நாத லையம் தான் ஜீவனே தவிர அதன் கருத்துக்கள் அவ்வளவாக முக்கியம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பிரபஞ்சத்தில நாலாதிசையிலும் பரவி உள்ள சப்த சமுத்திரத்தை வேதங்கள் தனக்குள் கொண்டுள்ளது.  அதை சுருதி சுத்தமாக பாராயணம் செய்யும்போது தான் வேத ஒளியில் நம்மால் முழுமையாக நனைய இயலும்.  அதே நேரம் வேத பரிபாஷையை அறியாமல் மொழி மாற்றம் செய்யப்பட்ட சுலோகங்களை படித்துவிட்டு வேதக்கருத்தை முழுமையாக புரிந்துகொள்ள இயலாது.  எனவே வேதத்தை முழுமையாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் வடமொழி பயின்று நான்கு வேதங்களையும் கற்றுக்கொண்டால் அறிவின் சிகரத்தை நிச்சயமாக அடையலாம்.  மேலும் வேத அறிவை எல்லோரும் அறிந்து கொள்வதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதுதான் உபநிஷதங்கள் ஆகும்.

உபநிஷதங்களில் தான் இந்திய ஞானிகளின் அறிவு முழுவதும்  கொட்டிக் கிடக்கிறது.  இந்த நூல்களுக்கு இணையான அறிவு நூல்கள் இதுவரை உலகில் படைக்கப்படவில்லை.  என்றே சொல்லலாம்.  காடுகளில் தூய்மையான காற்றையும், தெளிவான நீரையும், பருகிக் கொண்டு ஏகாந்தமாக வாழ்ந்த ரிஷிகள் தங்களது அனுபவ அறிவை உபநிஷதங்களில் அப்படியே உருக்கி வைத்திருக்கிறார்கள்.  அவைகளில் உள்ள வண்ணமயமான உண்மைகள் இன்றும் நமது வாழ்க்கைக்கு ஊன்று கோலாக மட்டுமல்லஅஸ்திவார மாகவும் அமைந்திருக்கிறது.  அக்கருத்துக்களை ஓரளவு நாம் தெரிந்து கொண்டால் இந்து மதத்தினுடைய அறிவின் வரலாற்றின் மிக பெரும் பிண்ணனியை நன்கு உணரலாம்.

 
உபநிஷதங்கள் என்றால் அருகாமையில் இருப்பது என்று பொருள் ஆகும்.  எதனருகாமையில்சகலத்தையும் கற்று உணர்ந்த அனுபவித்து உணர்ந்த மகாஞானியின் அருகாமையில் இருப்பது என்று பொருள் ஆகும்.  பல நூறு உபநிஷதங்கள் உள்ளன.  அதில் நூற்றி பதினெட்டு உபநிஷதங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவைகள் ஆகும்.  ஜெகத்குரு ஆதிசங்கர பகவத் பாதாள் 10 உபநிஷதங்களுக்கு வியாக்கியானம் எழுதி உள்ளதால் அந்த பத்தும் மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது.  

அவைகளில் சில உபநிஷதங்ககளின் கருத்துக்களை இப்போது நாம் சிந்தனை செய்வோம். அறிஞர்கள் பலராலும் வியப்புடன் பேசப்படுவது கடோபநிஷமாகும்.  இது அப்படி பேசப்படுவதற்கு மிக முக்கிய காரணம் வாழும் போது மனிதன் கடைபிடிக்க வேண்டிய கடமைகளையும், வாழ்ந்தபிறகு அவன் அடையும் நிலைமைகளை இந்த உபநிஷதம் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.  அதேநேரம் வாழ்க்கையை பற்றியுள்ள அச்சத்தை விலக்கவும் வழிவகை செய்கிறது.

கடற் என்ற முனிவரால் இயற்றப்பட்டது கடோபநிஷதம் ஆகும்.  இது யஜூர் வேத்தில் தைத்திரிய பிரிவில் இடம் பெற்றிருக்கிறது.  பழையகால வடமொழி இலக்கியத்தில் காணப்படும் கதையமைப்பு இந்த உபநிதத்தில் மையமாக எடுத்தாளப் பட்டிருக்கிறது.  

வாஜசிரவஸ் என்ற ஏழை அந்தணன் மகன் நசிகேதன் இவன் குழந்தை பருவத்திலேயே ஆத்ம விழிப்பு பெற்றவன்.  ஒரு சமயம் இவனது தந்தை யாகம் நடத்தி மெலிந்து போன பசுக்களை தானம் கொடுக்கும் போது அப்படி கொடுப்பது தவறென தந்தைக்கு சுட்டிக் காட்டி அப்பசுக் களுக்கு பதிலாக  தன்னைத் தானம் கொடுக்குமாறு வற்புறுத்துகிறான்.  பையன் பலமுறை ஒரே விஷயத்தை வற்புறுத்தியதால் எரிச்சலுற்ற தந்தை மகனை பார்த்து உன்னை எமனுக்கு தானம் கொடுத்து விட்டேன் என்கிறான்.

இதைக்கேட்ட நசிகேதன் தான் யாருக்கு தாரை வார்க்க பட்டோமோ அவரிடத்தில் இருப்பது தான் தர்மம் என்று கருதி எமன் உலகம் செல்கிறான்.  எமனிடம் 3 வரங்களையும் பெறுகிறான்.  முதலாவது தன்னை உயிரோடு  பெற்றவர்களிடம் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது, இரண்டாவது தன்னுடைய நற்செயல்கள் எதுவும பலம்  இழக்காமல் இருக்கவேண்டும்,  3-வதுதாக பெற்றதுதான் மிக முக்கியமான வரமாகும்.  மறு பிறப்பை வெல்லும்.  வழியை தனக்கு சொல்ல வேண்டும்.  என்பது ஆகும்
 
கடோபனிஷதம் 2 பிரிவாக இருக்கிறது.  ஒவ்வொரு பிரிவிலும் மூன்று உட்பிரிவுகள் இருக்கிறது.  இதனுடைய பிரார்த்தனை மந்திரம் மிகவும் கவிதை நயத்துடன் அழகிய முறையில் அமைந்துள்ளது.  இறைவன் நம் இருவரையும்  காப்பாறாக.  நமது இருவரிடமும் அவர் மனநிறைவு கொள்வாராக.  நாம் சீறிய திட்டத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவோமாக.  கல்வியின் மூலமும், அனுபவத்தின் மூலமும் ஆன்ம ஒளியில் பெறுவோமாக.  நம்மிடையே எந்த பொழுதிலும் எந்த நிலையிலும் வெறுப்பும் பகையும் ஏற்படாது உழைப்போமாக என்று தொடங்கும் பிரார்த்தனை மந்திரம் இன்றைய நிலையிலும், எந்த அளவிற்கு தேவைப் படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு நீண்ட புல்லானது தளிராக இருந்து வளர்ந்து உலர்ந்து காய்ந்து போவது போல் ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்க்கை நிலையில் நிலையில்லாமல் அற்ப காலமே வாழ்ந்து மறைந்து போகிறான்.  பிறகு மீண்டும் பிறந்து அதன் பிறகும் இறந்து  தொடர்ச்சியாக பிறவி தளைக்குள் சிக்கி தவிக்கிறான்.  

இந்தக் கருத்தை எடுத்த  உடனேயே கடோபனிஷதம் தூக்கிக் காட்டுகிறது.  எப்படியென்றால் எல்லா உயிர்களும் தோன்றி வளர்ந்து முதிர்ச்சியடைந்து சிதைந்து மடிகின்றன.  மனிதனின் நிலையும் அதுதான் சாஸ்வதமான வாழ்க்கையை பெறாவிட்டாலும் கூட தொடர்ந்து வாழ்வதை தவிர்க்க இயலாது.  என்ற வாசகத்தால் மறுபிறவி சித்தாந்தம் வலியுறுத்தப்படுகிறது.

 
மேலும் வாழ்க்கையின் படித்தரத்தை அதாவது  பரிணாம வளர்ச்சியை அழகிய முறையில் இந்த உபநிஷதம் வடிவமைத்து காட்டுகிறது.  உங்கள் மூதாதையரை பொறுத்த வரை அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது.  என்பதை எண்ணிப் பாருங்கள் இப்போது இருக்கும் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை அவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள் மனிதன் தானியப் பயிர்களை போல வளர்ந்து முதிர்ந்து உதிர்கிறான்.  தானியங்களை போலவே மீண்டும் முளைத்து எழுகிறான்.  இந்த வாசகம் மனிதனின் வாழ்க்கை மரணத்தால் கூட முடிவடையாமல் மீண்டும் மீண்டும் ஒரு சக்கரத்தை போல சுழன்று கொண்டிருப்பதை நமக்கு காட்டுகிறது.

இன்று விஞ்ஞானிகளும் சரி  மெய்ஞானிகளும் சரி ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து வாதப்பிரதி வாதங்கள் செய்து வருகிறார்கள்.  அது என்னவென்றால் மரணத்துக்கு பிறகும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்றும் இல்லை இல்லை அத்தோடு முற்று பெற்று விடுகிறது என்றும் கருதுவதாகும்.  இதில் எது உண்மை என்பதை கடோபனிஷதம் மிக தெளிவாக நமக்கு சொல்கிறது.  

இந்த விஷயத்தில் தேவர்களுக்குகூட இன்னும் சந்தேகம் இருந்து வருகிறது.  மறுபிறப்பு  கர்மாக்கள் என்பதை புரிந்துகொள்வது அத்தகைய கடுமையான விஷயமாகும்.  அந்த உண்மைகள் வெகு நுட்பமானது.  அதை தொடர்ச்சியான மனப்பயிற்சியாலும் ஒருமைப்பாட்டாலும், உணர்ந்து கொள்ளலாமே தவிர வாதங்களால் அல்லது பௌதிக சாதனங்களால் நிறுபித்து விட இயலாது என்று மிக தெளிவாக அருதியிட்டு உபநிஷதம் கூறுகிறது.

நசிகேதன் எமதர்மனிடம் மிக முக்கியமான கேள்வியை வைக்கிறான்.  ஒரு மனிதன் நிலையான சுகத்தை அடைவது எப்படிபெண் சுகத்தால் சாசுவதமான இன்பத்தை அடைந்து விடமுடியாது.  அந்த சுகத்தை முதுமையானது தடுத்துவிடும். அதேபோல அதிகார பலமும் நிலையான இன்பத்தை தந்துவிட முடியாது.  போட்டிகளும், யுத்தங்களும் பதவிகளை எப்போதுமே நிலையில்லாது செய்துவருகின்றன.  பணத்தாலும் மனித மனம் நிறைவு கண்டுவிடுவது இல்லை.  மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து அச்சத்துடன் காத்துக் கொண்டிருக்கும், மனதை பதவியும், பெண்ணும் செல்வவளமும் திருப்தி அளிக்க விட்டுவிடாது.  ஆகவே நிலையான இன்பம் அழியாத வாழ்க்கை எதுஅதை எனக்கு விளக்கமாக சொல் என்கிறான்.

இதற்கு தர்மத்தின் தலைவனான மரண தேவன் சரியான பதிலை தருகிறான்.  தகுதியானது என்பது வேறு சுகம் தருவது வேறு.  இரண்டும் வெவ்வேறு கோணத்தில் பலன்களை தந்து மனிதனை பிணைத்து வைத்திருக்கிறது.  இவ்விரண்டிற்கு உள்ளே உள்ள தகுதியானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மையே விளைகிறது.  ஆனால் சுகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவன் தன்னுடைய நோக்கில் தோல்வி அடைகிறான்.  அறிவாளிகளான சிலர் மட்டுமே சுகமானதை தவிர்த்து விட்டு தகுதியான பாதையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகிறார்கள். 
  
ஆனால் பலநூறு ஜனங்கள் தகுதியானது எது என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.  அதனால் அவர்களது வாழ்க்கை பாதை சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது.  இதை மிக நுட்பமான முறையில் தான் தெரிந்து கொள்ள இயலும். அறிவும், அறியாமையும் வெவ்வேறு விதமாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.  அவைகள் வெவ்வேறு எல்லைகளை கொண்டது.  அறியாமையில் உள்ளபவர்கள் தங்களை உயர்ந்தவர் களாகவும், சகலத்தையும், கற்றுணர்ந்த அறிவாளிகளாகவும், எண்ணிக் கொள்கிறார்கள்.  குருடனால் வழி நடத்தப்படும் குருடனைப்போல் மூடர்கள் வளைவுகள் மிக்க பாதையில் நடந்து செல்கிறார்கள்.  கடைசியில் அவர்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதை தவிர வேறு வழியை அறியாமல் இருக்கிறார்கள். 

குறுகிய மனம் படைத்த எதிலும் கவனம் இல்லாத தவறான வழியில் இழுத்து செல்லப்படு பவர்களுக்கு பூமியில் காணும் சுகங்கள் மட்டுமே நிரந்தரமானதாக தெரிகிறது.  அவர்களுக்கு இன்னொரு உலகத்தை பற்றி எதுவும் தெரியாது.  தாங்கள் மட்டுமே தங்களால் அறிந்தவைகள் மட்டுமே உண்மையானதுசத்தியமானது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படிபட்டவர்கள் மீண்டும் மீண்டும் என்னிடத்திலேயே வந்து பலமுறை பூமியில் ஜனனம் எடுத்து வாழ்ந்து மடிகிறார்கள்.
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!