Search This Blog

Jul 8, 2011

ஜோதிடகலை:பஞ்சாங்கம் நுணுக்கங்கள். பாகம் (1 )



ஜோதிடகலை:

பஞ்சாங்கம் விளக்கங்கள்:-
ஜோதிடகலைக்கு அடிப்படையானது பஞ்சாங்கம். பஞ்சாங்கம்=பஞ்ச+அங்கம். பஞ்ச என்றால் ஐந்து, அங்கம் என்பது உறுப்பு.

அவைகள் வாரம், திதி, நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்துமேயாகும். பஞ்சாங்கம் இருவகைப் படும். வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள் ஒன்று கூடி அருளிச் செய்த சுலோகங்களில் உள்ள கணித அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். சந்திரனது வட்டப் பாதையில் ஏற்படும் இந்த வித்தியாசம் வாக்கிய பஞ்சாங்கத்தில் சேர்க்கப் படவில்லை. திருக்கணித பஞ்சாங்கம் திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக வெளி வருகிறது.

இவ்விரண்டு பஞ்சாங்கத்துக்கும் அதிக பட்சமாக 17 நாழிகை வரை வித்தியாசம் ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிஷம் வரை இந்த வித்தியாசம் ஏற்படுவதுண்டு. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இந்த வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கு. அஷ்டமி, நவமி தினங்களில் அதிகமாக இருக்கும்.

மனித வாழ்க்கையில் பஞ்சாங்கத்தின் பங்கு:
இந்த பஞ்சாங்கம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. அனைவரின் வீட்டிலும் மாட்டப் பட்டிருக்கும் தினசரி நாட்காட்டி இந்த பஞ்சாங்கத்தை கொண்டே வடிவமைக்கப் படுகிறது. தீபாவளி, பொங்கல், விநாயகர் சதூர்த்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, ராகு காலம், எமகண்டம், மாத பிறப்பு, வருடப் பிறப்பு... இப்படியாக எதை பார்க்க வேண்டுமானாலும் காலண்டர் அவசியம். மூடப் பழக்கங்களை வெறுக்கும் நாத்திகர் வீட்டில் கூட மாட்டப் பட்டிருக்கும் இந்த காலெண்டரை வடிவமைக்க பஞ்சாங்கம் மிக மிக அவசியமாகும். இந்த காலெண்டர் ஒரு ‘மினி பஞ்சாங்கம் என்றே கூறலாம்.
இந்த பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவே! அதனைப் பற்றி அறிந்துகொண்டு மேலும் பயணிப்போம். முதலில் ஜோதிட கலைக்கு அடிப்படையான பஞ்சாகத்திற்கே அடிப்படையான வருடம், மாதம் இவைகளைப் பற்றி கவனிப்போம்.

வருடம், மாதம்:   

பல இன, மொழி கலாச்சாரத்தை கொண்ட பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஒவ்வொரு இனமக்களுக்கும் ஏற்ப வருடங்கள், மாதங்கள் வகுக்கப் பட்டு வழங்கப் பட்டு வருகின்றன. இந்த வருடம், மாதம் கணக்கிடல் இருவகைப் படும். சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சௌரமானம் எனப்படும். சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சந்திரமானம் எனப்படும்.

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங் களில் ‘சௌரமானம் முறையிலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சந்திரமான அடிப்படையில் வருடம், மாதம் கணக்கிடப்படுகிறது.
தமிழ் நாட்டில் சூரியன் மேஷராசியில் நுழையும் நாளும், கேரளாவில் சூரியன் சிம்ம ராசியில் நுழையும் நாளும் வருட ஆரம்பமாகவும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களில் பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் வருட ஆரம்பமாகவும், குஜராத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளிளிருந்தும் புது வருடம் ‘சௌரமானம் வருடம் கணக்கிடப் படுகிறது. வடஇந்திய பசலி ஆண்டு, ஜூலை முதல் தேதி முதல் கணக்கிடப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டு அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் முதல் கணக்கிடப் படுகிறது. கிருஸ்துவர்கள் ஆண்டு, ஜனவரி முதல் தேதியிருந்து கணக்கிடப் படுகிறது.

இப்படியாக மாநிலத்திற்கு மாநிலம், மதத்திருக்கு மாதம் வருட, மாத ஆரம்பம் வித்தியாசப் படுகின்றன. இனி நாம் முதலில் தமிழ் மக்களுக்கு உரிய வருட முறையைப் பார்ப்போம்.

தமிழ் வருடம்:- 

சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாளான ஏப்ரல் 14- ந் தேதி முதல் இந்த வருடம் ஆரம்பமாகிறது. லீப் வருடத்தில் ஏப்ரல் 13 ந் தேதியும் சாதாரண வருடத்தில் 14-ந் தேதியும் இந்த வருடம் ஆரம்பம் ஆகும். 

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம் எனவும், 
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி எனவும், 
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆணி மாதம் எனவும், 
கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம் எனவும், 
சிம்ம  ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆவணி மாதம் எனவும், 
கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி மாதம் எனவும், 
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஐப்பசி மாதம் எனவும், 
விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் கார்த்திகை மாதம் எனவும், 
தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதம் எனவும், 
மகர ராசியில் சஞ்சரிக்கும் மாதம் தை மாதம் எனவும், 
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மாசி மாதம் எனவும், 
மீன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் பங்குனி மாதம் எனவும் வழங்கப் படுகிறது
ஒருவர் எந்த மாதத்தில் பிறந்தாரோ அந்த மாதத்திற்குரிய ராசியில் தான் சூரியன் அவருடைய ஜாதகத்தில் இருப்பார். (உ-ம்) இந்த சக்கரத்தில் காட்டியவாறு ஆவணி மாதத்தில் பிறந்தவருடைய ஜாதகத்தில் சூரியன் சிம்மத்தில் இருப்பார்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.,...ஆகிய பண்ணிரெண்டு ராசிகளில் சூரியனின் சஞ்சாரம் நடைபெறும் காலமே ஒருவருட மாகவும், பண்ணிரெண்டு மாதங்களாகவும் பிரிக்கப்பட்டு இருக்கின்றது....மேலும் பயணிப்போம் நாமே!!

3 comments:

  1. வணக்கம் நண்பரே,நல்லபல தகவல்கள்.அறிதவருக்கும் அறியாதவருக்கும்.கேளவியில்லாமல் முடிந்தால் எப்படி.என் சந்தேகம் தைமாதம் வருடப்பிறப்பானால்,பஞ்சாங்கம் மாறுமா?சூரியன் சன்ஸ்ரிப்பதுதான் மாதப்பிறப்பு என கொண்டால் மேசம் அல்லது மகரம் இதுமட்டும்தான் மாறப்போகிறது.இதிலென்ன குழப்பம்.

    ReplyDelete
  2. நிச்சயமாக வருட பலன் நாட்டுக்கும், வீட்டுக்கும் மாறும். இது குறித்து பின் வரும் பதிவுகளில் விளக்கங்கள் உண்டு என்பதனை நண்பருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். பிறக்கும் புது வருடத்திற்கும் ஜாதக பலா பலன்கள் உண்டு என்பதனை நீங்களும் அறிவீர்கள் என்றே நினைக்கின்றேன். உங்களின் கேள்விக்கு விளக்கம் இன்னும் சில பதிவுகளுக்குப் பின் வருகின்றது. நன்றி.

    ReplyDelete
  3. ஒவ்வொரு ஆண்டுக்கும் ராஜா, மந்திரி, சேனாதிபதி, ஸ ஸ்யாதிபதி,தான்யாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, இரஸாதிபதி, நீரஸாதிபதி, பசு நாயகர் என உள்ள ஒன்பது பதவிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எழுவரில் யாரேனும் சிலர் ஒரு பதவிக்கோ, அல்லது இரண்டு பதவிக்கோ நியமிக்கப் படுவார்கள். இக்கிரகங்களின் யார் ராஜா, யார் மந்திரி இன்னும் யார் யார் மற்றவர்கள் என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் உண்டாக கூடும். இதன் முழு குறிப்பும் சில பதிவுகளுக்குப் பின் வரும் நண்பர் சேகர் அவர்களே!!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!