Search This Blog

Apr 10, 2024

ஜோதிர்லிங்கங்கள் 6/12. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.

                    
     
                          
அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்.

மூலவர் : திரியம்பகேசுவரர். அம்மன்/தாயார்: ஜடேசுவரி. தீர்த்தம்: குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடிதீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்காதீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கவுதம குண்டம், வாணாசி தீர்த்தம், மணிகர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம். பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர் : திரியம்பகம். மாவட்டம் : நாசிக். மாநிலம் : மகாராஷ்டிரம் திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, கும்பமேளா. தல சிறப்பு: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி : அருள்மிகு திரியம்பகேசுவரர் திருக்கோயில், திரியம்பகம், நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலம்.

பொது தகவல் : மகாவிஷ்ணு, பிரம்மா, கிருஷ்ணர், பலராமர், ராமர், பாலாஜி, கங்காதேவி, விநாயகர், நந்தி, கோதாவரி அம்மன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். தல பெருமை : திரியம்பகம் பன்னிரு ஜோதிர் லிங்கத்தலங்களில் ஒன்று. இதனருகே பிரம்ம கிரியில் கோதாவரி நதி உற்பத்தி ஆகிறது. அம்மலையில் கவுதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கவுதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் உள்ளன. ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற இயற்கை சூழல் நிலவுதால் சித்தர்கள் வாழ்ந்த இடங்களும், ரிஷிகள் வாழ்ந்த தபோவனங்களும் உள்ளன. மூல ஸ்தானத்தில் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அதில் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும் அதிசயம் நிகழ்கிறது. புனித தீர்த்தங்கள் பல உள்ளன.

குரு சிம்ம ராசியில் வரும் போது பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப் படுகிறது. நமது நாட்டின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரியம்பகேசத்திற்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள மலைப்பகுதியானது அமைதிக்கும் மனநிம்மதிக்கும் ஏற்ற இடம் எனப் பல காலத்திலும் பல யோகிகளும், சாமியார்களும், பக்தர்களும் வந்து தங்கி அமைதி காண்கின்றனர். யாத்திரை வந்த பக்தர்களும் மனம் நிறைவு பெற்றுச் செல்கின்றனர். உலகில் உள்ள புனித ஆறுகளும், குளங்களும், தேவர்களும் கூட இங்கே வந்து அவர்கள் அடைந்த பாவங்களைப் போக்கித் தூய்மை பெற்றுச் செல்லும் சிறப்புமிக்க தலம். சிவபெருமானே இதுபுனிதத் தலம் என, சிபாரிசு செய்த தலம் ஆகும்.

குசாவர்த்த தீர்த்தத்தைத் திருமாலே இங்கேயிருந்து காவல் காத்து வருகிறார் எனில் இதன் சிறப்பு கூறவும் முடியாது. கும்பமேளா காலத்தில் இத்தீர்த்தம் மேலும் புனிதம் அடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகமாதம் தசமியன்று நிலாவில் தேவர்கள் வந்து கோதாவரியை வாழ்த்துகின்றனர். அதனை இத்தலத்தில் பெரிய விழாவாகக் கொண்டாடு கின்றனர். இராமர் இலக்குமணருடன் இங்கே வந்து, தமது தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிரார்த்தம் செய்து, அவரது ஆத்மா சாந்தியடையச் செய்துள்ளார். எனவே இங்கே, இறந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்தால் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும்.

இக்கோயில் சிவாஜி மகாராஜா காலத்தில் புதுப்பிக்கப் பட்டது. பல சொத்துக்களும், நகைகளும் கொடுக்கப் பட்டுள்ளன. தினசரி, ஒரு முக வெள்ளிக் கவசம் வைத்து வழிபாடு நடைபெறுகிறது. திங்கள் மட்டும் ஐந்து முகத்தங்கமுலாம் பூசப்பட்டது வைத்து பூசிக்கப்படுகிறது. இக்கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. தல வரலாறு: பிரம்மகிரியில் கவுதமர் என்ற மகா தவசியும் முனிவருமானவர், தமது மனைவி அகல்யாவுடன் தபோவனம் அமைத்துத் தவம் செய்துவந்தார். அவரது தவ வலிமையால் பிரம்மகிரிப் பகுதியில் மழை பெய்து செழிப்பாக இருந்தது. மற்றப்பகுதிகளில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டு குடிப்பதற்குக் குடிநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனால் தமது தினசரிப் பூஜைகளைச் செய்ய முடியாத பல முனிவர்கள் வேறு இடங்களிலிருந்து இங்கு வந்து குடியேறினார்கள். தம் குடும்பத்துடன் வந்து முனிவர்களை, கவுதமரும் அன்புடன் வரவேற்று அப்பகுதியில் தபோவனம் அமைத்து நன்கு வாழ வைத்தார்.

காலம் செல்லச் செல்ல ஒருசில முனிவர்கள் கவுதமர் மீது பொறாமை கொண்டனர். அவரது தவ வலிமையைக் குறைக்க வேண்டும். அவரை எப்படியாவது இப்பகுதி யினின்றும் விரட்டி விட வேண்டும் என எண்ணினர். அதில் ஒரு முனிவருக்கு விநாயகரை வரவழைக்கும் மந்திரம் தெரியும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்து, விநாயகரை வரவழைத்துத் தங்களது வேண்டுதலைக் கூறினார்கள். விநாயகர் முனிவர்களது எண்ணம் தவறானது என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என அறிவுரை கூறிச் சென்று விட்டார்.

முனிவர்கள் விடுவதாக இல்லை. பார்வதி தேவியின் தோழிகளில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை வரவழைத்து, ஒரு பசுவாக உருவெடுத்து கவுதமமுனிவர் ஆசிரமத் தோட்டத்தில் மேயும்படிச் செய்தனர். தோட்டத்தில் ஒரு பசு மேய்வதைக் கண்ட கவுதமமுனிவர் தர்ப்பைப் புல்லால் பசுவை விரட்டினார். மாயப் பசுவானதால் பசு இறந்தது போல் நடித்துப் படுத்துக் கிடந்தது. மற்ற முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கவுதம முனிவர் மேல் பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர். பசுவைக்கொன்ற தோஷம் நீங்க பிரம்மகிரி மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 1008 லிங்கங்கள் வைத்துப் பூசை செய்ய வேண்டும் எனவும் கூறினர். கிரியைப் சுற்றப் போதுமான வலிமையில்லாமை யினால் கவுதமர், 1008 மண் லிங்கங்களை வைத்து விரதமிருந்து சிவபெருமானை வைத்து வழிபட்டார். கடும் தவம் மேற்கொண்டார்.

சிவபெருமான் குற்றமற்ற கவுதம முனிவர்முன் தோன்றினார். தீயமுனிவர்கள் எண்ணம் தவறு என்றும், கவுதமருக்குப் பசுவைக் கொன்ற தோஷம் இல்லை என்றும் கூறினார். கவுதமரும் மகிழ்ந்து ஈசனிடம் தீய முனிவர்களின் தீய எண்ணம் மறையவும், அவர்கள் செய்த தவறின் தோஷம் அவர்களை விட்டு நீங்கவும், நாடு செழிப்பாக ஆகி மக்கள் பஞ்சமின்றி வாழவும் அருள் புரிய வேண்டும் எனவும் வரம் கேட்டார். சிவபெருமான் தமது ஜடா முடியினின்றும் சிறிது கங்கா தீர்த்தம் வரவழைத்துக் கவுதமரிடம் கொடுத்துச் சென்றார். சிவபெருமான் கொடுத்த நீரே ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே கோதாவரி அல்லது கவுதம நதி என்று கவுதமரின் பெயரால் தற்போது விளங்குகிறது. அந்தக் கோதாவரி நதி நீரில் மூழ்கி கவுதமர் தாம் இழந்த தபோ பலமெல்லாம் பெற்றார். தீய முனிவர்களையும் அவர்கள் தோஷம் நீங்க நீராடக் கூறினார்.

ஆனால் கோதாவரி நதி நீர் மறைந்துவிட்டது. கவுதமர் மீண்டும் தர்ப்பைப் புல்லைத் தக்க மந்திர உபதேசம் செய்து மறைந்த கோதாவரி நீர் குசாவர்த்தகம் என்னும் இடத்தில் தோன்றச்செய்து, தீய முனிவர்களை அதில் நீராட வைத்து அவர்கள் தோஷம் நீங்கச் செய்தார். அதன்பிறகு நாடு செழித்து நாட்டு மக்கள் பஞ்சமின்றி வாழ, கோதாவரி நதியாக நாட்டில் ஓடச் செய்தார். அதன்படியே இன்றும் பிரம்மகிரியில் உற்பத்தி ஆகும் கோதாவரி, முதலில் ஆல மர வேரிலிருந்து தோன்றி, மலைக்குள் சிறு தொட்டியில் நிறைந்து, பின் மீண்டும் மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப் படுகிறது. பின்பு கோதாவரி நதியாகத் திரியம்பகேசுவரர் கோயில் முன்பு கோடி தீர்த்தமாக உருவெடுத்து, இன்றும் ஓடுகிறது.

இந்தக் கதையே வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. போதிய மழை இல்லாமையால், உலகத்தின் நன்மையின் பொருட்டு கவுதம முனிவர், தம் மனைவி அகல்யையுடன் பிரம்ம கிரியில் கடுந்தவம் செய்தார். வருணன் கட்டளைப்படி ஒரு குளத்தை உருவாக்கினார். வருணனின் அருளால், அந்தக் குளத்தில் வற்றாமல் நீர் சுரந்தது. நீர் வளம் மிகுந்து அவருடைய ஆசிரமம் செழிக்கத் தொடங்கியது. மற்ற முனிவர்களும் தம் தம் பத்தினிகளுடன் இங்கே வந்து தங்கினர். சில நாட்களில் ரிஷி பத்தினிகளுக்குள் விரோதம் உண்டாயிற்று. அகல்யையின் கர்வத்தை அடக்க, அவளை இந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று மற்ற ரிஷிபத்தினிகள் தீர்மானித்து, விநாயகரின் நியாயத்தை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

பசு உருத் தாங்கிய விநாயகர், கவுதமர் பயிரிட்டிருந்த செடிகளைப் போய் மேய்ந்தார். பசுவைத் துரத்தக் கோலுடன் கவுதமர் ஓடியதுமே, அந்த மாயப் பசு உயிர் துறந்தது. அதனால் பசுவதை செய்த தோஷம் ஏற்பட்டு விட்டதாக மற்ற முனிவர்கள் கூறினார்கள். இந்த தோஷம் நீங்க, பிரம்ம கிரியை 101 முறை வலம் வரவேண்டுமென்றும், ஒரு கோடி மண் லிங்கங்களைப் பிடித்து வணங்க வேண்டுமென்றும், கங்கையை இந்த இடத்துக்கு வரவழைக்க, வேண்டு மென்றும், அந்த முனிவர்கள் கூறினார்கள். கவுதமரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்துக்கு இரங்கி, சிவபெருமான் தரிசனம் அளித்தார். ரிஷி பத்தினிகளின் கெட்ட எண்ணத்தைக் கூற, தோஷம் எதுவும் கிடையாது என்றும் சொன்னார். தம் சடை முடியிலிருந்து சிறிதளவு கங்கா நீரையும் கொடுத்தார். அந்த நீரைப் பிரம்மகிரியில் வளர்ந்திருந்த பெரிய அத்தி மரத்தின் வேரில் விட்டார் கவுதமர். கங்கை பெருகத் தொடங்கிற்று.

கவுதமர் இந்த நதியைக் கொண்டு வந்தமையால் கோதாவரி அல்லது கவுதமி என்று அழைக்கப்படுகிறது. தம்மிடமிருந்த குசத்தினால் (தர்ப்பை) கங்கையின் போக்கை மாற்றி, மற்ற முனிவர்களும் தூய்மை அடையச் செய்தார் கவுதமர். பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் தல மூர்த்தியைத் தரிசித்தால் மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!