Search This Blog

Apr 8, 2024

ஜோதிர்லிங்கங்கள் - 3/12. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.


               
1)கோயில் தோற்றம்.
2) கோயில் கோபுரம்
3) மூலவர் வைத்தியநாதர்
4) வைத்தியநாதர் 
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்: 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

மூலவர்: வைத்தியநாதர். அம்மன்/தாயார்: தையல்நாயகி. தீர்த்தம்: பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர்: பரளி, மாவட்டம்: பீட் மாநிலம்: மகாராஷ்டிரா

இருப்பிடம் : மும்பையிலிருந்து 500 கி.மீ., அவுரங்காபாத்திலிருந்து 12 மணி நேர பஸ் பிராயணம் செய்தால் பரளி வைத்தியநாதர் தலத்தை அடையலாம். இல்லை யேல் பர்பிணி ஜங்சனிலிருந்து ரயிலில் சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள ரயில் நிலையம்: பரளி, அருகிலுள்ள விமான நிலையம் : அவுரங்காபாத். 

முகவரி: அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்பரளிபீட்மாவட்டம்மகாராஷ்டிரா மாநிலம்.

தங்கும் வசதி : பரளியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம். திருவிழா: சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப் பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

தல சிறப்பு: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்: விநாயகர், கார்த்திகேயர், வீரபாகு, நந்தி, ஐயப்பன். திருமால், காளி ஆகிய பரிவாரமூர்த்திகள் உள்ளனர். மற்றொரு கோயில்: பீகாரில் பர்லி என்ற ஊரிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. இதுவே வைத்தியநாதம் என்கிறார்கள் சிலர்.

ராவணன் சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கத்தை பெற்று இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் அதை தூக்கிச்செல்ல முடியாமல் ஒரு இடத்தில் வைத்துவிட்டான். அங்கேயே தங்கி சில நாட்கள் வழிபாடு செய்தான். அதுவும் நோய் தீர்க்கும் கோயில் என்பதால், வைத்தியநாதம் என்ற பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பாட்னாவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது.

பிரார்த்தனை: வைத்தியநாதம், வைத்தியநாதர் தரிசனம் செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இங்கே மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்திய நாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகலநோய்களையும் தீர்த்து வைப்பார்கள். ஓம் நமசிவாய என்ற மந்திரம் உடற்பிணியை மட்டுமல்ல பிறவிப்பிணியையும் போக்கி மோட்சத்தையும் கொடுக்கும். நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம் என்பர். எனவே நமக்கு நோயற்ற நல்வாழ்வை இறைவன் அருளுவார். அன்னை பசியற்ற வாழ்வை வழங்குவார். முருகன் வெற்றியையும், கணேசர் சகல நன்மையும் அருளுவார்.

தல பெருமை: பரளி வைத்திய நாதம் என்ற தலம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. நம் நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் சிவபெருமான் மருந்தீசர் என மருந்து மலைக் குன்றின் மீது சிவலிங்கமாக அமர்ந்து உள்ளார். அம்மையும், அப்பனும் மருந்துகளுடன் அமர்ந்து உலக உயிர்களை ரட்சிக்கின்றனர். மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வைக்கின்றனர். கோயில் குன்றின்மீது அழகாக கோட்டை போல் காணப் படுகிறது. கோயில் மிகப் பழமை வாய்ந்தது எனினும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வைத்திய நாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் வடக்குப்பக்கமும் கிழக்குப் பக்கத்திலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றிலும் கோட்டையாகக் கட்டியுள்ளார்கள். கோபுரமும், விளக்குத்தூண்களும் அழகாக உள்ளன. விளக்குத்தூண் மரத்தில் இலைகள் உள்ளதுபோலக் கற்களால் கட்டியுள்ளனர். கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது. கோயில் இரண்டு பிராகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. வைத்திய நாதர் அழகிய சுமாரான லிங்கவடிவில் காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்தின் உள்ளே நாம் சென்று சிவலிங்கத்தை தொட்டு அபிஷேகம் ஆராதனை முதலிய வழிபாடுகளைச் செய்யலாம்.

வைத்திய நாதர் தவிர வேறு பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. நமக்கு அவர்கள் மொழி புரியாததால் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அங்குள்ள மக்கள் மராத்தி மட்டும் பேசுகின்றனர். இந்தியும் ஆங்கிலமும் கூடத்தெரியாது போல இருக்கிறது. தமிழில் நாம்பேசும்போது நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர். கர்ப்ப கிரகத்தின் முன்னுள்ள விசாலமான அந்த மண்டபத்தில் பல தூண்கள் சிற்ப வேலைப் பாடுடன் காணப்படுகின்றன. பளிங்குத் தரை போடப் பட்டுள்ளது. தரையின் நடுவே ஆமை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூசாரிகள் நன்கு ஒத்துழைத்து சாமி தரிசனமும், அபிஷேகம் செய்யவும் உதவுகின்றனர். அவர்கள் மந்திரம் சொல்ல நாமும் அவற்றைக் கூறி சிவபெருமானை வழிபட வைக்கின்றனர். சுற்றுப் பிரகாரங்களில் வேறுபல தெய்வங்கள் உள்ளன. ஓரிடத்தில் அனுமன் சன்னதியும், விநாயகர் சன்னதியும் அடையாளம் கண்டுவழிபட முடிந்தது.

வடக்குப்பக்கம் பல படிகளில் கீழே இறங்கினால் கடைவீதி காணப்படுகிறது. குன்றும் கோயிலும் அமைதியான இயற்கை எழில்மிக்க சூழலில் அமைந்துள்ளது. வைத்தியநாதத்தில் முதலில் கோயில் அமைந்துள்ள குன்றினையும், கோயிலையும், கிழக்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் தரிசிக்க வேண்டும். கோயில் கோட்டைபோல் அமைந்துள்ளதாலும், இரண்டு பிராகாரங்கள் உள்ளதாலும் அவற்றில் பல மூர்த்திகள் உள்ளதையும் தரிசிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி குன்றின் மீது சில சிறுசிறு கோயில்களும் உள்ளன. கோயிலில் சிற்பங்களும் சித்திரங்களும் உள்ளன. அவற்றைக் காண வேண்டும். மூலவர் வைத்திய நாதரையும், அம்பாளையும் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் விளக்குக் கம்பம் மரத்தில் கிளை கிளையாக அடுக்காகக் காணப்படுவது போல் அமைத்துள்ளார்கள்.

நமது தென்னாட்டுப் பக்கம் கோயில் முன்பு சிறு சதுரமான மேடை, அதன் நடுவே ஒரு கல்தூண் வைத்து அதன் உச்சியில் சட்டி வைப்பதற்கு ஒரு நிலை அமைத்து அதில் ஒரு புதிய சிறுபானையில் எண்ணெய் திரிவிட்டு விளக்கு ஏற்றுவார்கள். அதுபோன்று இங்கே இல்லை. பலமூர்த்திகள் சுற்றிலும் உள்ளன. ஓரிடத்தில் அனுமன், விநாயகர் உள்ளனர். கோயில்முன் மண்டபத்தில் தரையில் ஆமை வடிவம், நந்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

தல வரலாறு: முன்னொரு யுகத்தில் வீரமகேந்திரபுரி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சூரபத்மன் என்ற அசுரன் அரசாண்டு வந்தான். அவன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகமாக அரசாள வரம் பெற்றான். அதோடு சாகாவரமும் பெற்றான். அவனது தம்பிகள் தாராசுரன், சிங்கமுகாசுரன் ஆகியோரும் சிவபெருமானிடம் பல வரங்களும் பெற்றிருந்தனர். சூரபத்மன் தேவலோகத்தையும் வென்று இந்திரன் மகன் ஜெயந்தன் முதலான தேவர்களையும் சிறைப் பிடித்து வந்தான். தேவர்களையும், அவர்களுக்கு உதவும் முனிவர் மற்றும் ரிஷிகளையும், மனிதர்கள் பலரையும் சிறையிலடைத்து கொடுமைகள் பல செய்து வந்தான்.

சிறைப்படாத தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவையும், திருமாலையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சூரபத்மனை வதம் செய்து எல்லா அண்டங்களையும் காக்கவேண்டும் என வேண்டினர். சிவபெருமான் சூரபத்மனை அழிக்கத் திருவுளம் கொண்டு முருகப் பெருமானை தம் நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாக்கினார். முருகன் வளர்ந்து பெரியவராகி தேவர்களைக் காக்க தேவ சேனாதிபதியாகச் சென்று சூரபத்மனுடன் போர் செய்து தேவர்களை மீட்டு வந்தார். இந்தக் கடுமையான தேவாசுரப் போரின் போது இருபக்கங்களிலும் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். போரில் காயம்பட்டுத் துன்பம் அடைந்தவர்களைக் காப்பாற்ற சிவபெருமான் வைத்தியராக, பார்வதி தேவியுடன் வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தார்.

தேவையான மருந்துகளை ஒரு மலை போல் குவித்து, அதன் மீது அமர்ந்து அம்மையும் அப்பனும் அடிபட்ட வீரர்களுக்கு உதவி செய்தனர். போரின் முடிவில் தேவர்களும், முனிவர்களும் விடுதலை பெற்றமைக்கு முருகப் பெருமானைப் பெரிதும் போற்றி வணங்கினர். இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் சிவபெருமானே என முருகப்பெரு மானும், தேவர்களும் முனிவர்களும், மனிதர்களும் மருந்து மலை மேல் அமர்ந்திருந்த அம்மை அப்பனை தரிசித்து நன்றி கூறி வழிபட்டனர். யாவருக்கும் வேண்டிய வரம் தந்தார் சிவபெருமான். அப்போது தேவர்களும், முனிவர்களும், பக்தர்களும் அம்மை அப்பரை இங்கேயே இப்படியே என்றும் எழுந்தருளி உலகை ரட்சிக்க வேண்டும் என வரம் கேட்டார்கள். அதன்படியே அம்மையும் அப்பனும் ஜோதிவடிவமாக ஒரு சிவலிங்கத்தில் ஐக்கியமாகினர். இன்றும் அந்த மலைமீது இருந்து அம்மையப்பர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த சிவலிங்கமே இங்கே ஜோதிர்லிங்கமாக விளங்குகிறது.

சிவபெருமான் வைத்தியராக வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தமையினால் வைத்திய நாதர் என்ற பெயர் பெற்றார். தலத்திற்கு வைத்திய நாதம் என்ற பெயரும் உண்டாகியது. பரளி என்ற கிராமம் அருகே இருந்தமையினால் பரளி வைத்திய நாதம் எனப் பெயர் விளங்குகிறது. சுருக்கமாக பரளி என்றும் கூறுவர். பரளி வைத்திய நாதம் தவிர பீகாரில் ஒரு வைத்திய நாதம் கூறப்படுகிறது. பீகார் தலை நகரம் பாட்னாவிலிருந்து ஜஸித் என்னும் ஊர்வழியாக கிழக்கே சென்றால் 20. கி.மீ.ல் இத்தலம் உள்ளதாகக் கூறுகின்றனர். இராவணன் கைலாயம் சென்று சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கம் பெற்று இலங்கை போகும் போது இங்கேயே அந்த லிங்கத்தை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம். அங்கே இராவணன் வழிபாடு செய்தான்.

கோயில் ஒரு மேட்டின் மீதுள்ளது. இங்கே கவுரி, திரிபுரசுந்தரி, காயத்திரி, விநாயகர், முருகன், காளி, பைரவர், ராமர் முதலியவர்கள் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் 25 கோயில்கள் உள்ளன. இங்கே சிவகங்கை என்னும் தீர்த்தக்குளம் இராவணனால் உண்டாக்கப் பட்டதும், சந்திரகூபம் என்ற தீர்த்தமும் உள்ளன. மேலும் கங்கை யமுனைத் தீர்த்தமும் கொண்டுவந்து வைத்திய நாதேசுவரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாதம் பிரம்மோற்சவம் இங்கே நடைபெறுகிறது. பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கோயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கதவுகள் காணப்படுகின்றன. அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!