பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==================================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
======================================================(191+050=241)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:06. வயிரவி மந்திரம் (பாடல்கள்:01-25/50) பகுதி-I
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
======================================================(191+050=241)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:06. வயிரவி மந்திரம் (பாடல்கள்:01-25/50) பகுதி-I
பாடல் எண் : 1
பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.
பொழிப்புரை : பன்னிரு கலைகளை உடையதாகச் சொல்லப்படு கின்ற ஓங்காரத்தில் நாத விந்துக்களைப் பாவித்து, அதன் பின் ஆதி யாகிய வயிரவியது மந்திரத்தில் முதல்எழுத்து அகாரம் முதலிய வற்றில் பன்னிரண்டாம் எழுத்தாகிய `ஐ` எனவும், ஈற்றெழுத்து அவற்றில் பதினான்காம் எழுத்தாகிய `ஔ` என்பது பதினாறாம் எழுத்தாகிய விசர்க்கத்தோடு கூடியது எனவும் அறிந்து அவ்வாறே ஓதிப் பயன் பெறுக.
============================================== பாடல் எண் : 2
அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.
பொழிப்புரை : மேற் கூறியவாறு விசர்க்கத்தோடு கூடி இறுதியில் நிற்கின்ற `ஔ` என்னும் எழுத்தே வயிரவி மந்திரமாகிய சொல் தொடருக்கு முன்னும், ஏனைய `ஐ, ஓம்` என்பவை முறையே அந்த ஔகாரத்திற்கு முன்னே நடுவணதாயும், முதற்கண்ணதாயும் உள்ள பீசங்கள் முன்னே நிற்க. அவ்வாற்றால் உள்ளக்கமலத்தில் விளங்குகின்ற பராசத்தியாகிய வயிரவி, உலகிற்கு முடிவும் முதலுமாய் உள்ளாள்.
============================================== பாடல் எண் : 3
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.
பொழிப்புரை : உலகிற்குக் காரணர்களாகின்ற `அயன், அரி, அரன்` என்னும் மூவரும் வயிரவியது அழிப்பும், காப்பும், படைப்பும் ஆகிய செயல்களில் ஒரு கூற்றிலே அடங்குபவர் ஆதலின், வீடாகிய பெரும் பயனைப்பெற விரும்பி அவளை வழிபடுகின்ற சிறந்த புண்ணியத்தை உடையவர்கள், நிலையற்ற அம்மூவர் பதவிகளுள் ஒன்றனையும் விரும்பார்.
============================================== பாடல் எண் : 4
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.
பொழிப்புரை : இருபத்தேழு நாட்களைக் கொண்ட மதியளவை (சாந்தரமான) மாதம் ஒன்றுகாறும் அகத்தும், புறத்தும் வளர்க்கப்படுகின்ற ஓமாக்கினியே வயிரவி வடிவமாகும். அதனைப் பகல் இரவு இடைவிடாது ஓம்புகின்ற மன உறுதியுடையவன் `சிவனே` என எண்ணத்தக்க பெருமையுடையவனாவன்.
============================================== பாடல் எண் : 5
தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
பொழிப்புரை : : உள்ளத்தில் பொருள் வடிவாக எண்ணப்படுகின்ற திரிபுரை மந்திரத்தை, உயர்த்துச் சொல்லப்படுகின்ற அன்பினாலாகிய மேற்கோளோடு வாழ்நாளின் இறுதிவரை சிவனொடு வைத்து, சொல் வடிவிலும் ஓதிவரும் அன்பன் பொருட்டாக அவளை நிலவுலகம் கயிலாய மலைபோலவே சிவனோடு தன்னகத்து வைத்துப் போற்று கின்றது.
============================================== பாடல் எண் : 6
ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
பொழிப்புரை : நூல்களால் சொல்லப்படுகின்ற சிவனுடையதும், உணர்வுடையோரால் உணரப்படுவதும் ஆகிய திருவருட்சத்தியும், வேதத்தின்வழி வழுவாது ஒழுகிவருவோரால் வழிவழியாக உபதேசிக் கப்பட்டு வருகின்ற ஞானமும், மேற்கூறியவாறு இருபத்தேழு நாள்களை உடைய ஒரு மதி வட்டங்காறும் விளங்கி நிற்கின்ற ஓமாக்கினியை வயிரவி தேவி தன் அடியார்களின் முன் சூலத்தோடு வந்து அருள்புரிவாள்.
============================================== பாடல் எண் : 7
சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
மாலங் கயன்அறி யாத வடிவற்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
பொழிப்புரை : வயிரவிக்கு அழகிய கைகள் நான்கு. அவைகளில் சூலம், கபாலம், நாகபாசம், அங்குசம் என்பவற்றை ஏந்தியிருப்பாள். இவள், மாலாலும், அயனாலும் அறியப்படாத அழல் வடிவத்தை உடைய சிவனுக்குச் சிறந்த திருமேனியாகின்ற அருளேயன்றி, வேறல்லள்.
============================================== பாடல் எண் : 8
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
பொழிப்புரை : மேலும் இவள், மென்மையான இயல்பை உடையவள்; வஞ்சிக் கொடி போலும் வடிவினையுடையவள்; சிறிது சினங்கொண்ட மனத்தினள்; பலகலையும் உணர்ந்தவள் ; தோன்றுகின்ற வாய் முள்முருக்க மலர்போலச் சிவந்திருப்பவள்; நீல மணி போன்ற நிறத்தை உடையவள்; பல நிறத்தோடும், பல மணிகளோடும் கூடிய உடையை அணிந்தவள்.
============================================== பாடல் எண் : 9
பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
பொழிப்புரை : இன்னும் இவள், பல வயிரங்கள் இழைத்த கோடி சந்திரன்போலும் அழகிய முடியை அணிந்தவள்; சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரத்தின குணடலத்தை அணிந்த காதினை உடையவள்; மான் போல மருண்டு பார்க்கும் பார்வையை உடையவள்; சிறந்த ஒளிகளாகிய சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவள்; பொன்னாலாகிய மணி போலும் நெருப்புக் கண்ணையும் நிரம்ப உடையவள்.
============================================== பாடல் எண் : 10
பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
பொழிப்புரை : விரிந்துநின்ற ஒரு தாமரை மலரின் எட்டிதழின் நடுவில் (பொகுட்டில்) மேலான சத்தி ஒருத்தி இருக்கின்றாள். அவ் எட்டிதழ்களில் கன்னியர் எண்மரும், அவருள் ஒருத்திக்கு எண்மராக அறுபத்து நால்வர் பணிமகளிரும் அங்குச்சூழ்ந்து பணிபுரிந்து அந்தச் சத்தியைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.
============================================== பாடல் எண் : 11
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
பொழிப்புரை : இறைவியாகிய பராசத்தி மேற்கூறிய மனோன்மனியாய்ப் பூசிக்கப்படும் பொழுது கன்னித்தன்மையைக் குறிக்கச் சிலம்பும், வளையலும் அணிந்தவளாகவும், உலகத்தைக் காக்கின்ற செயலைக் குறிக்கச் சங்கு சக்கரங்களை ஏந்தியவளாகவும், எட்டுத் திசையும் நிறைந்தவளாதலைக் குறிக்க எட்டிதழ்த் தாமரையின் நடுவில் உள்ளவளாகவும் கருதப்படுவாள்.
============================================== பாடல் எண் : 12
பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.
யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகம்
தேசந் திகழும் திரிபுரை காணே.
பொழிப்புரை : எங்கும் நிறைந்தவளாகிய சத்திக்கு உரிய பூசைப் பொருள்களாவன. சந்தனம் குங்குமம் பனிநீர் முதலிய நறுமணப் பொருள்கள். சூடத்தக்க மிக்க பல மலர்கள், ஐவகை வாத்தியங்கள், ஒலிக்காத மணிபோல வாய்க்குள்ளே சொல்லப்படும் மந்திரங்கள் முதலியனவாம்.
============================================== பாடல் எண் : 13
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.
பொழிப்புரை : உலகில் காணப்படுகின்ற பலப்பல தெய்வங் களும், வேறு வேறு வகையாய் அணியப்படுகின்ற அணிகலங்கள் பலப்பலவும் ஒரு பொன்னின் வேறுபாடேயாதல் போலத் தோன்று வனவாம். அவைகளுள் முதல்வராகப் போற்றப்படுகின்ற மும் மூர்த்தி களாயும் காணப்படுந்தலைவி உலக காரணியாகிய ஆதி சத்தியே.
============================================== பாடல் எண் : 14
காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.
பூரண கும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமு மாமே.
பொழிப்புரை : தூலம், சூக்குமம் முதலாக வகுத்துச் சொல்லப் படுகின்ற மந்திரங்களுள் காரண மந்திரத்தை ஓதுவோரது உள்ளக் கமலத்தில், பூரக கும்பக இரேசகங்களாகின்ற பிராணாயாமத்தால் விளங்கி நிற்கின்ற சத்தி, சத்தனாகிய சிவனது நடுவில் உள்ளவளாய் இருப்பாள். இவ்வாறு சொல்லுகின்ற வேதப் பகுதி வேதத்தின் முடிவாய் விளங்குவதாம்.
============================================== பாடல் எண் : 15
அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.
பொழிப்புரை : கைகளில் மோதிரவிரல், சிறுவிரல் முதலாகத் தொடங்கி வலமாகப் பெருவிரலின் நுனியால் வரைகளைத்தொட்டு உருவை எண்ணி நடுவிரலில் முடிக்கும் வகையால் மீள மீள உருவேற்றப்படும் தமிழ்மந்திரம் முதலிய மந்திரங்களை அவ்வவற்றிற்குரிய தெய்வங்களாகவே தெளிந்து வழிபடுங்கள்; (பயன் விளையும்.) இதனை எங்கள் நந்திபெருமான் நான் உணரும் வண்ணம் உரைத்தருளினார்.
============================================== பாடல் எண் : 16
உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.
பொழிப்புரை : ``மேல்,`` ``பூரித்த பூவிதழ்`` (1067) என்னும் மந்திரத் திற் சொல்லப்பட்ட ஒன்பது சத்திகளுள் இறுதியதாகிய `மனோன்மனி` என்ற ஒன்று முடிவாய் நிற்க. மற்றைய எட்டினையும், வரிசைப்பட்ட எட்டு இடங்களில் வைத்து ஒன்றன்பின் ஒன்றாக முறையே எண்ணிப் பிராசாத கலைகள் பன்னிரண்டில் இறுதி எட்டோடும் அவற்றை முன்னே கூறிய நந்திபெருமான், அவ்வாற்றானே வரிசைப்பட நியமிக்கப்பட்ட முறையில் வழிபாட்டு முறையை ஆக்கியருளினார்.
============================================== பாடல் எண் : 17
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.
ஏமத் திருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே.
பொழிப்புரை : மாலையையணிந்த கூந்தலை உடையவளும், அருள் பொழியும் கண்களை உடையவளும், உயிரின் அறிவில் பொருந்திய வலிய ஆணவ இருள்போகும்படி ஞான ஒளியைப் பரப்பு கின்ற இளமையான கொடிபோல்பவளும் ஆகிய வயிரவி, வெளியில் ஓமத்தீ வடிவாயும், உள்ளே மூலாக்கினி வடிவாயும் பொருந்தி, விந்துத் தானத்து அமுதத்தோடு இருதயத்தில் வந்து நின்றதை, நீ காண்பாயாக.
============================================== பாடல் எண் : 18
காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.
பொழிப்புரை : இருதய மந்திரமும், சிரோமந்திரமும் `நம:` என்னும் முடிபினை உடையன. சிகா மந்திரமும் `வஷட்; என்னும் முடிபினை உடையது.
============================================== பாடல் எண் : 19
சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.
பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.
பொழிப்புரை : சிகா மந்திரத்தில் உள்ள `வஷட், என்னும் முடிபு சிறிது வேறுபட்ட `வௌஷட்` என்பது கவச மந்திரத்திற்கும், `பட்` என்பது அத்திர மந்திரத்திற்கும் முடிபாகும். நேத்திரங்கட்குரிய மந்திரத்திற்கு, பொதுவாயுள்ள, `நம:` என்பதே முடிபாம். நேத்திர நியாசத்தில் திரிசூல முத்திரை காட்டல் வேண்டும். சத்தி வழிபாட்டில் யோனி முத்திரை காட்டலும் பொருந்தும்.
============================================== பாடல் எண் : 20
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.
பொழிப்புரை : கைகளை உள்முகமாகக் கொண்டு முயற்சியோடு சிறுவிரல் இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக மாறி வைத்து அணிவிரல்களையும் அவ்வாறே சுட்டு விரல்களால் மாறிப்பிடித்து மோதிர விரல்களின் மேல் நீண்டதாகிய நடுவிரல் ஒவ்வொன்றையும் நிமிர்த்திப் பொருந்த வைத்துப் பெருவிரல் இரண்டையும் மாற்றமின்றி உள்ளே புகச் செய்தபின், நேத்திர மந்திரத்தைச் சொல்லுக.
============================================== பாடல் எண் : 21
பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.
பொழிப்புரை : சத்தி வழிபாட்டில் பிராண வாயு வசப்படுதற்கு உரியதாகிய உபதேசத்திற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, இகர உயிர், அம்ச மந்திரத்தினின்று பிரித்துத் தனியே தயக்கம் இல்லாமல் சொல்லப்படுகின்ற சகர மெய்யை முன்னர்க் கொண்டு, இறுதியில், முடித்துச் சொல்லப்படும் விந்துவாகிய மகாரத்தையும் ஏற்று நிற்கச் சொல்லப்படுவதாம்.
============================================== பாடல் எண் : 22
கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
பொழிப்புரை : மேற்சொல்லிய பிராணாயாம மந்திரத்தைச் சொல்லிப் பிராணாயாமம் செய்த அடியவன், பின்பு மாயையின் அடையாளமாகக் காட்டுகின்ற சங்க முத்திரையின் நடுவில் சத்தி விளங்கி நிற்பாள்.
============================================== பாடல் எண் : 23
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
பொழிப்புரை : துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழி பட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.
============================================== பாடல் எண் : 24
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.
பொழிப்புரை : முக்கண்ணியும், சோதி (ஒளி) வடிவானவளும், பராபரையும், `ஆதி` என்னும் பெயரொடு முதல்வியாய் நிற்பவளும் ஆகிய வயிரவி தனது ஆற்றலால் வேதம் சராசரப் பொருள்கள், ஐம்பூதம், நான்குதிசை, இருள், ஒளி, பலவகை உடம்புகளாய்த் தோன்றுகின்ற பல உயிர்கள் முதலிய எல்லாமாய் நிற்கின்றாள்.
============================================== பாடல் எண் : 25
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.
பொழிப்புரை : : தென்கோடியாகிய குமரித்துறையில் நிலைபெற்றிருப்பவளும் எப்பொருட்கும் ஆதியுமாகிய வயிரவியைத் துதித்தும், தியானித்தும் நின்றால், உடலில் உள்ள உயிர் சிவமாகும். அறியாமை பொருந்திய இவ்வுலகில் பலவாறு பிறக்கும் பிறவிகள் ஒழியும். அவளது வடிவு எண்ணிறந்த வகையினது ஆகலின், அஃது ஒன்றாயே இருத்தல் கூடுமோ!
==============================================
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!