Search This Blog

Mar 15, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம்:03. அருச்சனை (பாடல்கள்:12)






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ....பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
========================================================(119+012=131)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:03. அருச்சனை (பாடல்கள்:12)

பாடல் எண் : 1
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

பொழிப்புரை :  தாமரை முதல் செவ்வந்தி ஈறாக இங்குக் கூறப்பட்ட பூக்கள் வழிபாட்டிற்குக் கொள்ளத் தக்கனவாம்.
=============================================
பாடல் எண் : 2
சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.

பொழிப்புரை :  சந்தனத் தேய்வையைக் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம், அகிற் சாந்து இவை சேர்த்துப் பனிநீராற் குழம்பாக்கிச் சாத்தி நீரால் ஆட்டி அன்போடு வழிபடுங்கள்.
=============================================
பாடல் எண் : 3
அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.

பொழிப்புரை :  நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.
=============================================
பாடல் எண் : 4
எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே

பொழிப்புரை :  வழிபாட்டினை அன்போடு மனம் பற்றிச் செய்தால், கிடைக்காதன இல்லை. எண்வகைச் சித்திகளும், இந்திராதி போகங்கள் மட்டுமன்று; முக்தியும் கிடைப்பதாகும்.
=============================================
பாடல் எண் : 5
நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.

பொழிப்புரை :  பிறருக்கு உரியராய மனைவியரை விரும்புதலை விட்டவர்களும், புலனடக்கம் உள்ளவர்களும் ஆகிய அவர்களது நிவேதனம், தோத்திரம், வணக்கம், செபம், ஓமம் என்னும் இவையே வழிபாட்டிற்கு உரியனவாம். அவ்விடத்தில் காற்றும் தூய்மை யுள்ளதாய் இருக்கும்.
=============================================
பாடல் எண் : 6
வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.

பொழிப்புரை :  சிவபெருமானுக்கு அடியவராகத் தம்மை ஒப்படைத்துவிட்டவர்களும், பசு புண்ணியத்தால் விளையும் சிறு பயன்களில் விருப்பம் இல்லாதவர்களும். உயர்ந்த சிவயோகத்தில் நிற்பவர்களும், பயன் கருதிச் செய்யும் காமிய வழிபாடுகளை மேற் கொள்ளாது, ஆய்ந்துணர்ந்த உணர்வினால் மிக்க அன்பு ஒன்றே காரணமாக வழிபாட்டினை மேற்கொள்வர்.
=============================================
பாடல் எண் : 7
அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

பொழிப்புரை :  அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறிவாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.
=============================================
பாடல் எண் : 8
இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
அருள் இவை விட்டறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.

பொழிப்புரை :  ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.
=============================================
பாடல் எண் : 9
தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.

பொழிப்புரை :  சிவம் தான் தோன்றாது ஆன்மாவேயாய் நிற்றலும், ஆன்மா தான்தோன்றாது சிவமேயாய் நிற்றலும் என்னும் இருநிலைகளுள், அறிபவனாகிய ஆன்மா அறியப்படுபொருளாகிய சிவமேயாகி விடுகின்ற இரண்டாம் நிலையை எய்தினவன் பின்பு `அறிபவன்` என்பதோடு நில்லாது, அன்பு செய்பவனாயும் நிற்பான். இந்நிலையே, `சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவ போகம்` என்னும் நான்கனுள் இறுதிக்கண்ணதாகிய சிவபோகத்தை அடையச் சிவமாம் தன்மையை எய்தும் வழியாம்.
=============================================
பாடல் எண் : 10
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

பொழிப்புரை :  பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.
=============================================
பாடல் எண் : 11
நமஅது ஆசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமஅற ஆதி நாடுவ தன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.

பொழிப்புரை :  `நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. சிவ- என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப் பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய் விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.
=============================================
பாடல் எண் : 12
தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.

பொழிப்புரை :  `சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.
=============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!