Search This Blog

Feb 20, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிக:9/1.சருவ சிருட்டி(பாடல்:01-15/30)பாகம்-I

 (



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
=================================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:9. சருவ சிருட்டி (பாடல்கள்:01-15/30)முதல்பாகம்
பாடல் எண் : 1
ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

பொழிப்புரை :இம்மந்திரத்தின் பொருளைக்கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.
குறிப்புரை : முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
 
`
பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.

 
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.

 
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி):  ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி) ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல. பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.

 
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß
ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß
நாதம் நாத தத்துவம்.
`
பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.
=============================================
பாடல் எண் : 2
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே. 

பொழிப்புரை :இதன் பொருளையும் கீழ்வரும் குறிப்புரை பற்றி உரைத்துக்கொள்க.
குறிப்புரை : மேற்கூறிய `நாதன்` என்னும் சிவன், பொதுவாய் நாத மாத்திரமாய்த் தோன்றிய எழுத்தோசையைச் சிறப்பாகத் தோற்றுவிக்க விரும்பிக் கிரியா சத்தியால் பொதுவாக முயல்வான். அவ்வாறு அவன் பால் எழும் முயற்சியே `விந்து` என்னும் சத்தியாவாள். அவள், மேற் குறித்த நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவத்தைத் தோற்று வித்து, அதன்கண் நிற்பாள். அதனால் ``நாதத்தில் விந்துவும்`` என்றார். பின்னர் ``நாத விந்துக்களின்`` என்றதில் இன் சாரியையின்பின் `கீழ்` எனப் பொருள் தரும் கண்ணுருபு விரிக்கப்படும்.
 
``
ஞானம், கிரியை`` என்றது சிவன் சத்திகளுக்கு நிரல் நிறை. ``சிவன் சத்தி என்ன`` என்றது, `சிவன் என்றும், சத்தி என்றும் இருவர் தோன்றுவர்` என்றவாறு. `பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்` என்றது, `ஆதி சத்தி தானே, ஞானம், கிரியை என்னும் வேறு பாட்டோடு தோன்றுதலால்` என்றவாறு. எனவே, `முதல்வன் ஞான சத்தியால் சிறப்பாக அறியும் நிலையிலே சிவன் என நிற்பான்` என்பதும், `அவன் கிரியாசத்தியால் சிறப்பாக முயலும் நிலையே சத்தி என்னும் நிலை` என்பதும் விளங்கும்.
`
சிவன்` எனப் பெயர் பெற்று நின்ற சிவன் மேற்கூறிய விந்து தத்துவத்திலிருந்து `சிவம்` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பான். `சத்தி` எனப் பெயர்பெற்று நின்ற சத்தி, `சிவம்` என்னும் தத்துவத்திலிருந்து `சத்தி` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பாள். இவ்வாற்றால் இத்தோற்றம் பின்வருமாறு அமையும்.
ஆதிசத்தி சுத்தமாயை
ß ß (1)
நாதன் நாதம்
ß ß (2)
விந்து விந்து
ß ß (3)
சிவன் சிவம்
ß ß (4)
சத்தி சத்தி
இவற்றுள் சிவன் சத்திகட்கு உள்ள பெயர்களே, அவர்களால் தோற்று விக்கப்பட்டுத் தமக்கு இடமாகக் கொள்ளப்படுகின்ற தத்துவங்கட்கும் பெயராதல் விளங்கும்.
இங்கு இந்நாயனார் கூறிய இம்முறை சில ஆகமங்களுட் கூறியவாறாகும். வேறு சில ஆகமங்கள் இங்கு, `நாதம், விந்து` என்றவற்றை, `சிவம், சத்தி` என்றும், இங்கு, `சிவன், சத்தி` என்ற வற்றை, `நாதம் விந்து` என்றும் மாற்றிக் கூறும். அம்முறை பற்றியே சிவஞானசித்தி (சூ. 2-74),
``
சிவம் சத்தி நாதம் விந்து ... ... ... ...
ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும்``
என்று கூறிற்று. எவ்வாறாயினும், `இந்நான்கும் முதல்வனது அருவத்திருமேனிகள்` என்பதில் மாறுபாடில்லை. இனி முன் இரண்டு நிலைகளை முறையே `பரநாதம், பரவிந்து` என்றும், பின் இரண்டு நிலைகளை `அபரநாதம், அபரவிந்து` என்றும் கூறுதல் எல்லா ஆகமங் களுக்கும் ஒப்ப முடிந்தது.
``
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே`` என்றது `சிவம் சத்திகள் தம்மில் தாம் வேறுபட்ட விருப்பம் காரணமாகச் சுத்த மாயை வேறு வேறு நிலைகளாக விருத்திப்பட்டு நிற்கும்` என்றவாறு. இச்சையில் - இச்சையின்படி.
``
விந்து`` (பிந்து) என்பது `சுத்தமாயை, அதன் ஒருவகை நிலை, அதனை இடமாகக் கொள்ளும் சத்தி` என்னும் மூன்றற்கும் பெயராகும். அவற்றுள் ஒன்றைக் கொள்ளவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொள்ளலாகாது. இவ்வாறே, `நாதம்` என்பதும், சிவனது நிலைகளில் ஒன்றற்கும், அவன் இடமாகக் கொள்ளுகின்ற தத்துவத்திற்கும் பெயராய் நிற்கும். நாயனார் சொற்சுருக்கம் கருதி ஏற்ற பெற்றியால் பொருள் கொள்ள ஓதினார். எனவே, முன் மந்திரத்தில் ``அதன் பால் திகழ் நாதமே`` என்றதற்கு நேர்பொருளாக, `ஆதி சத்தியினிடமாக நாதம் என்னும் சிவன் தோன்றுவன்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அச்சிவனால் நாத தத்துவம் தோன்றும்` எனவும் கொள்ளப்படும். அவ்வாறே இம் மந்திரத்தில் ``நாதத்தில் விந்துவும்`` என்றதற்கு, நேர் பொருளாக, `நாதம் என்னும் சிவனிடத்து விந்து என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அவளால் நாத தத்துவத்திலிருந்து விந்து என்னும் தத்துவம் தோன்றும்` எனவும், ``நாத விந்துக்களில் சிவன், சத்தி தோன்றும்`` என்றதற்கு நேர்பொருளாக, `நாத விந்துக்களின் கீழ் விந்து` என்னும் சத்தியினின்றும் சிவன் என்னும் சிவன் தோன்றுவான்; அவனிட மிருந்து சத்தி என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `விந்து என்னும் தத்துவத்திலிருந்து சிவம் என்னும் தத்துவமும், சிவம் என்னும் தத்துவத்திலிருந்து சத்தி என்னும் தத்துவ மும் தோன்றும்` எனவும் கொள்ளப்படும் என்க.
`
மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அதனைச் சிவபெருமான் தனது இச்சைப்படி ஞானக் கிரியா சத்திகளால் தொழிற்படுத்துவான். அந்த மாயைதான் ஆணவ மலத்தின் தர தம நிலைகளோடு கலந்து தூய்மை இழந்தும் கலவாது தூய்மையாயும் இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும். `மாயை` என்றால் `மயக்குவது` எனக் கருதப் படுவதால், சுத்த மாயையை ஆகமங்கள் `மாயை` என்று குறிப்பதே இல்லை. `விந்து, குடிலை, குண்டலினி` என்றாற்போலவே குறிப் பிடும். மாயை எனக் கூறவேண்டின், `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் குறிப்பிடும். மகத்து - பெரிது. ஊர்த்துவம் - மேல் உள்ளது; வியாபகம் - எனவே, ``மாயை`` என வாளா கூறுமிடத் தெல்லாம், ``அசுத்த மாயை`` என்றே கொள்ளுதல் வேண்டும். சுத்த மாயையை ஆகமங்கள் ``விந்து`` எனக் கூறுதல்போல, அசுத்த மாயையை ``மோகினி`` என்று கூறும். மோகினி - மயக்கற் கருவி. எனவே, ``அசுத்த மாயையே மயக்கத்தைத் தரும்`` என்பதும், ``சுத்த மாயை மயக்கத்தைத் தராது`` என்பதும் அறிந்துகொள்ளப்படும். மயக்கமாவது, ஐம்புல இன்பங்களையே பெரியனவாகக் கருதி, அவற்றால் விளையும் துன்பங்களை அறியாதிருத்தல்.
இறைவன் உலகைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது ``அருவம், அருவுருவம், உருவம்`` என்னும் மூவகைத் திரு மேனிகளைக் கொண்டு விளங்குவன். அங்ஙனம் விளங்குமிடத்துச் சுத்தமாயையினின்று தோற்றுவிக்கப்படுகின்ற தத்துவங்களையே தான் இடமாகக் கொண்டிருப்பன். அதனால் அத்தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்களைப் பெற்று நிற்கும் உயிர்களுக்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை.

 
முதற்காரணப்பொருள் காரியப்படும் முறைகள் பல. அவற்றுள் சிவாகமங்களிற் கொள்ளப்படுவன, `விருத்தி, பரிணாமம்` என்னும் இரண்டுமேயாம். அவற்றுள் விருத்தியாவது சுருங்கிக் கிடப்பது விரிவடைந்து நிற்றல். இதற்கு, `படம்குடிலானாற்போல` என உவமை கூறுவர். அஃதாவது கட்டிச்சுருட்டி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி, பின், விரித்து அமைக்கும்பொழுது பெரிய கூடாரமாகக் காட்சியளிப்பது போல்வதாம். பரிணாமமாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாய் உருமாறி நிற்பது. மண் குடமாவதும், பால் தயிராவதும் போல்வன இதற்கு உதாரணமாகும். பரிணாமமும், `முழுவதும் பரிணமித்தல், ஒரு கூற்றிற் பரிணமித்தல்` என இருவகைப் படும். பால் தயிராவது முழுவதும் பரிணமித்தல். வெண்ணெயில் புழுத் தோன்றுதல் ஒருகூற்றிற் பரிணமித்தல். இவ்விரண்டனுள்ளும் சிவாகமங்களில் கொள்ளப்படும் பரிணாமம் ஒரு கூற்றிற் பரிண மித்தலே. ``விருத்தி, பரிணாமம்`` இரண்டனுள், சுத்தமாயை காரியப் படுவதெல்லாம் விருத்தி முறையிலாம். அசுத்தமாயை காரியப் படுவதெல்லாம் பரிணாம முறையிலாம். `பரிணாமம் ஒரு கூற்றிற் பரிணமித்தலே` என்பதை மறக்கலாகாது.

 
முதல்வன் உலகத்தைக் கருதாது பராபர சத்தியோடு கூடிப் பராபரனாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையே இயற்கை நிலை. அதுவே ``சொரூபம்`` எனப்படும். பிறவெல்லாம் உலகத்தைக் கருதி அதற்கேற்ப வேறுபட்டு நிற்கும் நிலையாதலின், அவையெல்லாம் செயற்கை நிலையே. இவை `தடத்தம்` எனப்படும். தடத்தம் - சார்பு பற்றியது. ``சொரூபம், உண்மை; தன்னிலை`` என்பன ஒருபொருட் சொற்கள். முதல்வனை, சொரூப நிலையில் வைத்துக் கூறும் பொழுது, ``சொரூப சிவன்`` என்றும், தடத்த நிலையில் வைத்துக் கூறும்பொழுது ``தடத்த சிவன்`` என்றும் கூறுவர். சொரூப சிவனுக்கு உருவம், பெயர், தொழில், ஒன்றும் இல்லை; தடத்த சிவனுக்கு அளவற்ற உருவம், பெயர் தொழில்கள் உள்ளன என்க. உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன், அவைகளை மேற்கொள்வது உயிர்களை உய்விக்கவேண்டும் என்னும் கருணையினாலேயாம். அதனால், அவ்வுருவம், பெயர், தொழில் யாவும் அருள்மயமானவையே; நம்மனோரது உருவம் முதலியன போல மாயாமயம் ஆனவை அல்ல; அருள் அவனது சத்தியே யாதலால், எல்லாம் வல்ல அச்சத்தியால் தனது இச்சைப் படியான உருவம் முதலியவற்றை அவன் தானே கொள்வன்; அதனால், அவைகளை அவனுக்குப் படைத்துத்தர வேறொருவர் வேண்டுவ தில்லை.  இதனால், படைப்புத் தொடர்ச்சி சிறிது வகுத்துக் கூறப் பட்டது.
=============================================
பாடல் எண் : 3
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 

பொழிப்புரை :சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாத சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு இவ்வாறு அச்சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை. எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல், அறிவு, செயல் (ஞானம், கிரியை) என்னும் வேறுபாடுபற்றிக் கொள்ளப்படும் உருவு, பெயர், தொழில் என்பன பற்றியேயாம் என்பதாயிற்று. இவ்வாறு தன்னின் வேறாகாத சத்தியை அதுதானே எல்லாம் செய்யவல்லதாக வேறு நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளை (முதல்வனை) `இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்` (தி. 6 ப.97 பா.10) என்று சொல்லாற் சொல்லி விளக்கப்புகின், அஃது ஒருவாற்றானும் இயலாது. ஏனெனில், சொற்கும், அப்பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.  இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.  இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.
=============================================
பாடல் எண் : 4
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

பொழிப்புரை :சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.
=============================================
பாடல் எண் : 5
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொழிப்புரை :`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர்,நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரைகளே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரை யிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன்மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.
=============================================
பாடல் எண் : 6
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. 

பொழிப்புரை :உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்றவன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.
=============================================
பாடல் எண் : 7
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

பொழிப்புரை புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.
=============================================
பாடல் எண் : 8
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 

பொழிப்புரை :சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.
=============================================
பாடல் எண் : 9
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. 

பொழிப்புரை :உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.
=============================================
பாடல் எண் : 10
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 

பொழிப்புரை :சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ்வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.
=============================================
பாடல் எண் : 11
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே. 

பொழிப்புரை :சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.
=============================================
பாடல் எண் : 12
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. 

பொழிப்புரை :பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.
=============================================
பாடல் எண் : 13
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. 

பொழிப்புரை :சிவபெருமான் உயிர்கள்மாட்டு அருள் கூர்தலால், உலகம் ஒடுங்கல், தோன்றல், நிற்றல் என்னும் செயல்கள் அவனது திருவுள்ளத்தில் எழுந்தபொழுது, எல்லையின்றிப் பரந்து நிற்கின்ற மாயையைத் தனது சிற்சத்தி வழியாகப் பொருந்தி அதனைக் காரியப்படுத்துபவன் அவனே.
=============================================
பாடல் எண் : 14
நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. 

பொழிப்புரை :சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.
=============================================
பாடல் எண் : 15
ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. 

பொழிப்புரை :பிறக்கும் தன்மை இல்லாத சிவபெருமான், உயிர் ஓர் உடலை எடுக்கின்ற காலத்து அதற்கு அதனைக் கொடுக்கின்ற தலைவனும், பின்பு அவ்வுயிர் அவ்வுடலை விட்டு நீங்குகின்ற காலத்தில் பின்னர்ச் சென்று புகும் மற்றோர் உடலையும் அதற்குக் கொடுத்து, அங்கும் அதற்குத் துணையாய் நிற்பவனுமாவன்.
=============================================








மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!