Search This Blog

Feb 6, 2012

திருமந்திரம்- தந்திரம்01:பதிகம்:8 உயிர் நிலையாமை (பாடல்:10)


`



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
விநாயகர் வணக்கம்.......................................................................பாடல்கள்: 001
பாயிரம் : பதிக வரலாறு...............................................................பாடல்கள்: 039
முதல்தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்...........................பாடல்கள்: 056
முதல்தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு. ..........................பாடல்கள்: 006
முதல்தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு..........................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்...................................பாடல்கள்: 030  
முதல்தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை .........பாடல்கள்: 025
முதல்தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை ........பாடல்கள்: 009
முதல்தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை .........பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...............பாடல்கள்: 030
=================================================================
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)
பதிகம் எண் :8. உயிர் நிலையாமை
(10பாடல்கள்)

பாடல் எண் : 01
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

பொழிப்புரை :தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.
****************************************************
பாடல் எண் : 02
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே. 

பொழிப்புரை : உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ் ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத் தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.
****************************************************
பாடல் எண் : 03
மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

பொழிப்புரை :பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.
****************************************************
பாடல் எண் : 04
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை : இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.
****************************************************
பாடல் எண் :05
சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 

பொழிப்புரை : பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.
****************************************************
பாடல் எண் : 06
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 

பொழிப்புரை :: பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொரு வர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!
****************************************************

பாடல் எண் :07
துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

பொழிப்புரை :ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றிவைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.
****************************************************
பாடல் எண் : 08


இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 


பொழிப்புரை : தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.
****************************************************
பாடல் எண் : 09


ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 


பொழிப்புரை :மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.
****************************************************
பாடல் எண் : 10


அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.


பொழிப்புரை : வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.
****************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.


No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!