Search This Blog

Feb 5, 2012

திருமந்திரம்-தந்திரம்01:பதிகம்:4/2 உபதேசம்(பாடல்:11-20/30)பகுதி II



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
விநாயகர் வணக்கம்....................................................................பாடல்கள்: 001
பாயிரம் : பதிக்க வரலாறு.........................................................பாடல்கள்: 039
முதல்தந்திரம்:பதிக்க எண்:01: சிவபரத்துவம்............பாடல்கள்: 056
முதல்தந்திரம்:பதிக்க எண்:02: வேதச் சிறப்பு. ............பாடல்கள்: 006
முதல்தந்திரம்:பதிக்க எண்:03: ஆகமச் சிறப்பு............பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக்க எண்:04: உபதேசம்.......................பாடல்கள்: 030
=================================================================
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)
பதிகம் எண் :4. உபதேசம்
(30பாடல்கள்) பாடல்கள்:11-20/30 தொடர்:02
பாடல் எண் : 11
அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
 
பொழிப்புரை : மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித் தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலை யையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.
****************************************************
பாடல் எண் : 12


வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

பொழிப்புரை : குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.
****************************************************
பாடல் எண் : 13
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

பொழிப்புரை : சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.
****************************************************
பாடல் எண் : 14
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

பொழிப்புரை : சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.
****************************************************
பாடல் எண் :15
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 

பொழிப்புரை : சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச் செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.
****************************************************
பாடல் எண் : 16
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 

பொழிப்புரை :செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.
****************************************************
பாடல் எண் :17
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
 
பொழிப்புரை : சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.
****************************************************
பாடல் எண் : 18
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 

பொழிப்புரை : அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.
****************************************************
பாடல் எண் : 19
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
 
பொழிப்புரை : மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!
****************************************************
பாடல் எண் : 20
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
  
பொழிப்புரை :மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.
****************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!