Search This Blog

Feb 11, 2012

திருமந்திரம்-தந்திரம்01-பதிகம் 22:அன்பு செய்வாரைஅறிவன் சிவன் (பாடல்கள்:10)






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
விநாயகர் வணக்கம்....................................................................பாடல்கள்: 001
பாயிரம் : பதிக வரலாறு.............................................................பாடல்கள்: 039
முதல்தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்............................பாடல்கள்: 056
முதல்தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு. ...........................பாடல்கள்: 006
முதல்தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு...........................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்....................................பாடல்கள்: 030  
முதல்தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை ...........பாடல்கள்: 025
முதல்தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை .........பாடல்கள்: 009
முதல்தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை ............பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை.................பாடல்கள்: 030
முதல்தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை............................பாடல்கள்: 002
முதல்தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்............ ..........பாடல்கள்: 001
முதல்தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை .........பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு ...........................பாடல்கள்: 030 
முதல்தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு......................................பாடல்கள்: 005
முதல்தந்திரம்:பதிக எண்:14: அக்கினி காரியம்......................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்  ................பாடல்கள்: 014
முதல்தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை........................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:17: வானச் சிறப்பு.............................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:18: தானச் சிறப்பு ............................பாடல்கள்: 014
முதல்தந்திரம்:பதிக எண்:19: அறஞ்செய்வான் சிறப்பு ..........பாடல்கள்: 009
முதல்தந்திரம்:பதிக எண்:20: அறஞ்செயான் திறம் ...............பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:21: அன்புடைமை..............................பாடல்கள்: 014 முதல்தந்திரம்:பதிக எண்:22: அன்பு செய்வாரை அறிவன் சிவன் :பாடல்கள்: 009
=================================================================
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)
பதிகம் எண் :22.அன்பு செய்வாரை அறிவன் சிவன்
(10பாடல்கள்)


பாடல் எண் : 1
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 

பொழிப்புரை :  மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத் தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.
**************************************************
பாடல் எண் : 2
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. 

பொழிப்புரை :  முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.
**************************************************
பாடல் எண் : 3
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொழிப்புரை :  அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.
**************************************************
பாடல் எண் : 4
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே. 

பொழிப்புரை :  பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.
**************************************************
பாடல் எண் : 5
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொழிப்புரை :  அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார்களில்லை.
**************************************************
பாடல் எண் : 6
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 

பொழிப்புரை :  கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.
**************************************************
பாடல் எண் : 7
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 

பொழிப்புரை :  அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவ ரல்லது பிறர் அறியமாட்டார்.
**************************************************
பாடல் எண் : 8
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

பொழிப்புரை :  இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.
**************************************************
பாடல் எண் : 9
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. 

பொழிப்புரை :  இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
**************************************************
பாடல் எண் : 10
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 

பொழிப்புரை :  மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெருமானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெருமானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.
**************************************************








மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!