Search This Blog

Feb 8, 2012

திருமந்திரம்-தந்திரம்01:பதிகம்:15 அந்தணர் ஒழுக்கம் (பாடல்கள்:14)

`




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
விநாயகர் வணக்கம்......................................................................பாடல்கள்: 001
பாயிரம் : பதிக வரலாறு...............................................................பாடல்கள்: 039
முதல்தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்...........................பாடல்கள்: 056
முதல்தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு. ..........................பாடல்கள்: 006
முதல்தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு..........................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்....................................பாடல்கள்: 030  
முதல்தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை ..........பாடல்கள்: 025
முதல்தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை .........பாடல்கள்: 009
முதல்தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை ..........பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை.................பாடல்கள்: 030
முதல்தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை............................பாடல்கள்: 002
முதல்தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்............ .........பாடல்கள்: 001
முதல்தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை ........பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு ...........................பாடல்கள்: 030 
முதல்தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு......................................பாடல்கள்: 005
முதல்தந்திரம்:பதிக எண்:14: அக்கினி காரியம்......................பாடல்கள்: 010
முதல்தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்  ............பாடல்கள்: 014
=================================================================
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293)
பதிகம் எண் :15.அந்தணர் ஒழுக்கம் 
(14 பாடல்கள்)

பாடல் எண் : 01



அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 

பொழிப்புரை : ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.
****************************************************

பாடல் எண் : 02
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.


பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.
****************************************************


பாடல் எண் : 03
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 

பொழிப்புரை : அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.




****************************************************


பாடல் எண் : 04

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. 

பொழிப்புரை : பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.
****************************************************



பாடல் எண் : 05
சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. 


பொழிப்புரை : `பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்க தாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.
****************************************************

பாடல் எண் : 06

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே. 

பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையே யாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.
****************************************************

பாடல் எண் : 07 

நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

பொழிப்புரை : முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.

****************************************************

பாடல் எண் : 08

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. 

பொழிப்புரை : மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.
****************************************************

பாடல் எண் : 09

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 

பொழிப்புரை : ``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.
****************************************************

பாடல் எண் :10

மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 

பொழிப்புரை : அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.
****************************************************

பாடல் எண் : 11

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 

பொழிப்புரை : உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.
****************************************************

பாடல் எண் : 12

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

பொழிப்புரை :  நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.
****************************************************

பாடல் எண் : 13

தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * * 
பொழிப்புரை : இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.
****************************************************

பாடல் எண் : 14

பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
* * * * * * 
பொழிப்புரை :இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.
***************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!