Search This Blog

Feb 28, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:11/3.அட்டமா சித்தி (பாடல்கள்:51-71/71)பாகம்-III







பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்..........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:06: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி .................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
========================================================(136+021=157)

மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:11. அட்டமாசித்தி (பாடல்கள்:51-71/71)பாகம்-III

பாடல் எண் : 51
காமரு தத்துவ மானது கண்டபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம்
நாமரு வும்ஒளி நாயக மானதே. 

பொழிப்புரை :  ஈசத்துவ சித்தியிற்றானே, விரும்பத் தக்க மெய்ப் பொருட்காட்சி கிடைத்து விடுதலால், அதன்பின் எல்லா உலகமும், பூவினுள் அடங்கித் தோன்றும் மணம்போல உன்னிடத்தே அடங்கித் தோன்றும். அதனால் அவ்வுலகங்கட்கெல்லாம் வியாபகமாம் தன்மையைப் பொருந்திய உன்னிடத்தில், அவற்றிற்கெல்லாம் நீயே உண்மைத் தலைவனாய்நிற்க, புகழ்பொருந்திய அருள் ஒளியே தலைமைபெற்று நிற்கும்.
===================================================
பாடல் எண் : 52
நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டுபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. 

பொழிப்புரை :  சிவயோகியானவன் எல்லாவற்றுக்கும் தலைமை யான நல்ல திருவருள் ஒளியைக் கண்டபின் அதனையே தனக்கு உறைவிடமாகக் கொண்டு அதனிடத்தே இருத்தலல்லது, அவரவரது புண்ணியங்கட்கு ஏற்ப அவரவருக்கு உரியவாய் உள்ள உலகங்களிலே சென்று, அவற்றைக் கண்டு, பின், அவைகளில், காவல் மிகுதியால் அச்சத்தைத் தரும் தலைமை இடத்தில் வீற்றிருக்கின்ற அவற்றின் தலைமைக் கடவுளரைக் காண்கின்ற அச்செயலை விரும்புவானோ! விரும்பான்.
===================================================
பாடல் எண் : 53
பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. 

பொழிப்புரை :  பவயோகியர்க்குப் பெரும் பேறாய்த் தோன்றி விரிந்து விளங்குகின்ற, மேற்சொல்லிய உலகங்கள் எட்டனையும் தான் இருக்கும் நிலவுலகத்தோடு ஒத்தனவாகவே உணர்ந்து, அவற்றின் மேல் மனம் செல்லாது அடங்கிய சிவயோகி, இந்நிலவுலகம் முழு தினும் பொருந்தியுள்ள ஒன்றான ஒளியாகிய பிராண வாயுவின்வழிக் காணத்தக்க குண்டலி ஒளியைப் படிமுறையில் பெருகக் காண்பான்.
===================================================
பாடல் எண் : 54
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே. 

பொழிப்புரை :  பிராணவாயுவும், உயிரும் தம்முள் இயைந்த வாற்றைக் கூறுமிடத்து, பிராணவாயு, உடம்பில் உள்ள நாடிகள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சிவசத்தியுடன் முன்னர்ப் பொருந்திப் பின்னர், அஃது `ஐஞ்ஞூறு` என்றும், `பத்து` என்றும், `மூன்று` என்றும் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்ற நாடிகளில் நிறைந்து நிற்கும் வகையினாலேயாம்.
===================================================
பாடல் எண் : 55
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

பொழிப்புரை :  யாறு போல உண்டாகின்ற விந்துவாகிய அமுதத்தை உடைய ஆஞ்ஞையில் அந்த யாறு பாய்கின்ற வாய்க்கால்கள் ``ஆயிரமும், முந்நூறும், ஐந்தும்`` என்று கூறத்தக்க அளவில் உள்ளன. அந்த அரிய வழியிலே அந்த அமிர்த யாறு பெருகிப் பாயச் செய்து உடம்பை வளர்ப்பன இடை நாடி பிங்கலை நாடி என்னும் இருநாடிகளில் நிற்கும் இரு சத்திகளே யாகும்.
===================================================
பாடல் எண் : 56
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. 

பொழிப்புரை :  இடைகலை பிங்கலைகளின்மேல் சுழுமுனைத் தலையில் நிற்கும் சத்தி, இடையும், பிங்கலையுமாகிய இரண்டன் வழியாகப் பிராணனை இயக்கிச் செயல் புரிகின்ற முறையைச் சொல்லுமிடத்து, இரண்டாகிய அந்தப் பிராணன் ஆயிர நாடிகளோடும், ஐம்பத்தோர் அக்கரங்களோடும் கூடியுள்ள ஆறு ஆதாரங்களில் பொருந்தி, ஐந்து காலத்தைக் கொண்டிருக்கும் வகையிலேயாம்.
===================================================
பாடல் எண் : 57
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. 

பொழிப்புரை :  சதாசிவ மூர்த்தியின் சத்தி, பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களை ஏந்தி இருப்பவளாகக் கிரியாவான்கள் கருதுவர். ஆயினும், யோகத்தில் அவளை இரண்டாயிரம் கைகளில் இரண்டா யிரம் ஆயுதங்களை ஏந்தி நிற்பவளாகக் கூறலாம். அவள் மேற்கூறிய ஐந்து காலங்களிலும் தங்கி நின்று அருளுதல், உயிர் ஒன்றையேயாம்.
===================================================
பாடல் எண் : 58
ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. 

பொழிப்புரை :  தன்னோடு ஒப்பது ஒன்று இல்லாது, தானே தனிப்பொருளாய் நிற்கும் சத்தி, பொதுவில் இரு நாடிகள் இயக்கி நின்ற பிராணனை யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன்வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற தன்மையைச் சொல்லுமிடத்து, அவ்வொரு வெற்றிச் செயலே அளவற்ற வெற்றிச் செயலாய் அமையும்படி ஒரு காலத்துள்ளே உயிரை உயர்த்தி, அருளுதலைச் செய்வாள். ஆதலின், அவளையே நினை.
===================================================
பாடல் எண் : 59
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில்
முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. 

பொழிப்புரை :  உயிரோடு உடல் தொடர்பு பட்டபொழுதே தான் எழுந்து இயங்குகின்ற இடைகலை பிங்கலைகளின் தலைவியாகிய சத்தியைப் பற்றி நின்று இயங்குகின்ற பிராணவாயு, பின் முடிவுபெறும் வகையைச் சொல்லுமிடத்து, ஐம்பத்தோர் அக்கரங்களில், பிருதிவி காலம் முதலிய ஐவகைக் காலத்திலும் இயங்கி முடியும் வகையேயாம்.
===================================================
பாடல் எண் : 60
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. 

பொழிப்புரை :  ஆய்ந்துணர்தற்கு அரியவாகிய மேற்சொல்லிய சிவசத்தி, தன்னுடனாய் இயங்கிவருகின்ற பிராண வாயுவை வரையறை செய்யும் வகையைக் கூறுமிடத்து, இயல்பாக இயக்குகின்ற மூச்சு (சுவாசக்) கணக்கிலிருந்து, ஆராயவருகின்ற ஐந்நூற்று நாற்பது மூச்சு அழிந்தொழிய எஞ்சியவை வலிமையுற்று உள்நிற்றலாம்.
===================================================
பாடல் எண் : 61
இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே. 

பொழிப்புரை :  உயிர்களின் வாழ்நாளுக்கு முதலாய் உள்ள பிராண வாயு உயிர்கட்கு இருநிதி (சங்க நிதி, பதும நிதி) போல உதவுகின்ற இறைவனது திருவருளிடத்து இயங்கும் நிலை உண்டாயின், அஃது, `இருபத்தோராயிரத்து அறுநூறு` என்னும் கணக்கினை விட்டு, `இருநூற்று முப்பத்து எட்டு` என்னும் நிலையை அடையும்.
===================================================
பாடல் எண் : 62
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

பொழிப்புரை :  யோகக் காட்சியில் தோன்றுகின்ற ஒளியிடத்தில் அறியப்படும் சத்தியினது இடமாகிய ஆஞ்ஞையில் (சுழுமுனை வழியே) பிராணவாயு அடைவதனால் உளவாகும் நிலையைச் சொல் லுமிடத்து, மூலாதாரத்தில் உள்ள அக்கினி மேல் எழுந்து, எழுநூற் றிருபத்தொன்பது நாடிகள் இடையில் உள்ள நான்கு ஆதாரங்களிலும் தொடர்புபட்டு நிற்க, அவற்றின் வழி உடம்பெங்கும் பரவி நிற்கும்.
===================================================
பாடல் எண் : 63
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. 

பொழிப்புரை :  ஆறு ஆதாரங்கட்குமேல் ஏழாவதான உச்சி யளவும் பிராணவாயுவை ஏற்றியும் இறக்கியும் பயின்றால், ஆறு ஆதாரங்களிலும் தாரையாய்ப் பாயும்படி திருவருள் அமுதத்தை விளைத்து நிற்கும். இனி எட்டாந்தானமாகச் சொல்லப்படுகின்ற தலைக்குமேல் பன்னிரண்டங்குலம் பிராண வாயுவை நீக்கி நிற்றலால் ஆதார வேற்றுமைகள் நீங்கியபின், சுழுமுனையோடு மற்றை ஒன்பது நாடிகளிலும் பிராண வாயு ஒருதன்மைத்தாய் நிற்பதாம்.
===================================================
பாடல் எண் : 64
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே. 

பொழிப்புரை :  `சந்திரகலை` எனப்படுகின்ற இடநாடிக் காற்றும், `சூரியகலை` எனப்படுகின்ற வலநாடிக் காற்றும் சிவனது திருமுடியில் உள்ள சந்திரகலை எனப்படுகின்ற பரஞானமாகிய திருவருளும் ஒன்றாய் நிற்கின்ற தன்மையை, அனைத்து நாடிகளும் கூடுகின்ற இடமாகிய ஆஞ்ஞையிலே விளங்கக் கண்டு அத்திருவருளேயாகி நிற்பான், உலகியலை அறவே ஒதுக்கித் தள்ளிச் சிவசமாதி ஒன்றையே உடைய சிவ ஞான யோகியே.
===================================================
பாடல் எண் : 65
அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

பொழிப்புரை :  மனைவியைத் துறத்தல், மக்கள் முதலிய பிற சுற்றத்தையும் துறத்தல், சிவனை வழிபடுகின்ற நூல் அறிவு மிகுதல், வாய்வாளாதிருக்கும் சிவயோகிகள் அடைந்துள்ள பர சித்திகளை அவரிடம் கேட்டல், உலகியலின் தாக்குதலால் உள்ளம் திரிவுபடா திருத்தல், பிராணாயாமத்தை எளிதாகச் செய்தல்.
===================================================
பாடல் எண் : 66
மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே. 

பொழிப்புரை :  மூப்பு இறப்புக்கள் இன்மை, அருள் வெளியிற் கலந்திருத்தல், தன் முன்னோர்களைத் தனது நற்செய்கையால் நற்கதி பெறச் செய்தல், சிவனது திருவுருவைத் தான் பெறுதல் என்னும் பத்து இயல்புகளையும், கைப்பொருள் போன்ற கேள்வியால் யோகநூற் பொருளை நன்குணர்ந்தோன் பெறுவான்.
===================================================
பாடல் எண் : 67
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.

பொழிப்புரை :  ஆர்வத்தால் சிவனைக் காணுதற்பொருட்டுக் கடல் சூழ்ந்த உலகம் முழுதும் கால்கள் நோவ நடந்து சுற்றி வரினும் பயன் இல்லை. அது நிற்க, சிவனுக்கு மிக இனியவராகிய சிவயோகியரே அவன் இருக்குமிடத்தை அறிந்து காண்பர்.
===================================================
பாடல் எண் : 68
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 

பொழிப்புரை :  மகேசுரனுக்குக் கீழ் அயன், மால், உருத்திரன் என்னும் மூவரும் மூலாதாரம் முதலிய மூன்று ஆதாரங்களிலும் முறையே நிற்க, மகேசுரனுக்குமேல், `விசுத்தி, ஆஞ்ஞை, நா அடி, உச்சி, தலைக்குமேல் பன்னிரண்டங்குலம்` என்னும் இடங்களில் சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்போர் முறையே நின்று பயன் தருமாறு உயிர்களுக்கு அளித்த சத்தி, `பரை` எனப்படும் சிவனது திருவருளே.
===================================================
பாடல் எண் : 69
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே. 

பொழிப்புரை :  மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களையும் அவற்றில் உள்ள கடவுளரைத் தியான சமாதிகளால் வழிபட்டுப் பயன்பெறுமாற்றால் கடந்து, அவற்றிற்கு மேல் நிராதாரமாகிய உச்சிமுதற் பன்னிரண்டங்குலத்தை அடைந்து பரவிந்து பரநாதங் களின் அருள்பெற்று இவ்வாற்றால், மேதை முதலிய பிரணவகலை பதினாறும் கடக்கப்பட்டனவாய்விட, அதற்கு மேல், சொல்லவும், நினைக்கவும் வாராத மீதானமாகிய துவாதசாந்தத்தில் (பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால்) பரமசிவனை அடைந்து நிற்றலே ஆனந்த யோகமாகும்.
===================================================
பாடல் எண் : 70
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே. 

பொழிப்புரை :  சந்திர கலையாகிய இட நாடிக் காற்றும், சூரிய கலையாகிய வல நாடிக் காற்றும் ஒடுங்கிச் சுழுமுனையில் வந்து பொருந்தச் செய்து, வாசி யோகத்தில் நின்று, ஆதாரங்களில் உள்ள கடவுளரைப் போற்றுகின்ற பொது யோகிகள் மேலுலகத்தில் அவ்வக் கடவுளராய் நின்று இன்பம் நுகர்வர். சிவனை உணர்தலாகிய முறைமையில் வழுவாது நின்று, அருள் யோகம் ஆனந்த யோகங் களைச் செய்கின்ற உண்மை யோகிகட்கே, நிலையான வீடுபேற்றைக் காட்டும் பரமசிவன் முன்னிற்பான்.
===================================================
பாடல் எண் : 71
கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே. 

பொழிப்புரை :  பிராண வாயுவைத் தம்வழியில் இயக்குமளவே வல்லராய்ப் பவயோகம் கைவந்தவர் மருட் சித்திகளையே பெறுவர். ஆஞ்ஞையில் அருள் இன்பத்தைத் தருகின்ற அருள் யோகத்தைத் தலைப்பட்டு, பின் சுழுமுனைத் தலையை அடைந்த பிராண வாயுவால் அவ்விடத்தில் வடு உண்டாகத் தாக்கிப் பின்பு, அவ்வாயுவை மண்டை ஓட்டில் தீப்பொறி உண்டாகுமாறு மோதி, உணர்வை அசையாது நிறுத்திச் சிவனை அறியும் ஆனந்த யோகத்தில் நின்று சிவயோகம் கைவந்தவர்க்கு இறப்பு உண்டாகாது. (எடுத்த பிறப்பிலே வீடு உண்டாகும் என்பதாம்)
===================================================








மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

1 comment:

  1. திருமூலர் அருளிய அட்டாங்க யோகம் புத்தகம் தேவை. சென்னையில் எங்கு கிடைக்கும். தொடர்பு எண் தருக. எனது எண் 9962554348

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!