Search This Blog

Feb 3, 2012

திருமந்திரம்> பாயிரம்; பாடல்கள்:21-30/39: பகுதி-03




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்
பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்.
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: ..............................பாடல்கள்: 39 
பாயிரம்: பாடல்கள் 39 (மூன்றாம் பகுதி: 21- 30/39 )



பாடல் எண் : 21
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை

****************************************************
பாடல் எண் : 22
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை
****************************************************
பாடல் எண் : 23
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

பொழிப்புரை : மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.
****************************************************
பாடல் எண் : 24
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொழிப்புரை :  பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப் பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப்பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.
****************************************************
பாடல் எண் : 25
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

பொழிப்புரை : தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.
****************************************************
பாடல் எண் : 26
அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.
  

பொழிப்புரை :  உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப்படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல் களையும் கற்பாரின்றி வீணேகிடக்கவையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.
****************************************************
பாடல் எண் : 27
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொழிப்புரை :இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.
****************************************************
பாடல் எண் : 28
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொழிப்புரை :  இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெரு மானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.
****************************************************
பாடல் எண் : 29
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றிநின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்திநிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 30
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

பொழிப்புரை :  பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறை விடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இரு காற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும் படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.
***************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!