Search This Blog

Jan 20, 2012

பத்தாம் திருமுறை:திருமந்திரம்: பன்னிருதிருமுறைகள்.


2.4 பத்தாம் திருமுறை : திருமந்திரம்:

திருமூலதேவநாயனாரின் திருமந்திரமாலை, திருமந்திரம் என்ற பெயரால் வழங்கப்படும். இந்நூல் சைவத் திருமுறைகளுள் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது.     தமிழ் மொழியில் பெருஞ் சிறப்புக்கு உரிய முதன்மையான நூல்களைத் தொகுத்து உரைக்கும் ஒரு பழம்பாடல் உள்ளது. அதில் திருமந்திரமும் இணைக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்பிற்குச் சான்று கூறி நிற்கிறது. சைவ ஆகமங்களின் சாரமாகத் திகழும் இந்நூலை, தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். 

திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. ஆகமங்கள் 28, அவற்றுள் ஒன்பதின் சாரமாக 9 தந்திரங்கள் அமைந்துள்ளன. அந்த ஆகமங்கள் வருமாறு: காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பன.

தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே...
 

 
என்ற சிறப்புப் பாயிரப்பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டுள்ளது.
 
2.4.1 திருமூலர் - வரலாறு:
 
 
திருமூலர் திருமூலர் கோயில்
திருமூலர் வரலாறு குறித்தும் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் பெரியபுராண நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். இவர் வரலாற்றைப் சேக்கிழாரின் பெரியபுராணமும் எடுத்துரைக்கிறது.  வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த முனிவர் ஒருவர் மாடு மேய்க்கும் ஓர் இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மூலன் எனப் பெயர் பெற்றார். திருவாவடுதுறையில் யோகத்தில் பலகாலம் இருந்து இத்திருமந்திர மாலையை  உலகுக்கு வழங்கினார். (வாழ்கை வரலாறு குறித்து மேலதிக தகவல்கள், தனிப் பதிவில் விரிவான பதிவாக  வெளியிடப்படும்) 

திருமூலரே .........

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே..
(திருமந்திரம் : 81)
 
என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.  
  
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...(திருமந்திரம் : 147)
என்ற அரிய தொடர் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.  
  
2.4.2 விநாயகர் காப்பு:
 
திருமந்திரத்தின் முதல் தந்திரம் முதல் ஒன்பதாவது தந்திரம் வரையிலான ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சமய உண்மையை நுட்பமுற எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. முன்னதாக அமைந்துள்ள பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேத ஆகமங்களின் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இந்நூல் விநாயகர் காப்பு ஒன்றுடன் தொடங்குகின்றது.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே
....
(திருமந்திரம் விநாயகர் காப்பு)

(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்). என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவபெருமானின் பெருமை பேசும் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள்அறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் 
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. ..(திருமந்திரம் : 8)
   

(வெய்யன் = வெப்பம் மிக்கவன், தண்ணியன் = குளிர்ச்சியானவன். அணியன் =அடியவர்க்கு நெருக்கமானவன்). சிவனின் மேலான கருணைத் திறத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும் மக்கள் அவன் கருணையை முழுவதும் உணர்ந்து வழிபட்டு வாழ்வு பெற்றிலர் என்ற திருமூலரின் மன வருத்தம் இப்பாடலில் பதிவாகியுள்ளது.

2.4.3 வேத ஆகமச் சிறப்பு:
 
வேதம், ஆகமம் என்ற இரண்டு நூல்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். இரண்டுமே இறைவனிடமிருந்து வந்தவை: வேதம் பொது; ஆகமம் சிறப்பு என்பதும் அவர் கருத்து. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல்கள் வந்தன என்பதைக் குறிக்கிறது. ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது. 
2.4.4 திருமந்திரம்; தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்:

தந்திர வரிசை ஒன்றில் : உபதேசம், யாக்கை நிலையாமை, கொல்லாமை மேலும் கல்வி மற்றும் கள்ளுண்ணாமை ஆகியவை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை இரண்டில்: சிவனின் எட்டுவகை வீரச்செயல்கள், ஐந்தொழில்கள், சிவனையும் குருவைக் குறித்தும், மேலும் நிந்திப்பதால் வரும் துன்பங்களை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை மூன்றில்: யோகக் கலைகள் மற்றும் அஷ்டமா சித்திகளை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை நான்கில்: திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவ மந்திரம் ஆகியவைகளை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை ஐந்தில்: இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்: மற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம் ஆகியவைகளை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை ஆறில் : குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை ஆகியவைகளை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை ஏழில்   :ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம் ஆகியவைகளை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை எட்டில்:பக்திநிலை, முக்திநிலை ஆகியவைகளை உள்ளீடுகளாகவும்,

தந்திர வரிசை ஒன்பதில்: நுண்பொருள் விளக்கம் (சூனியசம்பாஷணை) ஆகியவைகளை உள்ளீடுகளாகவும்... அமையப் பெற்றுள்ளது. 
2.4.5 திருமந்திரம் - அரிய தொடர்கள்:

திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக் கெல்லாம் அறத்தையும், ஆன்ம ஈடேற்றத்தையும், மருத்துவக் கூறுகளையும் எடுத்து உரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிய பாடல் பகுதிகள் திருமந்திரத்தின் சிறப்புக்குக் கட்டியம் கூறி நிற்பன.
 
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்....(பாடல்-2104)  
************************************************
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை....(பாடல்-5)  
************************************************
ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்....(பாடல்-250)  
************************************************ 
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
......(
பாடல்-534)  
************************************************ 
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்....
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.....(
பாடல்-724) 
************************************************
குருவே சிவம்எனக் கூறினன் நந்தி............(பாடல்-1581) 
************************************************ 
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்........(.பாடல்-1726) 

(நந்தி = இங்கே சிவபெருமானைக் குறிக்கும், ஆக்கை - உடல்)இவைபோன்ற நூற்றுக்கணக்கான அரிய தொடர்கள் திருமந்திரத்துள் இடம்பெற்றுள்ளன.
 

2.4.6 அன்பே சிவம்:
 
திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையா மையையும் எடுத்துரைத்துள்ளனர். சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. 

அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.
 
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
........
(திருமந்திரம் : -270) 

 என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.
 

2.4.7 மரமும் யானையும்:
 
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது.

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.
 
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
...
(திருமந்திரம் : -2290)
 
இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.
 

2.4.8 மனிதநேயப் பரிவு:
 
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும்,  நுகர் பொருள் களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. 

ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை.
 
அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.
 
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே
...
(திருமந்திரம் : -1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்).

அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
 
2.4.9 வாழ்வியல் உண்மைகள்:

இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக மனிதர்களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்ற துணை. 

மிகுந்த காமமும் கள்ளுண்டலும் கீழோர் என்று அடையாளம் காட்டும். விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, (வியப்பாக உள்ளதா? திருமந்திரம் பாடலில் இவ்விவரம் தரப்பட்டுள்ளது: பாடல் எண்-482) குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை முதலான பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.
======================================================================================


முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் 
விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக! காணவிருப்பது பதினோராம் திருமுறை!!! அன்புடன் கே எம் தர்மா... 



No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!