Search This Blog

Jan 29, 2012

பன்னிரெண்டாம் திருமுறை: பெரிய புராணம் (பகுதி-1)




பெரிய புராணம்:
முன்னுரை:
இப்பதிவு பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது. இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும் சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது. பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை இப்பதிவில் காணலாம். தொகையடியார், தனியடியார் ஆகியோரின் அறிமுகமும் இப்பதிவில் கிடைக்கிறது. 



சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம் பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வதையும் சமூக நோக்குடைய காப்பியமாக விளங்குவதையும் இப்பதிவு சுட்டிக் காட்டுகிறது. சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார், திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப் பெண் தொண்டர்களையும் இப்பதிவு அறிமுகம் செய்கிறது.
 
சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது பெரியபுராணம். இதனைத் திருத்தொண்டர் புராணம் என்றும், திருத்தொண்டர் மாக்கதை என்றும் கூறுவர். இதன் ஆசிரியர் சேக்கிழார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு, பெரிய புராணம் ஒரு பெருங்காப்பியமாக அமைக்கப்பட்டுள்ளது. 



இரண்டு காண்டங்களையும் 13  சருக்கங்களையும், 4287 விருத்தப்பாக்களையும் இந்நூல் கொண்டுள்ளது. 63 தனியடியார்கள் வரலாறுகளும், 9 தொகையடியார்களது சிறப்புகளும் இந்நூலுள் விரித்துரைக்கப்படுகின்றன. சமய - சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இந்நூல் ஆற்றியிருக்கும் பெரும்பங்கு கருதி ஒரு தனிப் பதிவாகப் பெரியபுராணச் செய்திகள் இங்கே விரித்துரைக்கப்படவுள்ளன.
 
அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள்: 



பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்கு உரிய சிறப்பிடத்தையும், அதன் தனித்தன்மையையும் உள்ளவாறு இனம் காணலாம். தனித்தனி அடியவர்  வரலாறுகளை ஒரு பெருங்காப்பியமாக உருவாக்கியிருக்கும் நூலாசிரியர் சேக்கிழாரின் படைப் பாற்றலைச் சுட்டிக் காட்டலாம். உணர்வுக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்டிருந்த பக்தி அனுபவத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து படிப்பவர்களுக்கு அவ்வனுபவத்தைக் கிடைக்கச் செய்யும் பெரியபுராணத்தின் பெருஞ்சிறப்பினை இனங்கண்டு போற்றலாம். இறைவனுக்கு நிகராக, அவன் அருள்பெற்ற அடியார்களையும் ஒளியூட்டும் போதே ஒரு சமயம் புதிய மறுமலர்ச்சி அடையும் என்ற உண்மையை அடையாளம் காணலாம்.
 

பெரியபுராணம் ஏறத்தாழ ஓர் ஐந்நூறு ஆண்டுக்கால வரலாற்றுக்கு ஒளியூட்டும் - வரலாற்றுக் கருவூலம் என அதன் சிறப்பினைப் பகுத்துக் காணலாம். தமிழர் வாழ்வியல், பண்பாடு, தனி மனிதப் பண்புகள், பிறர்க்குத் தொண்டு செய்து மகிழ்தல் முதலிய பண்பாட்டுப் பதிவுகளைத் தொகுத்துக் காணலாம். பெண்மை பெரியபுராணத்தில் பெற்றிருக்கும் சிறப்பிடத்தையும், சைவத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளையும் அடையாளங்கண்டு பட்டியலிடலாம். தமிழ்ச் சைவ வரலாற்றில் பெரியபுராணம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை இனங் காணலாம்.

4.1. நூலாசிரியர் - சேக்கிழார் :

பெரிய புராண நூலாசிரியர் சேக்கிழார். தொண்டை நாட்டில் குன்றத்தூரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தில் ‘சேக்கிழார்’என்ற குடியில் வந்தவர். இயற் பெயர் அருண்மொழித் தேவர். இவர் அநபாயன், அபயன், திருநீற்றுச் சோழன் முதலிய பட்டப் பெயர்களை உடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதல் அமைச்சராகத் திகழ்ந்தவர். சோழன் இவருக்கு ‘உத்தம சோழப்பல்லவன்’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தான். அக்காலத்தில் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற சமண நூலில் சோழன் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். மன்னனைச் சைவ நாட்டம் உடையவனாக மாற்றச் சிவன் அடியார் வரலாறுகளைச் சேக்கிழார் பெரிய புராணமாக இயற்றினார். 

4.1.1 தொண்டர் சீர்பரவுவார்: 

 
சேக்கிழார் சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்றுத் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கி நின்றார். தில்லை அம்பலவன் ‘உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தான். அதனையே முதலாகக் கொண்டு,

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்



என்ற வாழ்த்தை முதலாக அமைத்துக் கொண்டு ‘திருத்தொண்டர்  புராணத்’தை இயற்றி, சோழன் முன்னிலையில் இந்நூல் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிறைவில் சோழன் சேக்கிழாரையும், பெரிய புராணத்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி வீசி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமை சேர்த்தான்.  ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தான். பின்னர் சேக்கிழார் தில்லையிலேயே தவம் செய்து வந்தார். இவர் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர்.

4.1.2 சேக்கிழார் புராணம்:


சேக்கிழார் வரலாற்றையும், பெரியபுராணத் தோற்றத்தையும் விரித்துரைக்கும் செய்யுள் நூல் ஒன்று தமிழில் உள்ளது. இந்நூலுக்குச் ‘சேக்கிழார் புராணம்’ என்று பெயர். இதனை, ‘திருத்தொண்டர் புராண வரலாறு’என்றும் கூறுவர். இதனைத் தில்லை உமாபதி சிவாசாரியர் என்பவர் இயற்றியதாகக் கூறுவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமது சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்பாடிய கவி வலவ...    என்று சேக்கிழாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
 
4.2 பெரியபுராணம்:


பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாகப் பெரியபுராணம் இயற்றப் பட்டுள்ளது. பெரியபுராணத்தின் முதல் நூல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்பது முன்னரும் கூறப்பட்டது. எனவே, சிவனடியார் வரலாறுகளைத் தொகுத்துத் தந்த சுந்தமூர்த்தி சுவாமிகளையே காப்பியத் தலைவராகச் சேக்கிழார் கொண்டுள்ளார். 

காப்பியத்தின் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடத்தும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாற்றை விரித்துரைத்து, இடையிடையே அவரால் போற்றி வணங்கப்பட்ட அடியவர்கள் வரலாறுகளையும் விளக்கி உரைத்து, மிக நுட்பமாக இப்பெருங்காப்பியத்தைச் சேக்கிழார் படைத்தளித்துள்ளார். காப்பியக் கதை கயிலாயத்தில் தொடங்கி மீண்டும் கயிலாயத்தில் கொண்டு போய் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இவ் அமைப்பு சேக்கிழாரின் காப்பியப் புனைவிற்குச் சான்று கூறி நிற்கிறது.

4.2.1 காப்பியப் பகுப்பு :


பெரியபுராணம் காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப முதற்காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. நூலின் உட்பிரிவைச் சேக்கிழார் ‘சருக்கம்’என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். முதல் காண்டத்தில் 5 சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் 8 சருக்கங்களும் இடம் பெற்றுள்ளன. திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள 11 பாடல்களின் தொடக்கமே சருக்கங்களுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளன. 

உதாரணமாகத் திருத்தொண்டத் தொகையின் முதற்பாடல் ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கியுள்ளதால், அப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியார் வரலாறுகளை விரித்துரைக்கும் பகுதிக்குத் ‘தில்லை வாழ் அந்தணர் சருக்கம்’என்றே ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். முதல் சருக்கமாகக் கயிலாய மலைச் சிறப்புரைக்கும் ‘திருமலைச் சருக்கத்'தையும் இறுதியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் சென்றடைந்த செய்திகளைக் கூறும் ‘வெள்ளானைச் சருக்க’த்தையும் அமைத்துக் கொண்டார்.

நூல் அமைப்பு:-



4.2.2 யாப்பமைதி:

சேக்கிழாரின் பெரியபுராணம் முழுவதும் அக்காலத்தில் பெருவழக்கில் இருந்த யாப்பு முறைகளையே பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. கீழ் வரும் பட்டியல் யாப்பமைதியைக் எடுத்துரைக்கும். 

யாப்பு வகை:
1 .  அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்..  1805  பாடல்கள்.
2 .  எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்...      75  பாடல்கள்.
3 .  எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்...  280  பாடல்கள். 
4 .  தரவு /கொச்சகக் கலிப்பா                                    ... 1207  பாடல்கள்.  
5 .  கலி நிலைத் துறை                                                   ...   545  பாடல்கள்
6 .  கலி விருத்தம்                                                               ...   368  பாடல்கள். 
7வஞ்சி விருத்தம்                                                          ...        6  பாடல்கள். 
மொத்தம் .....பாடல்கள் .................................................... 4286  பாடல்கள்.  
=================================================================
முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக !!! அன்புடன் கே எம் தர்மா...

1 comment:

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!