Search This Blog

Dec 10, 2011

நற்றிணை, ஐங்குறுநூறு: பதினெண் மேற்கணக்கு தொகை நூல்கள்

 
பதினெண் மேற்கணக்கு: எட்டுத்தொகை
1) ஐங்குறுநூறு, 2)அகநானூறு, 3)புறநானூறு, 4)கலித்தொகை, 5) குறுந்தொகை, 6)நற்றிணை, 7)பரிபாடல், 8)பதிற்றுப்பத்து.
எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது. 

இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.  எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லை யாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
இவற்றுள், அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.  அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடல் வேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.


***********************************************************


நற்றிணை (தொகை நூல் 01)

நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவ்ல் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றினை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுதவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.

பாடியோர்:

குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை.இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.

நற்றிணைக் காட்டும் வாழ்க்கை:

நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவை சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிற்ந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.

எடுத்துக் காட்டுப் பாடல் 1 
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே...நற்றிணை பாடல் 28 - முதுகூற்றனார்.

பாடல்: 2
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே! ......(நற்றிணை பாடல் -172)
***********************************************************************


ஐங்குறுநூறு: (தொகை நூல் 02)

எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.

பாடியோர்: 

மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார், நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார், குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர், பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார், முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்: ஆகியோர் பாடியுள்ளனர். இதனைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்". தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை".

நூலின் அமைப்பு: 
எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும். நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, நெய்யோப் பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும், பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன . மேலும் தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது. அன்னாய் பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. விலங்கு, பற்வைகளைப் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து அகிய பெயர்களும் அமைந்துள்ளன.

குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன. உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன.
சங்க இலக்கியத்தின் ஊடாக மேலும் பயணிப்போம்!! அன்புடன் கே எம் தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!