Search This Blog

Dec 22, 2011

சிவவாக்கியம் (316-320) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (316-320)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -316
உறங்கில் என் விழிக்கில் என் உணர்வு சென்று ஒடுங்கில் என்
சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றில் என்
புறம்புமுள்ளும் எங்கணும் பொறுந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே.  

உறங்கினாலும் விழித்தாலும் உணர்வு சென்று அறிவில் ஒடுங்கி இருந்தாலும் சிறந்த ஐம்புலன்களையும் அடக்கி எல்லாத் திசைகளும் ஒன்றென ஒன்றி இருந்தாலும் புறத்திலும் உள்ளிலும் பார்க்கும் இடம் எங்கணும் ஒரே மெய்ப்பொருளாக பொருந்தி இருப்பதை அறிந்த ஞானிகள், தங்கள் தேகத்திலே அம்மெய்ப்பொருளே சிவமாக இருப்பதை உணர்ந்து அதைத் தவிர வேறு எதையும் நினைப்பது இல்லையே. அதுவே சிவம் என நினைந்து தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -317
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே
ஏதுமன்றி நின்ற தொன்றை யான் உணர்ந்த நேர்மையே.
தேவாரம், திருவாசகம், வேதம் போன்றவைகளை ஓதுவார்கள் ஓதி சொல்லும் ஓர் எழுத்தான சிகாரமாய் நின்ற ஒன்றே அது. வேத மந்திரங்களைப் போல் வெளிப்படையாக சொல்லக்கூடாதது இது. விந்த நாதமும் ஒளியும் ஒலியும் ஒன்றாகி நின்றது அது. பிரம்மா விஷ்ணு நான் என்ற சிவன் ஆகிய மூவரும் உள்ள ஒன்று அது. ஒன்றுமில்லாத வெட்ட வெளியாகி நின்ற ஒன்றான பரம்பொருளை அறிந்து உணர்ந்து என் உள்ளத்தில் நேர்மையாக நினைத்து தியானித்து யான் உணர்ந்து கொண்ட அதுவே மெய்ப்பொருள்.    
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -318
பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாது மாதுளையதாம்
அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே. 
  
உலகில் பிறக்க உருவாகும் உயிர் புண்டரீகம் எனும் தாமரையாக விளங்கும் ஆக்யாயத்தலத்திலே நினைவிலேயே தங்கி கருவாகி உரு தரித்து சுக்கில சுரோணித கலப்பாகி இருந்து உடம்பாக வெளிவந்தது. ஈசனான சோதியே சிகார வடிவு கொண்டு ஒரேழுத்தாகி குருவாக கோலம் கொண்டது. அதுவே மெய்யாகிய உடம்பில் உயிராகவும், ஒளியாகவும் விளங்கும் உண்மையான குரு என்பதை அறிந்துருங்கள்.
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 319

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்த வாறது எங்கெனில்
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்ச பூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.
 
  . 
மண்ணில் மனிதராக தோன்றிய உயிரும் விண்ணில் உள்ள மும்மூர்த்திகளும் வந்து தங்கியிருப்பது எங்கு எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளுங்கள். கண்ணில் காணும் ஒளி போல கலந்திருந்த விந்து நாதம் உடலும் உயிருமாகி அவ்வுயிரிலேயே சிவனும் சக்தியுமாகி அஞ்சு எழுத்துக்களும் பஞ்சபூதங்களும் சேர்ந்து பண்பாக உருவாகி வளர்ந்து இப்பூமியிலும் புவனங்கள் ஏழிலும் பிறந்தும் இறந்தும் மீண்டும் பிறந்தும் உழன்று வருவதை இன்றாவது உணர்ந்து மீண்டும் பிறவா நிலை பெற்று இறைவனை அடைய முயலுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 320
ஒடுக்குகின்ற சொதியும் உந்தி நின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து  காலில் ஏறியே
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடித்து நின்று அறிமினோ அனாதி நின்ற ஆதியே.
  . 
அனைத்தையும் ஒடுக்கி இருக்கின்ற சோதியான ஈசனை அடைய உந்திக்கமலமான மணிப்பூரகத்தில் நின்ற விஷ்ணுவையும் நடுவாகிய உடம்பில் சுவாதிஷ்டானத்தில் உள்ள பிரம்மனையும் அறிந்து வாசிக்காலால் வணங்கி இரண்டையும் விடுத்து மேலேறி அனாகத்தில் ருத்திரனையும் விசுத்தியில் மாகேசுவரனையும் ஆஞ்ஞாவில் சதாசிவனையும் அறிந்து வாசியை மேலேற்றி தியானத்தில் நின்று அனாதியாக உள்ள ஈசனை உணர்ந்து உங்கள் உடம்பிலும் உயிரிலும் ஆதியாக உள்ள மெய்ப்பொருளை அறிந்து கொண்டு அறிவு உணர்வு நினைவு என மூன்றையும் அதில் ஒன்றிணைத்து தவம் புரியுங்கள்.  


***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

1 comment:

  1. இதன் பின்னர் சிவவாக்கியம் 321 லிருந்து பார்க்க கிடைக்கவில்லை. எப்படிப் பார்க்கலாம்?

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!